திங்கள், 18 டிசம்பர், 2023

என்னை நேசித்தவள் -12

அடுத்த நாள், காலை பதினொரு மணிக்கு நான் மிகுந்த சோர்வுடன் ஆஸ்பத்ரியில் இருந்த என் தங்கையிடம் போய் அவள் பணத்தை கொடுத்தேன்.


''ஏதுடா பணம் ??'' என்று லேசான வியப்புடன் கேட்டாள், ''வண்டிய வித்துட்டியா.. ??''


நான் வண்டியை விற்றாலும் அதில் அவளுக்கு எந்தவிதமான வருத்தமும் இருக்கப் போவதில்லை. மகிழ்ச்சிதான்.


'' நான் என்ன பண்ணா உனக்கென்ன? உன் பணம் உனக்கு வந்தாச்சில்ல.. அதை மட்டும் பாரு..'' என்றேன்.


'' அடப் பாவி.. நான் என்னமோ பணத்துக்கு ஆசைப் பட்டு உன்னை கேவலப் படுத்துன மாதிரி பேசுற..? பாரும்மா இவனை..?'' என்று அவள் என் உடன் பிறந்த பாசக் காரியாக மாற.. அம்மாவும் அதையே வழிமொழிந்தாள்.


என் கண் முன்னால் நடந்த அந்த நாடகம் எனக்கு கசப்பையே கொடுத்தது. 


அந்த நேரத்தில் நான் நன்றியுடன் நினைத்துக் கொண்டது சத்யாவை மட்டும்தான்..!!


அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மதியம் எனக்கு போன் செய்தாள் சத்யா.


"ஹாய் சத்யா" 


"பிஸியா இருக்கீங்களா?" எனக் கேட்டாள். 


"ஆமா.. உலகமகா பிஸி.. இந்த பிரபஞ்சத்தை சுத்திவிட்டுகிட்டிருக்கேன். நான் சுத்தலேனா அப்பறம் இந்த பூமியோட சுழற்சி நின்னு போயிரும்.. பூமி சுத்தறது நின்னுருச்சுனா இதுல இருக்க ஜீவராசிகள் எல்லாம் அழிஞ்சு போயிரும்.. நாம உட்பட.."


சிரித்து விட்டாள். 

"ஒரு முக்கியமான விசயம் சொல்லத்தான் கூப்பிட்டேன்"


"முக்கியமே இல்லாத விசயமா இருந்தாலும் நீ கூப்பிட்டிருக்கலாம்.. நான் அவ்ளோ பெரிய.."


"போதும்" சட்டென இடைவெட்டினாள். 


"சரி.. போதும்.. என்ன சொல்லு?"


"எங்கம்மாகிட்ட சொல்லிட்டேன்"


"என்னது?"


"எனக்கு இப்ப பாத்திருக்கற மாப்பிள்ளை வேண்டாம்.. எனக்கு நிருவை பிடிச்சுருக்கு.. அவரையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு"


எனக்கு திக்கென்றிருந்தது. 

"ஓஓ"


"இன்னிக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் பண்ணாங்களாம்.. அவங்களுக்கு எல்லாம் ஓகேனு.. அதான்.. அது வேண்டாம்னு சொல்லிட்டேன்"


"ஓஓ.. உங்கம்மா என்ன சொன்னாங்க?"


"ஒண்ணும் சொல்லல.. ஆனா என் முடிவை உறுதியா சொல்லிட்டேன்"


"உன்னை திட்டலயா?"


"இல்ல.. ஆனா லவ் பண்றிங்களானு கேட்டாங்க.."


"நீ ஆமானு சொன்னயா?"


"இல்ல.. இது லவ் இல்ல.. புடிச்சிருக்கு.. அவ்வளவுதான்னு சொல்லிட்டேன்"


"ஏன்.. லவ் பண்றேனு சொல்லிருக்கலாமில்ல?"


"அப்படி சொன்னா மொதவே ஏன் சொல்லலேனு கேப்பாங்க. ஒரே நாள்ள நாங்க முடிவு வாழவே தொடங்கிட்டோம்னு சொன்னா.. செருப்புல போடுவாங்க.. பரவால்லயா?"


"அது வேறயா? நமக்கு செருப்படி புதுசில்லேனு வெய்.. ஆனா.. உன்னை சீப்பா நெனச்சுருவாங்க இல்லையா? சரி.. இப்ப நான் என்ன பண்ணனும்?"


"எங்கம்மா உங்ககிட்ட பேசினா என்ன சொல்லணும்னு நான் சொல்லணுமாக்கும்?"


"இல்ல.. நான் ஏதாவது ஒண்ணு சொல்லப் போயி.."


"சொல்லுவீங்க.. சொல்லுவீங்க.. பல்லை பேத்துருவேன்"


"அப்படியா.. அய்யய்யோ.."


நாங்கள் இருவருமே சிரித்து இயல்பாக்கிக் கொண்டோம்.


மறுநாள் காலை சத்யாவின் அம்மா என்னிடம் பேசினாள். 


"நேத்து லேட்டாதான் வந்த போலருக்கு நிரு?"


"ஆமாங்க.." உள்ளே மெலிதான ஒரு நடுக்கம் எழுந்தது. 


"அம்மா எப்ப வீட்டுக்கு வருவாங்க?"


"வந்துருவாங்க.. நாலு நாளைக்குள்ளே.."


"அதுக்கு முன்ன உன்கிட்ட ஒண்ணு பேசணும்"


"சொல்லுங்க?"


"இவ இருக்காளே" என ஆரம்பித்து மாப்பிள்ளை வீட்டர் வந்து போனதையும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதையும் சொன்னாள். அதன்பின் இறுதியாக,

"ஆனா அவ இப்ப பாத்து ஒரு குண்டை தூக்கி போட்டுட்டா" என்றாள். 


"என்னது?" தெரிந்ததுதான் என்றாலும் தயங்கிக் கேட்டேன். 


"அவளுக்கு உன்னை புடிச்சிருக்காம்.. அதை இப்பதான் சொன்னா.."


நான் தலையை ஆட்டிவிட்டுச் சொன்னேன். 

"அம்மா வரட்டுங்க.. பேசுங்க.. உண்மைய சொன்னா சத்யா என்னை விரும்பினா அது என்னோட லக்.. மத்தபடி எனக்கு பிக்கல் புடுங்கல் நெறைய இருக்கு.. அதனால.."


"அவளும் சொன்னா.. நீ இப்படித்தான் சொல்வேனு.. உங்களுக்குள்ள ஏதாவது ஜாடைமாடையாகூட பேசிக்காமயா இருப்பீங்க? சரி.. உங்கம்மா வரட்டும்.. நல்லதா பேசி முடிவு பண்ணிக்கலாம்.."


"சரிங்க.."


அப்புறமென்ன.. ?? 


சத்யா கேட்டாள்.

"எங்க அம்மாகிட்ட என்ன சொன்னீங்க?"


"என்னத்த சொல்ல..? என் தலையெழுத்து அதுதான்னு இருந்தா அதை என்னை படைச்ச ஆண்டவனாலகூட மாத்த முடியாதுங்களேனு சொன்னேன்.. என்ன சரிதானே..?" நான் சிரிக்க..


அதுக்கு மேல என்ன நடந்துருக்கும்னு நீங்களே யோசிச்சுக்குங்க.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!