நீ இல்லா நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீ இல்லா நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூலை, 2019

நீ இல்லா நேரம்- 1

  வணக்கம் நண்பர்களே.. !!

நான் எழுதிய  நூறாவது கதை.. இது.. !! நூறாவது கதை என்பதால்.. சற்றே மாறுபட்ட கோணத்தில்.. எனக்கு பிடித்தமான விதத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கேன்.. !!

இந்தக் கதை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.. !! உங்களது கருத்துக்களை தவறாது பதிவிடுங்கள்..!!

-நன்றி.. !!




ஓஷோவின் சென் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்து போயிருந்தாள் சௌம்யா.. !!

 சென் சூத்திரங்கள் பற்றிய விளக்கம்.. மிகவும் அற்புதமாக இருந்தது..!! 

பனிப் பிரதேசத்தில் பூத்துக் குலுங்கும் ஒரு புதிய மலரின் இனிய பரவசம் அவளை ஆட்கொண்டது..!! பனி மழையில் நனைந்து மனமே சில்லிட்டுப் போனது போன்ற  புத்துணர்வு..!!

புத்தம் புதிய மலரின்.. மெல்லிய மடலில்.. புள்ளி புள்ளியாய் பொழிந்து கொண்டிருக்கும் பனித்துகள் போல.. அவளது ஆத்ம மலரை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. அவளை ஆட்கொண்ட அந்த தெய்வீக உணர்வு.. !!

நரம்பு மண்டலங்களில் படர்ந்த.. பஞ்ச பூதங்கள் அவளது உடம்பை.. ஒரு சிறு துகளாக மாற்றி மிதக்க வைத்துக் கொண்டிருந்த... அந்த ஆன்ம உணர்வில்.. நிரம்பிப் போய் ஆழ்ந்து இருந்தவள்.. வீட்டின் முன்.. ஒரு ஆட்டோ படபடத்துக் கொண்டு வந்து நின்றதையோ.. அதிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு.. திடீரென ஒரு நாள் வீட்டை விட்டு போன.. அவளது உடன் பிறந்த அண்ணன் லக்கேஜுடன் இறங்கியதையோ.. அவள் கவனிக்கத் தவறியிருந்தாள்..!!

''ஏய்.. சௌமி.. அப்படி என்னடி படிச்சிட்டிருக்க..??'' என்ற குரல் கேட்டு.. தன் ஆன்ம பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள்.. உடலின் பொருட்டு.. சௌமியாக உணர்ந்தாள்..!!

தன் தோளைத் தொட்டு.. கலைத்தது யாரென பார்த்தாள் சௌமி.

 கையில் குழந்தையுடன் கௌரி நின்றிருந்தாள்..!!

அவளது கண்கள் சௌமியின் கையில் இருந்த புத்தகத்தை வருடிப் போனது.!

 கௌரியின் பக்கத்தில்.. உதட்டில் தவழும் புன்னகையுடன் நின்றிருந்தவனை பார்த்த.. அடுத்த நொடியே.. சடாரென எழுந்தாள்.

''அண்ண்ண்ணா...!!''

''சௌமி..!! எப்படி டா இருக்கே..??'' கண்களிலும்.. குரலிலும் அன்பும் பாசமும்.. ஏக்கமும் தவிப்பும் பொங்க கேட்டான் அவளது அண்ணன் பூந்துகில்..!!

''நான்' அப்படியேதான் இருக்கேன்.. உன் தங்கை சௌமிதான் நல்லா வளந்துட்டா..!!'' பக்கத்தில் போய் அண்ணன் கையை பிடித்தாள். ''நீ எப்படி இருக்கே..??''

''நான் நல்லாருக்கேன் சௌமி..!! நீங்க எல்லாம்..?? நீ எப்படி வளந்துட்ட..??'' தன் தங்கையின் அழகான வளர்ச்சியைப்  பார்த்து பரவசமடைந்தான்.

சிரித்தாள்.
''ஸாரிண்ணா.. உன்னை வரவேற்க.. இப்ப அப்பா இல்ல.. அம்மா இல்ல...!! நான் மட்டும்தான் இருக்கேன்..!! அப்பறம் நம்ம கௌரி அக்கா.. இந்த செல்லக் குட்டி.. சுருதி..!!''

''பரவால்ல..!! அப்பாம்மால்லாம்.. எங்க போனாங்க..??''

''அப்பா.. இன்னும் அதே பேங்க்தான்..!! காலைலயே போய்ட்டார்..!!''

''அம்மா..??''

''அம்மா.. டூ லேட்..!! இந்த மண்ணுலகை விட்டே போயாச்சு..!!'' என்று  அவள் மிகவும்  இயல்பாக  சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அந்த செய்தி அவனுக்கு பலமான அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்..!!


''வாட்.. அம்மா.. எறந்துட்டாங்களா..?? எப்போ..??'' அவன் முகத்திலும்.. குரலிலும் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது..!!

''ரெண்டு வருசம் ஆச்சு..!! அம்மா போயி.." சாதாரணமாகச் சொன்னாள் சௌமி.

தலையை பிடித்துக் கொண்டான்..!!
''மை காட்..!!'' அதிர்ச்சியில் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே மடங்கி.. சோபாவில் உட்கார்ந்தான்..!!

அவனுக்கு இந்த செய்தி புதிது.. என்பதால் அவனது அதிர்ச்சி சற்று குறையட்டும் எனக் காத்திருந்தாள் சௌம்யா. 

உதட்டில் லேசான புன் முறுவலுடன்.. கௌரியின் மார்பில் அணைந்திருந்த குழந்தையின் கன்னத்தை மெல்ல கிள்ளினாள்..!! குழந்தை கைகளை ஆட்டிச் சிரித்தாள்..!!

சில நொடிகள் கழித்து  தன் அண்ணனை பார்த்து..
''காபி கொண்டு வரேன்..!!'' என மெதுவாக சொன்னாள் சௌமி.

கண்களில் நீர் திரள.. அவளை நிமிர்ந்து பார்த்தான் பூந்துகில்.

'' அ.. அம்மா.. எப்படி..??'' அவன் குரல் நடுங்கியது.

''மாரு வலி..!!''

''ஹார்ட் அட்டாக்கா..??'' அவன் குரல் உடைந்தது.

''ம்..ம்ம்..!! பெண்களுக்கும் இப்பல்லாம் சாதாரணமா வர ஆரம்பிச்சிருச்சே..?? அதோட.. அம்மா ஒரு குட்டி யானை மாதிரி....'' மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டுக்கொண்டு சொன்னாள்.

அவளது இந்த வினோதமான முக பாவனைகள் அவனுக்கு.. கொஞ்சம் அதிகப்படி என தோன்றியிருக்க வேண்டும்..!! 

அதைப் பற்றி.. சௌமி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. கௌரியை பார்த்து..
''நீ உக்காருக்கா..!!'' என சொல்லி விட்டு.. அவனது லக்கேஜ்களை எடுத்து வைத்தாள்..!!

அவன் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

 சௌமி போய் காபி போட்டுக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்..!!

 வாங்கிக் கொண்டு கௌரியை பார்த்தான்.
''கௌரி.. காபி..??''

''நான் அதிகமா எடுத்துக்கறதில்ல..!! நீ குடி..!!'' என கனிவுடன்  சிரித்தாள் கௌரி.

''குழந்தை யாரோடது..?? உன்னோடதா..??''

''ம்.. ம்ம்..!!'' சிரித்தாள்.

''உன்ன மாதிரியே.. அழகா இருக்கு..!! பேரு..??''

''சுருதி ..!! உனக்கு மெரேஜ் ஆகிருச்சா பூ..??''

வறண்ட உதடுகளை மலர்த்தி சிரித்தான்.
''ம்கூம்..!! இல்லே..!!''

''உன்ன திரும்ப பாப்போம்னு.. நாங்கெள்ளாம் நெனச்சுக்கூட பாக்கல..!!''

மெலிதாக புன் முறுவல் செய்தான் பூந்துகில். 

அம்மாவின் இறப்பை.. அவன் ஏற்றுக் கொண்டான் என்று புரிந்தது..!! சௌமியை பார்த்தான்..!!
''நான் போட்ட லெட்டர் கெடைச்சுதா..??''

''ம்.. ம்ம்..!! கெடைச்சுது..!!''

''அப்பாகிட்ட சொன்னியா..??'' அவன் ரொம்பவும் எதிர் பார்ப்புடன் வந்திருக்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்த விதமாக அவனை யாரும் வரவேற்கவில்லை..!!

அதே நேரம்.. கௌரியின் அம்மாவும்.. தம்பியும் வீட்டுக்குள் வந்தார்கள்..!!


பூந்துகில் எழுந்தான்.
''அத்தே..!! நிரு...!!''

''வாடா.. என் மருமகனே..!! பாத்து எத்தனை நாளாச்சு..?? நல்லாருக்கியா..?? எங்களையெல்லாம் அடியோட ஒதறிட்டு போக உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு..?? ஆளு நல்லா ஜம்முனு ஆகிட்டே.. கல்யாணம்லாம் பண்ணிட்டியோ..??'' அத்தை மிகவும் கனிவுடன் அவனை நலன் விசாரிக்க... சிறிது நேரம் அப்படியே போனது..!!

நீண்ட நேரம் கழித்துச் சொன்னான் பூந்துகில்.
'' நான் இருக்கப்ப இந்த வீடு கூட சாதாரண ஒரு வீடாத்தான் இருந்துச்சு..!!''

''இதெல்லாம் நீ போனதுக்கப்பறம்.. மாத்தி கட்னதுதான்..!!''

''அப்ப பாட்டி இருந்துச்சு..??''

''நீ போன ரெண்டாம் மாசம் உன் பாட்டியும் போய்ட்டா..''

எல்லோருடைய முகங்களையும் பார்த்தான் பூந்துகில்..!!

''உங்கள எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்..!! எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்..!!''

''விடுடா.. நீ வந்ததே பெருசு..!!'' அத்தை அவனை சமாதானம் செய்தபின் சொன்னாள்.
'' உன் தங்கை சௌமியை நீ சாதாரண சௌமினு நெனைச்சிராத..''

சிரித்தாள் சௌமி.
''ஆமா.. எனக்கு ரெண்டு கொம்பு.. ஒரு வாலு.. நாலு காலு எல்லாம் இருக்கு..!! இல்லத்தே..??''

அத்தை.. அவனைப் பார்த்து சிரித்தவாறு சொன்னாள்.
''நீதான் வந்துட்ட இல்ல..?? உன் தங்கச்சியை பத்தி நீயே பாத்து தெரிஞ்சுப்ப..!!''

கௌரியிடமிருந்து குழந்தையை வாங்கினான் பூந்துகில்.
''என்ன பேர் சொன்ன..??''

''சுருதி..!!''

''ஒரே குழந்தைதானா..??'' அவன் குழந்தையின் கன்னத்தை வருடினான்.

நிருதி இடை புகுந்து சொன்னான்.
''இது.. கௌரிக்கு பொறந்த கொழந்தை இல்ல..''

'' அப்பறம்..???''

''இதோட அம்மா.. இறந்துட்டாங்க..'' கௌரியே சொன்னாள்.  ''அப்ப இது ஆறு மாச குழந்தை..!! எதிர்பாராத விதமா.. என்கிட்ட வந்த இந்த குழந்தைனால ஒரு சம்பவம் நடந்துச்சு..!! அன்னிக்கு இந்த குழந்தையை பாத்து.. உருகிப்போய்.. இந்த குழந்தைக்காக.. இவங்கப்பாவை இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டேன்..!! இவங்கப்பா ரொம்ப நல்லவர்..!!''

''ஓ...!!''

''எங்க கல்யாணம்கூட.. இப்ப ரெண்டு மாசம் முன்னதான் ஆச்சு..!!''

''கிரேட்..!!'' அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை..!!

அன்று இரவு...!! 

இருட்டு போர்வைக்குள் ஊர் மொத்தமும்.. உறங்கிக் கிடந்தது..!!

ஆனால்  சௌம்யாவின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..!!

''சௌமி..'' பாசமான குரல் கேட்டு கலைந்தாள் சௌமி.

அவள்  படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து பார்வையை திருப்பினாள். அவளுடைய அண்ணன் பூந்துகில்..!


''வாண்ணா..!!'' அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவளருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
''இன்னும் நீ தூங்கல..??''

''தூங்கிருவேன்..!! நீ தூங்கல..??'' படுத்துக்கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள்.

''ப்ச்.. தூக்கம் வரல..!!''

'' ஏன்..??''

''நான் எதிர் பாத்து வந்தது வேற..!! ஆனா இங்க இருக்கற சூழ்நிலை வேற..!!''

'' என்ன எதிர் பாத்து வந்த..??''

''பாட்டி சந்தேகம்னாலும்.. அம்மா இருக்கும்னு நெனச்சு வந்தேன்..!! அம்மா சாவுக்காவது வந்து நான் கொள்ளி வெச்சு.. மொட்டை அடிச்சிருக்கனும்..!! எல்லாம் என் தப்புதான்..!! என்னை பத்தின எந்த விபரங்களும் நான் உங்களுக்கு தரல..!!''

மௌனமாக தன் அண்ணனை பார்த்தாள் சௌம்யா.

ஒரு நீண்ட பெரு மூச்சுக்குப் பின் சொன்னான்.
''நீ கூட ரொம்ப மாறிப் போயிருக்க.. பழைய சௌமி இல்ல..''

'' உண்மைதான்..!!'' சிரித்தாள்.

அவள் முகத்தையே பார்த்தான்.
''நீ ரொம்ப அழகாய்ட்டடா..!! உன் முகமே.. அம்மா முகம் மாதிரி அவ்ளோ அழகா இருக்கு..!!''

சிரித்தாள் சௌமி.
''சத்யா.. என்னை பாக்கறப்பல்லாம்.. உன்னை பத்தி ரெண்டு வார்த்தையாவது பேசுவாங்க..!!"

''அதெல்லாம் நான் மறந்துட்டேன் சௌமி..!! ஏன்.. ? இந்த பந்த பாசங்களே என்னை விட்டு போயாச்சு..!! ஏதோ உன் மேல இருந்த பாசம் மட்டுமதான் என் மனசுல ஒட்டிட்டு.. அப்பப்போ.. உன்னை நெனைச்சு பீல் பண்ண வெக்கும்..!! இப்போ நீ எப்படி வளந்துருப்ப.. எப்படி மாறியிருப்பனு.. உன்ன நெனச்சு பாத்துப்பேன்..!! மத்தபடி இந்த காதல்... கல்யாணம்.. கண்றாவி எல்லாம்.. வேண்டாம்னு விட்டுட்டேன்..!!''

அவன் பக்கம் நகர்ந்து அவன் தோளில் தலை சாயத்துக் கொண்டாள் சௌமி.
''இப்பவும் லவ் இல்ல..??''

''சே.. ச்சே..!!'' அவள் தோளை அணைத்துக் கொண்டு கேட்டான்.
''நிருதியும்.. நீயும் கல்யாணம் பண்ணிக்க போறிங்களா..??''

''ஆமாம்..!! ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்..!! எங்க கல்யாணம் நடக்க ரொம்ப நாள்கூட ஆகும்..!! நீ திரும்ப வந்ததுல அப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம்தான்..!! இப்பல்லாம் அப்பா.. முன்ன மாதிரி எதுக்கும் கோபப்படறதில்ல..!! ரொம்ப சாதுவா மாறிட்டாரு..!!''

''ம்..ம்ம்..!! எல்லாமே மாறித்தான் இருக்கு..!!''

மெல்லக் கேட்டாள்.
''சத்யாவுக்கு சொல்லட்டுமா..??''

''என்ன..??''

''நீ வந்துருக்கறதை...??''

''இல்ல.. வேண்டாம்..!! அவ அட்ரஸ் சொல்லு.. நானே போய் பாத்துக்கறேன்..!!!''

''சரி..!!'' என்றபின்  சிரித்தவாறு சொன்னாள் சௌமி.
''அவங்க பையனுக்கு உன் பேருதான்.. பூந்துகிலன்..!!''



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


விரும்பிப் படித்தவை.. !!