சனி, 27 மார்ச், 2021

பிழையான வரம் -2

 அந்த கணத்திலிருந்தே குந்தியின் மனதை ஏக்கம் வந்து தொடத் தொடங்கியது. அந்த ஏக்கம் ஒவ்வொரு கணமும் அதிகரித்து அவளின் நெஞ்சில் இரும்புக் குண்டாய் கனமேற்றியது. அதன்பின் வந்த ஒவ்வொரு நாழிகையும் அவளை வருத்தமுறச் செய்தன. வருத்தம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஏக்கம் அவளின் மனதை மிகவும் வாட்டத் தொடங்கியது.. !!

மஞ்சத்திலிருந்து எழுந்து சென்று மேற்குச் சாளரத்தருகே நின்றாள். மெல்லிய காற்று வீசியதை உணரும் முன் அவள் கண்கள் மேற்கு நோக்கி ஏங்கின. அவள் நெஞ்சகம் வெடிப்பதை போல பெருமூச்செறிந்தது. தீச்சுடராய் மூச்சுக் காற்று அவள் மூக்கின் மெல்லிய மடலைச் சுட்டது. நொடிக்கு நொடி அவள் உடல் தீத்தனலாய் மாறியதை அவள் உணரத் தவறினாள்.

 அவள் எண்ணமெல்லாம் கதிரவனை கண்டடைந்து அள்ளி அணைப்பதிலேயே இருந்தது. ஆனால் கதிரவன் தன்னருகில் இல்லை என்கிற ஏக்கமும் அவளில் நிலைத்தே இருந்தது. அவள் நெஞ்சு நெடு மூச்சுக்களால் விம்மிக் கொண்டிருக்க அவள் உடலோ தனலாய் மாறிக் கொண்டிருந்தது. 

அவள் கதிரவனையே தன் மகவாக எண்ணிப் பித்தேறிய நிலையில் எதையும் எண்ணாதவளாக தன் குடிலை விட்டு வெளியேறினாள். மலர்வனத்தை அடைந்த அவள் கால்கள் அங்கும் நிலைகொள்ளவில்லை. ஏக்கமும் தவிப்பும் அவள் நெஞ்சில் உறைந்திருக்க அங்கிருந்தும் வெளியேறினாள். சேடிகளோ காவலர்களோ எவரும் அவள் அந்த கௌந்தவனத்தை விட்டு வெளியேறியதை கவனிக்கவே இல்லை.. !!

அவளைச் சுற்றிலும் படர்ந்திருக்கும் அந்தி இருளை அவள் உணரவே இல்லை. ஒளி வடிவப் பாதை ஒன்று அவளுக்கெனவே தோன்றியபோல அவள் முன் நீண்டு அவளை வரவேற்றது. அவள் நேராக பர்ணஸா நதிக்கரைக்கே சென்றாள். 

இரவின் குளிர் காற்று படர்ந்த நதி எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவள் வருகைக்காகவே காத்திருந்ததைப் போல மெல்லிய அலையோசை எழுப்பியபடியிருந்தது. வானில் நிறைந்திருக்கும் விண்மீன்களின் ஒளியில் நதி நீரலைகள் மின்னிக் கொண்டிருந்தது. கரையில் அங்கங்கே சில மின்மினிப் பூச்சிகள் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தன.. !!

மாலையில் நின்று கதிரவனின் அழகில் மயங்கிய அதே இடத்தில் சென்று நின்று மேற்கில் மறைந்த கதிரவனைத் தேடினாள். கதிரவன் ஒளிந்து விளையாடிய முகில் திரள்கூட இப்போது கலைந்து போயிருந்தது. அவள் தியானம் செய்வது போல மேற்கு நோக்கியே ஏங்கி நின்றாள். அவள் கண்கள் அவளின் சூரியக் குழந்தையைக் காண ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன.. !!

பர்ணஸா நதிக்கரையில் நெடுநேரம் நின்று கால்கள் தளர்வதை உணர்ந்த பின்னரே அங்கு தான் மட்டும் தனித்து நின்றிருப்பதை அறிந்தாள் குந்தி. ஆயினும் அந்த இடத்தை விட்டு நீங்க அவள் மனம் ஒப்பவில்லை. தன் மனதில் தேங்கிவிட்ட இனிய மைந்தனை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற தவிப்பில் அவள் நிலைத்திருந்த போதுதான் அவள் நெஞ்சின் தவிப்பை நிறைவு செய்வதுபோல அந்த எண்ணம் உதித்தது.. !!

துர்வாச முனிவர் அவளுக்கு அளித்த வரம் அவளிடம் இருக்கிறது. அவள் அந்த மந்திரத்தை உச்சரித்தால் அவள் வேண்டும் சக்தியுடன் ஒரு குழந்தையைப் பெறலாம் என்பது அந்த வரம். அப்படியெனில் அவள் ஏன் சூரியனையே தன் குழந்தையாய் பெறக் கூடாது.? 

சூரியனே தன் முதல் குழந்தையாய் வர வேண்டும் என்பதையே அவள் உள்ளம் விரும்பியது. இன்னும் பெறாத அந்த சூரியக் குழைந்தையைக் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு முலையூட்டிய உணர்வு அவளை ஒரு தாயாகவே மாற்றியிருந்தது. அந்த தாய்மையை அடையும் பாக்கியம் வரமாக தன் கையிலேயே இருக்கும்போது ஏன் நெஞ்சம் தவித்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும்.. ??


****


தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப் பகுதியின் யாதவர்குலத் தலைவர் சூரசேனருக்கும், லவண குலத்தைச் சேர்ந்த மரீஷைக்கும் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவள்தான் குந்தி. 

பத்து தமையர்களுக்கும், மூன்று தமக்கைகளுக்கும் இளையவளாய், மூத்தவனுடன் இணைந்தே தாயின் கருவில் வளர்ந்து, கோகுல கிருஷ்ணனின் தந்தையான வசுதேவனுக்குப் பின்னால் சிறிது நேரம் தாமதித்து பொருமையாகப் பிறந்த கடைசிக் குழந்தை அவள். 

இரட்டையர்களில் மூத்தவனான வசுதேவனுடன் ஒன்றாக இணைந்தே பிருதையாய் வளர்ந்து, மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜருக்கு தத்துப் பிள்ளையாய் வந்து குந்தி என்றானவள். கருமை நிற எருமைத்தோல் கொண்ட வேட்டுவக்குடி தாய்க்குப் பிறந்த வெள்ளைத் தோல் பேரழகி.. !!

மார்த்திகாவதியின் அரசர் குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. அந்த தவக் குடிலில் வந்து தங்கிய துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்து, அவரின் அன்புக்கு பாத்திரமானாள் குந்தி. அவளின் பணிவிடைகளில் மகிழ்ந்து அவள் மேல் கொண்ட அன்பால் தன் தவ வலிமையால் அவளின் வருங்காலம் உணர்ந்து, தந்தையெனக் கனிந்த அவரிடமிருந்து அவள் பெற்ற வரம் அவள் விரும்பும் குழந்தையை அளிக்கக் கூடியது.. !!

அவள் முடிவு செய்தாள். சூரியனையே தன் குழந்தையாகப் பெற வேண்டுமென. அங்கேயே கண்களை மூடி அமர்ந்தாள் குந்தி. துர்வாச முனிவரை தியானித்து மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் மந்திர உச்சாடனையை முடித்த சில கணங்களில் மூடிய கண்களுக்குள் ஒளி ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தாள். கண் திறந்தபோது அவள் மந்திரத்தின் சக்தியை கண் முன் கண்டு திடுக்கிட்டாள்.

அந்த நதிக்கரையில் பொன்னிற மேனியுடன் அழகும் ஆண்மையும் நிரம்பிய ஓர் ஆண் மகன் அவள் முன் தோன்றியிருந்தான். அவனைக் கண்டு அவள் விழிகள் கூசின. உடல் அனலால் வாட்டப் படுவதைப் போல சுட்டது. அவனின் பொன்னொளிக் கதிர்களை மறைக்க முகில் திரைகள் ஒருங்கியிருக்கவில்லை. அவள் உடல் விதிர்த்து கை கால்கள் நடுங்கின.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!