அது ஒரு ஓட்டு வீடு. மிகவும் பழையதாகிவிட்டிருந்தது. சுவற்றுக்குக் கூட வெள்ளையடித்து நீண்ட காலம் ஆகியிருக்கும் போலிருந்தது.
ஒரே ஒரு பக்கம் மட்டும் சுவர் பூசப்படாமல் கற்கள் தெரியும்படி இருந்தது.
“இது யார் வீடு?” என்று அந்த வீட்டைப் பார்த்து லேசாக வியந்தபடி நான் கேட்டேன்.
“வா சொல்றேன்” என்ற அவன் முகத்தில் இதுவரை இல்லாத ஓர் ஒளி தெரிந்தது.
அந்த முக மாற்றம் அவனுக்குள் எழும் ஒரு ஆழ்மன உணர்வைச் சொல்லியது.
அந்த வீட்டின் முன்பாக, தென்னை ஓலைக் கூரை வேய்ந்த சாலை ஒன்று அந்த வீட்டுடன் ஒட்டியிருந்தது. அதற்கு கதவு இல்லை.
அதில் சில பாத்திரங்களும் குடங்களும் வைக்கப் பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
அதைக் கடந்தால் பழைய மரக் கதவு. அதற்கு பச்சை வண்ண பெயிண்ட் அடிக்கப் பட்டிருந்தது. நாதங்கி பெருசாக கீழே தொங்கியது.
அந்தக் கதவு பாதி திறந்திருந்தது. உள்ளிருந்து டிவி சத்தம் கேட்டது.
“சுபா” என்று எட்டிப் பார்த்துக் கூப்பிட்டான் சத்தமாக.
சட்டென்று ஒரு பெண்மணி உள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி வெளியே எட்டிப் பார்த்தாள்.
“யாரு.. அய்யாவா? வா அய்யாவு” என்றாள் அவனை.
எழுந்து வந்து விட்டாள்.
ஒல்லியாக இருந்தாள் அந்தப் பெண்மணி. நல்ல நிறம்தான். கூடவே சற்று கூடுதல் உயரம்.
என் கண்ணை உறுத்தியது அவளின் நீளமான மூக்குதான். அதில் மூக்குத்தி அணிந்திருந்தாள்.
சிரித்தாள். பளிச்சென்ற வெள்ளைப் பற்கள் மின்னின. மார்புப் புடவை ஒதுங்கியிருந்தது. அதில் சற்றே தாராளம் தெரிந்தது. அப்பறமாக அதை சரிசெய்து கொண்டாள். தலைமுடி கலைந்திருந்தது. ஒதுக்கிக் கொண்டாள்.
“சுபா இல்லீங்களா அக்கா?” எனக் கேட்டான்.
“அவ.. அவங்கண்ணனை பாக்க போயிருக்கா தம்பி” என்றாள் அந்தப் பெண்மணி.
“நான் அவளை பாக்கலாம்னுதான் வந்தேன்”
“என்ன விசயம் கண்ணு?”
“சும்மாதான் அக்கா. இது என் பிரெண்டு. என்னைப் பாக்க வந்துருந்தான். அதான் சுபா இருந்தா.. கொஞ்சம் பாக்கலாம்னு..”
“அவ அண்ணன் வீட்டுக்கு போய்ட்டு வரேனு போனா அய்யாவு. வா.. உள்ள வா. உக்காரு. தம்பிய கூட்டிட்டு வா” என்று சிரித்த முகமாக என்னையும் ஒரு பார்வை பார்த்தபடி அழைத்தாள்.
“இல்ல.. சுபா இருந்தா..”
“நாளைக்கு பாத்தா கெடக்குது. இப்ப என்ன அவசரம்”
“இல்லக்கா.. பிரெண்டு இன்னிக்கு ஊருக்கு போயிருவாப்ல” என்று அவன் தயங்கிச் சொன்னான்.
“அப்படியா? தம்பி எந்த ஊரு? நம்ம சைடு பையனா?” என்று என்னைப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
“இல்லக்கா.. வேலைக்கு போற எடத்துல.. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வேலை செய்யறோம்”
அவன் பேச்சு தடுமாறித் தடுமாறி வந்தது. அப்படி பேசும்போது தலையைச் சொறிந்து கொண்டான். இல்லாவிட்டால் கழுத்தை நீவிக் கொண்டான்.
“சரி.. அதனால என்ன வாங்க. உள்ள வாங்க. ஒரு வாய் காபி தண்ணி குடிச்சுட்டு போனா கெடக்குது” என்று அழைத்தாள்.
அவளது அழைப்பைத் தட்ட முடியாமல் அந்த வீட்டுக்குள் என்னையும் அழைத்துப் போனான் அய்யாவு என்று அந்தப் பெண்மணியால் அன்பாக அழைக்கப் பட்ட அன்பரசு.
வீடு, உள்ளே ஒரே அறைதான். அதில்தான் கட்டில் பீரோ டிவியெல்லாம் இருந்தது. ஒரு பக்கச் சுவர் ஓரமாக வரிசையாக சமைத்த உணவுச் சட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு சிறிய டேபிள் பேன் உடைந்த சேர் மீது வைக்கப்பட்டிருந்தது. அது கடமைக்கு சுற்றி காற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அந்தப் பெண்மணி எடுத்துப் போட்ட சேரில் உட்கார்ந்தபோது மூச்சு முட்டுவதைப் போல வீடு அடைசலாகத்தான் இருந்தது.
இரும்புக் கட்டில் மீது பாய் விரிக்கப் பட்டிருந்தது. அதுவும் பழைய பாய். அங்கங்கே கோரை பிய்ந்து போயிருந்தது. எண்ணெய் பிசுக்குடன் தலையணைகள் ஒழுங்கற்றுக் கிடந்தது.
எங்களை உட்கார வைத்த அந்தப் பெண்மணி,
“காபி வெக்கறேன்” என்றாள்.
“வேணடாம்க்கா. தண்ணி மட்டும் குடுங்க” என்றான்.
அந்தப் பெண் தண்ணீர் கொடுத்தாள். குடித்தோம்.
சுபா என்கிற அந்தப் பெண்ணைப் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டனர்.
பத்து நிமிடத்தில் கிளம்பி விட்டோம்.
ஒல்லியாக இருந்தாலும் அந்தப் பெண்மணியின் பேச்சும் சிரிப்பும் முகமும் பேசிய அந்த பத்து நிமிட நேரத்தில் எனக்குப் பிடித்திருந்தது.
எளிமையான மனசு. எதார்த்தமான பேச்சு. பொய் கலப்பில்லாத சிரிப்பு.
நாங்கள் வெளியே வந்து வீதியில் நடந்தபோது கேட்டேன்.
“யார் இவங்க?”
“என் வருங்கால மாமியார்” என்றான்.
“ஓஓ..” வியந்தேன். “முடிவு பண்ணியாச்சா?”
“முடிவு பண்ணாப்லதான். இவங்க பொண்ணு சுபாவை நான் லவ் பண்றேன். அவளும்தான். அது இவங்களுக்குத் தெரியும். ஒன்னும் பிரச்சினை இல்ல. ஓகே சொல்லிட்டாங்க. அவ இந்த வருசம் காலேஜ் முடிக்கறா. அது முடிச்சதும் கல்யாணம்”
“வாழ்த்துக்கள்.“ என்றேன்.
“நாம இப்பதான் கொஞ்சம் நெருக்கமா பழகறோம். நீயும் இன்னிக்கு எங்க ஊருக்கு வந்துருக்க. அதான் அவ இருந்தா காட்லாம்னு நெனைச்சேன்” அவன் குரலில் சிறு ஏமாற்றம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.
ஒரு நண்பன் என்கிற முறையில் தனது காதலியான வருங்கால மனைவியை எனக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறான். ஆனால் இன்று பார்த்து அவள் ஊரில் இல்லை.
அவனது மாமியார் பெண்மணி ஒரு நொடி என் மனதில் வந்து போனாள்.
அவளைப் போலத்தான் அவளது பெண்ணும் ஒல்லியாக, உயரமாக இருப்பாளோ என்று நினைத்தேன்.
ஒல்லியாக, உயரமாக இருந்தாலும் அந்த பேச்சின் அழகும், சிரிப்பின் வசீகரமும் அவளை அழகாக்கி காட்டியிருந்தது.
அவளது பெண் இளம்பெண் என்பதால் அவள் அம்மாவைப் போலிருந்தால் மிகவும் அழகாகவே இருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.
“உன் ஆளு நல்லாருக்குமா?” என்று கேட்டேன்.
“நல்லால்லாட்டி லவ் பண்ணுவேனா?” என்று அவன் கேட்டான்.
“உண்மை” ஒத்துக் கொண்டு தலையாட்டினேன். “உன் மாமியார் ஒல்லியாருந்தாலும் அவங்க சிரிப்பும் பேச்சும் ரொம்ப வசீகரமா இருக்கு”
“அப்படியா? ஆனா ரொம்ப நல்ல மாதிரி அக்கா. தங்கமான மனசு. இப்படி ஒரு மாமியா கெடைக்க குடுத்து வெக்கணும்பாங்க”
“மாமியாக்காகவே அவங்க பொண்ணை லவ் பண்றியா என்ன?”
“சே ச்சே..” என்று சிரித்தான்.
“இவங்களை அக்கானுதான் கூப்பிடுவாயா?”
“ஆமா. உறவு முறைல எனக்கு அக்காதான் ஆகறாங்க. இவங்க பொண்ணு எனக்கு அககா பொண்ணு. சொந்தம்தான். அப்பா வகை சொந்தம்” என்றான்.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக