சனி, 21 அக்டோபர், 2023

நீலவானப் பறவை -3

 மாலை, 


கணவனுடன் வெளியே செல்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள் ஆனந்தி. 


இன்று அவளின் பிறந்த நாள் என்கிற கொண்டாட்டத்தை விட அவள் கணவன் காட்டும் அன்பைத்தான் அவள் மனசு கொண்டாடிக் கொண்டிருந்தது.


குளித்து வந்து புதிதாக இருந்த புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். கண்களுக்கு மை தீட்டி, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொண்டாள். 


"வருண்.. இந்த புடவை எப்படி இருக்கு?"


"அட்டகாசமா இருக்கு.  தேவதை மாதிரி இருக்க. என் கண்ணே பட்டுறும் போலருக்கு" என்று அவளை முத்தமிட்டான்.


அதன்பின் மகிழ்ச்சியுடன் காரில் ஏறி வெளியே கிளம்பினர். 


நகரின் பெரிய துணிக்கடைக்கு அவளை அழைத்துச் சென்றான் வருண். அவளுக்காக விலை உயர்ந்த ஒரு புதிய பட்டுப் புடவையை தேர்வு செய்து வாங்கிக் கொடுத்தான். அதன்பின் அவர்கள் சினிமாவுக்குச் சென்றனர். 


இரவு உணவிற்குப் பிறகு அவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இடது பக்க ஓரமாக காரின் வெளிச்சம் பட்டுத் தெரிந்த அந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டாள் ஆனந்தி. 


 "ஸ்டாப்.. ஸ்டாப்" என்று கத்தி காரை நிறுத்தும்படி கணவனிடம் சொன்னாள். 


"என்னாச்சு பேபி?" சட்டெனக் காரின் வேகத்தைக் குறைத்தபடி கேட்டான்.


"யாரோ அடிபட்டு கிடக்கறாங்க"


"அடிபட்டு கிடக்கறாங்களா? எங்க.?"


"ரோட்ல.. ஓரமா.." படபடத்தாள். 


"அது யாராவது ஒரு குடிகாரனாக இருக்கலாம். கவலைப்பட வேண்டாம்" என்றான் வருண்


ஆனால் அவளால் அப்படி விட்டு விட முடியவில்லை. அவனை வற்புறுத்தினாள்.


"இல்ல வருண்.. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. ப்ளீஸ் காரை நிறுத்துங்க.. பாத்துட்டு போயிரலாம்"


பிறந்த நாள் அன்று அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து காரை ஓரம் கட்டி நிறுத்தினான் வருண்.


காரை விட்டு அவனுக்கு முன்னதாகவே இறங்கினாள் ஆனந்தி. வேகமாக அவள் பார்த்த இடத்தை நோக்கி ஓடினாள்.


 வருணும் அவளைப் பின் தொடர்ந்து போனான். 


அவள் நினைத்தது சரிதான். அங்கே ஒரு இளைஞன் அடிபட்டுக் கிடந்தான். பக்கத்தில் யாரும் இல்லை. 


"சின்ன பையன் மாதிரி இருக்கு" சாலையோர லைட் வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்தபடி சொன்னாள் ஆனந்தி. 


"ஆமா.. மப்புல இருப்பான் மோலருக்கு.?"  


சில காயங்களுடன் கிட்டத்தட்ட சுய நினைவின்றி கிடந்த அந்த இளைஞனிடம் சென்றான் வருண். அவனுக்கு நிறைய அடிபட்டிருந்தது.


வருண் சோதித்துப் பார்த்தான். அவனிடம் சாராய வாசம் இல்லை. 


"மப்பு இல்ல.. ஏதோ ஆக்ஸிடெண்ட் போல இருக்கு.. ஏதோ ஒரு வண்டி அடிச்சு போட்டுட்டு இவனை கண்டுக்காம போயிருச்சு.."


"இப்ப என்ன பண்றது?" படபடத்தபடி கேட்டாள் ஆனந்தி.


"பெரிய ஆக்ஸிடெண்ட் இல்ல. உயிருக்கு பிரச்சினை மாதிரி தெரியல.. ஆஸ்பத்திரி போனா பொழைச்சுக்குவான்"


"கொண்டு போலாமே.."


"பட்.. போலீஸ் பிரச்சினை வருமே.. நாமதான் ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டோம்னு நம்மளையே விசாரிப்பாங்க.. நிறைய சிக்கல் வரும்" நடைமுறை சிக்கலைச் சொன்னான் வருண்.


ஆனால் ஆனந்திக்கு அது புரியவில்லை. அவள் எண்ணமெல்லாம் அந்த இளைஞனைக் காப்பாற்றுவதிலேயேதான் இருந்தது. 


"இவனுக்கு சுய நினைவு வந்து கண்ணு முழிச்சா என்ன நடந்துச்சுனு உண்மையை சொல்ல போறான். நாம இதை பண்ணலயே.. ஸோ.. ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போவோம் ப்ளீஸ்.. இப்படியே விட்டுட்டு போறது கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாத செயல்" என்றாள்.


அவனால் மறுக்க முடியவில்லை. அவளின் உதவியுடன் அடிபட்டுக் கிடந்தவனை காரில் ஏற்றி, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் வருண்.


"அவரைக் கேசுவாலிட்டிக்கு அழைச்சுட்டு வாங்க" என்று நர்ஸ், அங்கிருந்த உதவியாளர் ஆணுக்கு உத்தரவிட்டாள்.


 பின் வருணின் பக்கம் திரும்பினாள்.

"உங்க கார்ல நடந்த ஆக்ஸிடெண்ட்டா.?" என்று சந்தேகத்துடன் கேட்டாள்.


"இல்ல இலல.. இது ரொம்ப நேரம் முன்னாடியே நடந்துருக்கு. நாங்க வரப்ப சாலையோரமா கிடந்தான். அப்படியே விட்டுட்டு போக விரும்பாம நாங்க ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்தோம்" 


அந்தப் பையனை பரிசோதித்த பிறகு, பணி மருத்துவர் வருணை ஆலோசனை அறைக்கு வரும்படி கூறினார். 


பையனின் வலது மணிக்கட்டில் பலமான அடியும், இடது மணிக்கட்டில் ஒரு சிறிய எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது.


"கவலைப்பட வேண்டாம். உயிருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாளைக்கு காலைக்குள்ள கண் முழிச்சிருவான்." 


“தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லிவிட்டு வருண் கிளம்ப ஆரம்பித்தான்.


"இது ஒரு கார் விபத்தை விட மோசம், அது எப்படி நடந்தது?" என்று மருத்துவர் கேட்டார்.


"இல்லை சார், நீங்க சொல்றது தப்பு, நான் அவரை இடிக்கலை" வருண் நடந்ததை விளக்கினான்.


"எதுவாக இருந்தாலும், நீங்க போய் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கணும். இது பொதுவான சம்பிரதாயம்.. அப்படி இல்லேன்னா நீங்கதான் பிரச்சினைல மாட்டிப்பீங்க" எனச் சொல்லிவிட்டு மருத்துவர் அறையை விட்டு வெளியேறினார்.


வருண் இரண்டு நிமிடம் அப்படியே நின்றபின் மிகவும் சோர்வாக தன் மனைவி ஆனந்தியிடம் திரும்பி வந்தான்.


 அவள் கவலை படிந்த முகத்துடன் நின்றிருந்தாள்.


"சொன்னேன் இல்ல.. இப்ப போலீஸ் ஸ்டேஷன் போகணும்..  சரி வா போகலாம், நான் உன்னை வீட்ல கொண்டு போய் விடறேன்" என்றான்.


"நமக்கு ஏதாவது பிரச்சினை வருமா?" பயத்துடன் கேட்டாள் ஆனந்தி.


"பெரிய பிரச்சினை எதுவும் வராது. அந்த பையன் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லல்ல.. ஆனா போலீஸ் கேஸ் ஆகும். நாம போய் விவரத்தை சொல்லணும். அப்படி சொல்லலேன்னா நமக்கு சிக்கல் வரும்"


அவளை அழைத்துக் கொண்டு அந்தப் பகுதி காவல் நிலையத்துக்குச் சென்று இரவுப் பணியில் இருந்த காவலரிடம் விபரம் சொன்னான். இன்ஸ்பெக்டர் இல்லை.


கணவன் மனைவி இருவரையும் சந்தேகமாகப் பார்த்தாலும் பெயருக்கு சில கேள்விகளைக் கேட்டு தகவல்களைச் சேகரித்துக் கொண்டு ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார். 


அடிபட்டவனுக்கு சுயநினைவு திரும்பினால் காலையில் விவரங்கள் சேகரிக்கப்படும் என்று கான்ஸ்டபிள் கூறினார்.


மீண்டும் ஆஸ்பத்திரியை அடைந்து அங்கும் இங்கும் சில கட்டுகளுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த பெயர் தெரியாதவனிடம் சென்று அவனைப் பார்த்தார்கள். 


நைட் ட்யூட்டி டாக்டரிடமும் நர்ஸ்களிடமும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்றனர். 


வீட்டை அடைந்தபோது வருண் மிகவும் சோர்ந்திருந்தான். ஆனந்திகூட அப்படித்தான் இருந்தாள். ஆனாலும் தன் பிறந்த நாள் அன்று அடிபட்டுக் கிடந்த ஒரு பையனுக்கு உதவியதை நினைத்து மன நிம்மதியடைந்தாள்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!