அன்று காலை, விடாமல் கதவு தட்டப் பட்டுக் கொண்டிருக்க.. நான் தூக்கம் கலைந்து சிறிது எரிச்சலுடன் எழுந்தேன்.
கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு போய் கதவைத் திறந்தேன்.. !!
''எருமை மாடு.. எவ்ளோ நேரண்டா கதவை தட்றது.. ?? மணி பாரு என்னாகுதுனு.. ? இவ்ளோ நேரமா தூங்குவ.. ?? அப்பவும் அம்மா சொல்லுச்சு.. அவன் இன்னும் தூங்கிட்டிருப்பானு.. சொன்னது சரியாத்தான் போச்சு.. !! ஏன்.. சாருக்கு இன்னிக்கு வேலைக்கு போற ஐடியா இல்லையாக்கும்.. ??'' என நான்ஸ்டாப்பாக தன் ஆத்திரத்தைக் கொட்டியபடி என்னை முறைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் என் அருமைத் தங்கை..!!
அவளைப் பார்த்தும் கொஞ்சம் ஆறுதலடைந்த என் மனசு.. அவளது வார்த்தைகளைக் கேட்டதும் எரிச்சலடைந்தது..!!
நான் அவளுக்கு பதில் சொல்லாமல் திரும்பி உள்ளே நடந்தேன்.
'' அம்மா.. மக.. நாங்க ரெண்டு பேரும் அங்க.. ஆஸ்பத்ரில தூங்காம கெடக்கோம். நீ என்னடான்னா இங்க.. எட்டரை மணி ஆகியும் எந்திரிச்சு வேலைக்கு போற எண்ணமே இல்லாம.. நல்லா ஜம்பமா தூங்கிட்டிருக்க.. !! என்ன பண்றது.. எல்லாம் எங்க நேரம்... நைட்டு புல்லா சரக்கடிச்சியாக்கும்.. ??'' என்று கேட்டாள்.
நான் அவள் பக்கம் கூட திரும்பாமல்.. மீண்டும் திரும்பி.. வெளியேறி பாத்ரூம் போனேன்.
சூரியனின் அக்னிப் பார்வை என் கண்களை கூசச் செய்தது. மூளை எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. உடம்பு மட்டும் தனக்கு பழக்கமான இயல்பான வேலைகளைச் செய்தது.
மஞ்சளாக வெளியேறிய சிறுநீரை முடித்துக் கொண்டு முகம் கழுவினேன்.
பேஸ்ட்டை எடுத்து பிதுக்கி.. பிரஷ்ஷில் வைத்து.. நனைத்து.. அதை வாயில் வைத்து தேய்த்துக் கொண்டு வந்து வெளியே நின்றேன்.
தன் வீட்டுக் கதவருகே வந்து நின்ற சத்யாவைப் பார்த்து.. ஒரு நொடி அசந்து போனேன்.. !! அவசரமாக எச்சிலைத் துப்பினேன்.. !!
'' ஹேய்.. என்னது புடவைலாம்.. ??'' என்று கேட்டேன்.
அவள் முகத்தில் சட்டென ஒரு வெட்கம். புடவைத் தலைப்பைக் கையில் பிடித்து திருகியபடி மெல்லிய குரலில் கேட்டாள்.
'' நல்லாருக்கா.. ??''
'' வாவ்.. !! கலக்கற.. !! ஏதாவது விசேசமா.. ??'' என் பார்வையால் அவளை அளந்தேன். !
'' ம்ம்.. ஆமா.. !!'' பளீர் சிரிப்பு.
'' என்ன விசேசம்.. ??''
'' பொண்ணு பாக்க வராங்க.. !!'' அவள் முகம் முழுவதும் வெட்கம் படர்ந்தது.
'' வ்வாவ்வ்.. !! சூப்பர்.. !! யாரு.. ??''
'' சொந்தம்தான்.. !!'' முனகியபடி கதவுக்கு வெளியே வந்து நின்றாள்.
அவளை எனக்கு முழுசாக காட்ட நினைத்தாள் போல.. !!
இளஞ் சிவப்பில் ஃபாண்டசியான ஒரு புதுப் புடவை..!! உடம்பைக் கவ்விப் பிடித்ததை போல கச்சிதமான ப்ளவுஸ்..!! நேர்த்தியான புடவைக் கட்டு.. !! சைடில் அவள் இடுப்பு கொஞ்சமாகத் தெரிந்தது.. !!
'' அசத்தல் சத்யா.. !! நீ புடவை கட்றது இதான் பர்ஸ்ட் டைமா.. ??''
'' ம்ம்.. !!'' வெட்கம். முகத்தில் ஒருவித நாணம். ''ஆமா..!!''
'' சூப்பரா இருக்கப்பா.. !! யாரு கட்டிவிட்டா.. ??''
'' அம்மா.. !!''
நான் மேலும் கேட்கும் முன்.. என் வீட்டுக்குள் இருந்து என் தங்கை கையில் ஒரு குச்சிப் பையுடன் வெளியே வந்தாள். அதில் என் அம்மாவின் புடவை ரவிக்கை எல்லாம் இருந்தது.. !!
என் தங்கையைப் பார்த்ததும் சத்யா.. அவளிடம் கேட்டாள்..!!
'' உங்கம்மாக்கு.. இப்ப எப்படி இருக்கு விஜி.. ??''
'' ம்ம்.. நல்லாருக்கு..!!'' முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கடனே என்பதைப் போல முனகினாள்.
'' அங்க... கூட யாரு இருக்கா.. ??''
'' நான் மட்டும்தான்..! என்ன பண்றது கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போனாலும் அங்க போயும் நிம்மதியா இருக்க முடியல. எல்லாத்தையும் நாமதான் பாக்க வேண்டியதா இருக்கு..! இனி நான் என் வீட்டுக்கு போயி குளிச்சி சாப்பிட்டு அவசர அவசரமா ஓடனும்..! என் புருஷனை கவனிக்கவே முடியறதில்ல..! அங்க அப்படித்தான் ராத்திரில.. கொசுக் கடில தூங்கவே முடியறதில்ல..! எங்கம்மாள வீடு கொண்டு வந்து சேத்தறதுக்குள்ள.. நான் காடு போய் சேந்துருவேன் போலருக்கு.. !!'' என்றாள்.
என் தங்கையின் கண்களில் கண்ணீர் வராதது ஒன்றுதான் குறை..!!
எரிச்சலுடன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி நின்று பல் தேய்க்க ஆரம்பித்தேன்.. !!
நான் திரும்பி நின்று பல் தேய்க்க.. என் தங்கை என்னைக் கேட்டாள்.
'' பணம் ஏதாவது ரெடி பண்ணியாடா.. ??''
''ம்கூம்.. !!'' நான் அவளைப் பார்த்து குறுக்காக தலையை ஆட்டினேன்.
அவள் முகத்தில் அதீத எரிச்சல் படர்ந்தது. என்னை கடுமையாக முறைத்தபடி சொன்னாள்.
'' என்னடா இவ்ளோ அசால்ட்டா இருக்க..? நான் எவ்ளோ இதா சொல்லிருந்தேன்.? இப்ப நான் என் புருஷனுக்கு என்ன பதில் சொல்றது.. ??''
சத்யா முன் அவள் என்னை அவ்வளவு இளக்காரமாகப் பேசியது என்னை மிகவும் வருத்தப்பட வைத்தது.
சத்யாவுக்கே என் தங்கையைப் பற்றி தெரியும்தான். ஆனால் அதற்காக.. இப்படி பேசுவது என் நிலையை தாழ்த்தும் என்று எனக்கு கோபம் வந்தது.
ஆனால் நான் இப்போது கோபப் படும் நிலையில் இல்லை என்பதால்.. அமைதியாக பல்லைத் தேய்த்துக் கொண்டிருந்தேன்.. !!
'' உன்ன நம்பி.. நானும் அவருகிட்ட சொல்லிட்டேன்.. இப்ப நான் என்னடா பதில் சொல்லுவேன்.. ??'' அழுவதைப் போலக் கேட்டாள்.
நான் எச்சிலைத் துப்பி விட்டு அவளைப் பார்த்தேன்.
'' ஏய் பொலம்பி சாகாத..! உன் பணத்தை என்ன தூக்கிட்டா ஓடிருவேன்.. ??''
'' நேத்தே நீ இதத்தான்டா சொன்ன..! நானும் அவருகிட்ட இன்னிக்கு குடுத்துருவேனு சொல்லிட்டேன்.. !!'' அவள் குரல் சூடாகியது.
'' கேட்றுக்கேன். உன் பணத்தை குடுத்துருவேன் கவலை படாத..! விடு.. நானே வந்து உன் புருஷன் கிட்ட சொல்லிக்கறேன்.. !!''
'' ஆமா.. வெளங்கிரும்.. ! நானாவது நைசா பேசி சமாளிச்சிருவேன். நீ சொன்னா.. உன் முன்னாடி சரினு தலைய தலைய ஆட்டிட்டு அப்பறமா என்னை போட்டு உயிரை எடுப்பான் மனுஷன்.. ! சரி.. எப்ப தரே.. ??''
" ரெண்டு நாள்ள தரேன்.. !!"
'' இப்படி சொல்லிச் சொல்லியே என் தாலியை அறுக்கறடா...! சீக்கிரம் குடுக்க பாரு.. !!'' என்று புலம்பிக் கொண்டே பையுடன் நடையைக் கட்டினாள் என் தங்கை.. !!