“வாங்க தம்பி.. அம்மா நல்லாருக்காங்களா?”
“நல்லாருக்காங்க. அம்மாதான் உங்களை ஒரு எட்டு பாத்துட்டு வரச் சொன்னாங்க”
“அப்படியா? உக்காருங்க. எங்கயாவது போயிட்டு வராப்லயா?”
“ஆமாங்க. பிரெண்டோட சிஸ்டருக்கு கல்யாணம். நேத்து ராத்திரியே போயிட்டேன். காலைல கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன். சரி போற வழில அப்படியே உங்களையும் ஒரு எட்டு பாத்துரலாம்னு”
“அப்படியா? ரொம்ப நல்ல விசயம்தான். ஒரு சுபமுகூர்த்த காரியத்துக்கு போயிட்டுதான் வந்துருக்கீங்க. நேரா இங்கதான வரீங்க?”
“ஆமாங்க. இன்னும் வீட்டுக்குக்கூட போகல. பஸ் விட்டு எறங்கி.. உங்களை பாத்துட்டு போயிரலாம்னு..”
“ரொம்ப நல்ல காரியம் பண்ணீங்க. உங்களுக்கு சுப முகூர்த்த நேரம் வந்துருச்சு தம்பி. அதனாலதான் ஒரு சுப முகூர்த்தம் முடிஞ்ச கையோட இங்க வரீங்க. இதுவே ஒரு நல்ல சகுனம்தான். இருந்தாலும் உங்க ஜாதகம் என்ன சொல்லுதுன்னும் ஒரு பார்வை பாத்துரலாம். ஜாதகம் கொண்டு வந்தீங்களா?”
“இல்லைங்க. கொண்டு வரலை. ஜாதக கட்ட போட்டோ இருக்கு. இல்ல விவரம் வேணும்னாலும் சொல்றேன்”
“உங்க ஜாதகம் என்கிட்டயே இருக்கும் தம்பி.. இருங்க பாத்துரலாம். நி.. ரு.. தி….. இதோ இருக்கே.. ரைட்.. ஓபன் பண்ணிட்டா வேலை முடிஞ்சுது. பாருங்க.. ம்ம்.. இப்ப என்ன போயிட்டிருக்கு. அட்டமச்சனி வெலகியாச்சு.. தசா புக்தி.. ஆஆ.. வந்தாச்சே.. தம்பி இப்பவே உங்களுக்கு கல்யாண வேலை வந்தாச்சே. போன பத்து நாளோட உங்க கஷ்டம் போயிருச்சு. இப்பவே உங்களுக்கு நேரம் வந்தாச்சு தம்பி. ரைட்.. இனி நீங்க எதுக்கும் தயக்கம் காட்ட வேண்டியதே இல்ல. சுறுசுறுப்பா பொண்ணு பாருங்க. நீங்க என்ன போய் பாக்கறது? உங்களைத் தேடி தானா வரும். ஆமா.. தம்பிக்கு இப்பவே.. தாம்பத்யத்துக்கு வேளை வந்தாச்சே.. நீங்க இனி தனியா படுக்க முடியாதே..”
“போங்க.. தனியா படுத்துட்டு தவிக்கிறது எனக்கில்ல தெரியும்?”
“பொய்யில்ல தம்பி. இதெல்லாம் ஒரு ஜோசியனா நான் சொல்லக் கூடாது. ஆனாலும் உண்மை அதான். நீங்க நம்ம பையன்றதால சொல்றேன். கவலையே படாதிங்க தம்பி. இனி நீங்க வேண்டாம்னு சொன்னாலும் அந்த சுக்கரன் உங்களை சும்மா இருக்க விடமாட்டாரு. கெடாத சந்திரன்கூட சேந்த சுக்கரன். அழகான பொண்ணாவே கொண்டு வந்து குடுப்பாரு போங்க.. அம்மாகிட்ட சொல்லுங்க. அப்படியே குலதெய்வத்துக்கு ஒரு நடை போய்ட்டு வாங்க”
“போன அமாவாசைக்கு போயிட்டு வந்தாங்க அம்மா..”
“மறு விவாக நேரம் வந்தாச்சு. ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்னு சொல்லிருங்க. குடும்பத்தோட போய் ஒரு பூஜையை போட்டுட்டு மனசார வேண்டிட்டு வாங்க. நல்ல வழியா அமையும். ரெண்டாவதா வரப் போற மனைவியும் உங்களுக்கு மனசுக்கு புடிச்ச மாதிரி.. உங்க மனசையும் புரிஞ்சு நடந்துக்கும். கவலையேபடாதிங்க”
“ஒரு சின்ன டவுட் கேக்கலாங்களா?”
“கேளுங்க தம்பி?”
“மொத பண்ணதுதான் அப்படி ஆகிப் போச்சு. அது போகட்டும். இப்ப ரெண்டாவதா வரது என்னைப் புரிஞ்சுகிட்டு எனக்கு புடிச்ச மாதிரியும் இருக்கும்னு சொன்னீங்க..”
“கண்டிப்பா தம்பி! பதினொண்ணுல இருந்து நடத்தி குடுக்கற சுக்கிரன். அழகா இருக்கும் ஆனா.. கொஞ்சம் ஒடம்பா இருக்கும். மத்தபடி நல்ல பொண்ணாதான் இருக்கும். நீங்க நல்லா விசாரிச்சுப் பாத்தே கல்யாணம் பண்ணலாம்”
“அது சரிங்க.. வரப்போற பொண்ணு.. எப்படினு.. அதாவது.. என்ன சொல்லிட்டாலும் இது எனக்கு செகண்ட் மேரேஜ்தான். அதே மாதிரி வரப்போற அந்தப் பொண்ணு..”
“ஓஓ.. அதை கேக்கறீங்களா? ஆமா தம்பி நீங்க கேக்கறது சரிதான். அந்த ஒச்சம்கூட இல்லாம வராது. உங்களுக்கு நல்ல மனைவியா வேணும்னா அப்படித்தான் வரும். பொண்ணு நல்ல பொண்ணாதான் இருக்கும். ஆனா.. அதுவும் ஒரு வகைல உங்களைப்போலதான் இருக்கும்”
“என்னை மாதிரின்னா? கல்யாணமாகி.. டிவோர்ஸ் ஆகி..”
“ஆமா தம்பி. அதும் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கற பொண்ணாத்தான் இருக்கும். ஆனா அதுக்கு உங்க மூலமாத்தான் கொழந்தை பொறக்கும். அதான் கட்டம் சொல்லுது. கட்டத்தை யார்னாலயம் தடுக்க முடியாது. ஜோசியர்கள் பொய் சொல்லலாம். ஜோதிடம் பொய் சொல்லவே சொல்லாது. என் அனுபவத்துல இதை நான் நிறைய பாத்துட்டேன்”
“சரிங்க. சந்ததோசம். அப்ப நான் அம்மாகிட்ட போய் சொல்றேன். அம்மாவே உங்களுக்கு போன் பண்ணி பேசுவாங்க”
“சரி தம்பி. ஒண்ணும் கவலைப்படாம குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும்”
அவருக்கான பணத்தைக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டான் நிருதி.. !!
2 கருத்துகள்:
v deep analysis on astrology..
yes..
கருத்துரையிடுக