ஞாயிறு, 24 நவம்பர், 2024

அற்புத ரோஜா -5

 உண்மையை எங்கும் தேட வேண்டாம்.!

உனக்குள் இருக்கிறது உண்மை.!

உனக்குள் திரும்பு, உள்ளே குதி, உண்மை புலப்படும்.. !!


****


“மாமா.. அப்பாகிட்ட சொல்லிருங்க” என்றாள் கௌரி.

“என்ன சொல்லணும் கௌரி?” என்று அவளைப் பார்த்தார் கௌரியின் அப்பா. 

“அவளுக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பம் இல்லையாம்” பாயாசத்தைக் குடித்தபடி சொன்னார் சௌம்யாவின் அப்பா.

“ஏன்?”

கௌரி உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கினாள். 

“என்னைப் பொறுத்தவரை.. அதாவது நான் பாத்தவரை குடும்பம்ங்கறது இங்க மலர் மாலை இல்லை. சிலுவை. ஸோ.. நான் இப்பவே சிலுவை சுமக்க விரும்பல”

“உனக்கு யார் சொன்னது குடும்பம்னா சிலுவைனு”

“யாரும் சொல்ல வேண்டியதில்ல. நான்தான் பாக்கறேனே..  குடும்பப் பொறுபுப்புன்ற பேர்ல எத்தனையெத்தனை சுமைகள் இருக்குன்னு”

“அப்ப.. உங்களை பெத்த நாங்கள்ளாம் சந்தோசமா இல்லையா?”

“அப்பா.. எதுலயுமே சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும். ஆனா பல பேர் வாழ்க்கை சிலுவைலதான் அறையப் பட்டிருக்கு. ரீஸண்டா ஒரு புதுக் கவிதை படிச்சேன். சொல்றேன் கேளுங்க. 

‘எந்த தரிசனம் பெற்றதில்லை.

என் பிறப்பின் ரகசியம் அறியும் முன்பே குடும்பச் சிலுவையில் அறையப் பட்டேன் நான்!’ 

இதனோட பொருள் என்ன தெரியுமா? ஏசுநாதர் தீர்க்க தரிசனம் அடைஞ்சதால சிலுவைல அறையப் பட்டார். நானோ எந்த தரிசனமும் பெறல, ஏன் பிறந்தேன்னுகூட எனக்கு தெரியாது. அதுக்கு முன்னாலயே குடும்பச் சிலுவைல அறையப் பட்டுட்டேன் அப்படிங்கறத சொல்றதுதான் இந்தக் கவிதை. அதாவது வாழ்க்கைல எந்தவித தீர்க்க தரிசனமும் பெறாமலேயே சிலுவை சுமக்கிறது. அந்தளவுக்கு குடும்பப் பொறுப்பு சுமையாகிருச்சு”

“எங்களுக்கெல்லாம் நீ சொல்ற அளவுக்கு சுமையா இல்லையே?”

“அப்பா.. சுமப்பதால் சுமையல்ல சிலுவை. சுமத்தப்பட்டிருப்பதால்தான் சுமை. குடும்ப பொறுப்பை விரும்பி ஏத்துகிட்டா அது சுமையல்ல. ஆனா விருப்பம் இல்லாம ஒருத்தர் மேல சுமத்தப்பட்டா அது சுமைதான். புரியுதா?”

“புரியுது. நீயா சுமக்க முன் வரணும்னு விரும்பற?”

“ஆமா. நான் ஏன் பிறந்தேன்னு தெரிஞ்சுக்காட்டாலும் பரவால்ல. ஓரளவு வாழ்க்கைன்னா என்னன்னு உணர்ந்துட்ட பின்னாலயாவது கல்யாணம் பண்ணிக்கறேன்”

“வாழ்க்கைன்னா என்ன? மனுச வாழ்க்கைல.. ஒரு மனுசனுக்கு இருக்கற பொறுப்புகளை தட்டிக் கழிக்காம எல்லாத்தையும் ஏத்துகிட்டு சிறப்பா நடத்தறதுதான் வாழ்க்கை” என்றார் கௌரியின் அப்பா. 

சௌம்யா குறுக்கிட்டுச் சொன்னாள்.

“அதுக்கு பேர் வாழ்க்கை இல்ல மாமா.. கடமைகள்! கடமைகளைத்தான் வாழ்க்கைனு நெனைச்சுட்டு இத்தனை காலமும் நீங்க வாழ்ந்துட்டிருக்கீங்க. அந்த அளவுக்கு வாழ்க்கைனா என்னன்ற அடையாளமே யாருக்கும் தெரியாம போயிருச்சு. கௌரிக்கா வாழ்க்கையை தெரிஞ்சுக்க விரும்பறா. விட்றுங்க. அக்காளோட கடமைகள் அக்காளுக்கும் தெரியும். ஆனா அதுவே வாழ்க்கை ஆகிறாது. வாழ்க்கையைப் பத்தி பல பேர் பலவிதமா சொன்னாலும். தன்னோட வாழ்க்கையைப் பத்தி தானே தெரிஞ்சுகிட்டு வாழ்றதுதான். ஒரு மனுச பிறப்புக்கான அழகு. நம்ம வாழ்க்கையைப் பத்தி பிறர் சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்னா நாமளும் வாழ்றோம்னு சொல்றதுல அர்த்தமே இல்ல. பிணங்களா நடமாடிகிட்டு இருக்கறதுக்கு பேர் வாழ்க்கை ஆகாது மாமா”

“யம்மாடி.. ம்ம்.. அப்றம்..?”

“அப்றம்.. ம்ம்.. எப்பொருள் யார் யார் வாய் கேட்பிணும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அதாவது.. தெரிஞ்சோ தெரியாமலோ நமக்கு ஆறறிவு இருக்குன்னு பீத்திக்கறோம். ஆனா அது எதுக்காக இருக்குன்னு நிச்சயமா நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஆறறிவு பேச மட்டும்தான். அது ஒரு தகவல் பறிமாற்ற மொழி. மொழியறிவுதான் ஆறாம் அறிவுன்னா.. அறிவைப் பத்திப் பேசக் கூடிய தகுதியே நமக்கு சுத்தமா இல்லைனு அர்த்தம்”

“சரி.. நீதான் சொல்லேன். ஆறாம் அறிவுன்னா என்ன?”

“அது என்னன்றத விட எதுக்குனு பாப்போம். யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிராம சுயமா.. அதை நாமே பகுந்தறிந்து கண்டுணரத்தான் ஆறறிவு. உதாரணத்துக்கு சொல்றேன். இன்னிக்கு வாழ்க்கையைப் பத்தி பலவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கு. ஆனா வாழ்க்கையை உணர்ந்தவங்க குறைவுதான். வாழ்க்கையைப் பத்தி பேசறவங்களுக்கெல்லாம் வாழ்க்கைனா என்னன்னே தெரியாது. தெரிஞ்சா வாழ்க்கையை பத்தி பேச மாட்டாங்க. வாழ்வாங்க. உங்களுக்கு புரியற மாதிரி இன்னும் சுலபமா சொல்லணும்னா. ஞானிகளைத் தவிர யாரும் வாழ்க்கையை உணர்ந்தவங்க இல்ல. ஞானம் உணரப்படறது. பேசப் படறது இல்ல. அது மாதிரிதான் வாழ்க்கையும். வாழ்க்கை வாழப் படணும். பேசப்படக் கூடாது. பேச்சு கூட இல்லை. சண்டை சச்சரவுனு ஒரே சர்ச்சை. மொழிப் போர் சர்ச்சைகளா அறிவாளிகள் மத்தியில மாறி நிக்குது வாழ்க்கை. இத்தனைக்கும் மேல வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாம கோடான கோடி மக்கள் வாழ்ந்துட்டிருக்கோம்ன்றதுதான் பரிதாபத்துக்குரிய உண்மை.”

“அப்போ.. நாங்ககூட அப்படித்தானா?”

“அப்படியேதான். நெஜமாவே நீங்க வாழ்க்கைய உணர விரும்பல. உங்களுக்கு எல்லாம் தெரியும்ங்கற ஆணவத்தைக் கை விட்டு எதுவுமே தெரியாதுங்கற உண்மையை ஒத்துக்குங்க. ஒரு நாள் உண்மை உங்களுக்கு புலப் படும். அகம்னா என்ன? வாழ்க்கைனா என்னன்னு. புறம் சார்ந்த கடமைகள் மட்டுமே வாழ்க்கை இல்லேனு.!  கை கால் முகம்னு ஒவ்வொரு உறுப்பும் சேந்ததுதான் ஒடம்பு. ஆனா எந்த ஒரு தனி உறுப்பு மட்டுமே ஒடம்பு ஆகிராது. அது மாதிரிதான். ஒடம்போட ஒரு பார்ட் மாதிரிதான். வாழ்க்கையோட ஒரு பார்ட் கடமை. அப்படி ஓராயிரம் கடமைகள். இது முழுக்க புறம் சார்ந்த நிலை. இந்த புறக் காரணிகள் மட்டுமே வாழ்க்கை ஆகிறாது. இதே அளவுல அகம்னு ஒண்ணு இருக்கு.! கடலுக்கு வெளிய இருக்கறது மட்டும் உலகம் இல்ல. கடலுக்குள்ளயும் உலகம் இருக்கறது மாதிரிதான்.! ஆனா நாம அக நிலை பத்தி சுத்தமா.. ஒண்ணுமே தெரியாத மக்குகளா இருந்துட்டு பெரிய அறிவாளிகனு பீத்திக்கறோம். இது மட்டுமில்ல மாமா.. இன்னும் இந்த கடவுள் உண்மை மெய்ப்பொருள் சத்தியம்னு சர்ச்சைக்குரிய எல்லாமே எதுன்னு புரியும்”

“சரி.. கடவுளப் பத்தி என்ன? உண்டா இல்லையா?” என்றார் மாமா. 

சிரித்தாள் சௌம்யா.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!




வெள்ளி, 22 நவம்பர், 2024

யாமினி

 ஜன்னலைத் திறந்தபோது எதிர் வீட்டுப் பெண் யாமினி தெரிந்தாள்.

 தன் வீட்டுக்குள்ளிருந்து அப்போதுதான் வெளியே வந்து கொண்டிருந்தாள். 

ஜன்னல் திறக்கப் படுவதைப் பார்த்துவிட்டு, அதன் வழியாகத் தெரியும் அவனைப் பார்த்தாள்.

வெளியே வந்தவள் புடவை கட்டி பளிச்சென்று இருந்தாள். இளநீலக் கலர் புடவை, புதுசாகத்தான் இருக்க வேண்டும். அவள் மீது காலை வெயில் பட்டு அவளை தகதகவெனக் காட்டியது.

அவனைப் பார்த்தவள் விகல்பமின்றி வெள்ளிப் பற்கள் காட்டிப் புன்னகைத்தாள். பளிச்சென நிறம் காட்டும் அவள் முகம் பப்பாளிபோல் பளபளத்தது.

ஒருநொடி அவனுக்குள் அந்த திகைப்பும் வியப்பும் எழுந்தது. ஆனால் உடனே அணைந்தது. 

 அவனும் புன்னகைத்தான்.

"ஹாய்"

"ஹாய்"

அவள் குளித்து முடித்தவுடன் புடவை கட்டிக்கொண்டு கோவிலுக்குச் சென்று வந்திருக்க வேண்டும்.

அவள் நெற்றியில் திருநீரு, குங்குமம், பொட்டுக்கள் என்று அடுக்கடுக்காக இருந்தது. பிரிந்து, முதுகில் படர்ந்த பின்னப்படாத கூந்தலில் பூ இருந்தது.

"லீவ்வா இன்னிக்கு?" கதவைப் பூட்டிவிட்டுத் திரும்பிப் பார்த்து அவனைக் கேட்டாள்.

திரும்பிய கணத்தில் அவளின் சரிவான இடுப்பையும், இடது பக்க மார்பையும் சில நொடிகள் அவனுக்குக் காட்டினாள். 

அந்தக் காட்சியில் அவனுக்குள் மின்னலடித்தது. 

"ஆமா.." அவளை ரசித்துப் பார்த்தான். 

அவள் இடது பக்கமாக தோளில் சரிந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள். கை மேலே போனபோது இடுப்புப் புடவை நெகிழ்ந்தது. புன்னகைத்தாள். 

காலை வெயில் முகத்தில்  பட்டு சிறிய மூக்கின் முனை பளபளத்தது, படுத்த மாதிரி மூக்கு. ஆனால் அழகாய் இருந்தது.

 படியில் நின்று புடவை முந்தானையை சரியாக எடுத்துவிட்டுக் கொண்டாள். நிமிர்ந்து அலட்சியமாக அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் இருப்பது அலட்சியமா இல்லை கர்வமா என்று அவனுக்கு சரியாகப் புரியவில்லை. 

எதுவாயிணும் அவள் ஒரு பெண்ணல்லவா? அவள் அப்படித்தான் இருப்பாள். அவளிடம் ஆணை அடிபணிய வைக்கும் சக்தி இருக்கிறதல்லவா?

"எனக்கு டைமாச்சு.. பை" டாடா காட்ட, நாசுக்காக கையை உயர்த்தினாள்.

அவன் டக்கென்று சொன்னான்.

"சூப்பர்.."

அவள் ஒரு நொடி குழம்பிவிட்டாள். அப்பறம் கேட்டாள். 

"என்ன?"

"புடவைல நீ அட்டகாசமா இருக்க"

அவளுக்கு முகம் அடுத்த நொடியில் பூரித்து விட்டது. ஆம். அவள் பெண்ணல்லவா.!

"தேங்க் யூ.." மலர்ந்த முகத்துடன் அழுத்திச் சொன்னாள்.

அவளின் கன்னங்கள் குழைந்து கண்கள் சுருங்கியது.

"ஏதாவது விசேசமா?" அவன் கேட்டான். 

"அதெல்லாம் இல்ல.. சும்மா.."  சட்டென்று கீழ் உதட்டை தடவிக்கொண்டு சிரித்தாள்.

"அடிக்கடி இப்படி புடவை கட்டு.. புடவைலதான் நீ ரொம்ப அழகா இருக்க.."

அவன் பொய் சொல்லவில்லை. ஒருவேளை அவன் பொய்யே சொல்லியிருந்தாலும் அவள் அதை முழு மனதாக நம்பியிருப்பாள். 

பெண்மையின் நாணம் அவளுக்குள் துளிர் விட்டது.

"நெஜமாவா?" அவனைப் பார்த்துக் கேட்டாள். 

ஜன்னல் கம்பிகள் அவன் முகத்தைக் கோடு கிழித்துக் காட்டியது. 

"பொய்யில்ல. அட்டகாசமா இருக்க. கம்பெனில வேணா கேட்டுப் பாரு.. எல்லாரும் இன்னிக்கு நீ அழகாருக்கேன்னுதான் சொல்லுவாங்க.."

"ம்ம்.." படியிறங்கினாள். "தேங்க் யூ"

"எந்த கோயில் போன?"

"இங்கதான்.. நம்ம வினாயகர் கோயில்"

"கலக்கலா இருக்க"

"தேங்க் யூ.! சரி.. நான் வரேன்.." ஜன்னல் வழியாக அவன் முகத்தைப் பார்த்து கனிந்த புன்னகை காட்டினாள். 

அவள் திருமணமானவள். பள்ளி செல்லும் பையனுக்கு அம்மா. அதிக உயரமில்லை. அளவான உயரம். கூடுதல் நிறம். மிதமான உடம்பு. ஆனால் வசீகரமான அழகு. அந்த அழகு இப்போது எல்லை மீறி மிளிர்கிறதாய் தோன்றியது.

அவள் அப்படியே போயிருக்கலாம். அவளது நேரம், அவளை அப்படிப் போக விடவில்லை. 

அவள் என்ன செய்வாள்? கிரகங்கள் அவளை ஆளுகின்றனவே.! 

அவள் வணங்கும் தெய்வம் அவளின் துயர் துடைக்கலாம். ஆனால் கிரகங்கள் கொடுக்கும் துயரைத் தடுக்க முடியாதே.?

 அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி ஹாரன் அடித்தாள். 

“பீக் பீக்” 

ஐன்னலை வழியாக எட்டிப் பார்த்தான். அவள் அவனைத்தான் பார்த்தாள். அவள் கண்கள் அவனை எதிர் நோக்கியிருக்க, உதடுகள் வசீகரமாகப் புன்னகைத்தன.

ஹேண்டில் பார் மீது அவள் கைகள் இருக்க,  இடது பக்க மார்பும் இடுப்பும் நன்றாகத் தெரிந்தது. சரிந்த மார்பு, ஆனால் ரவிக்கையின் பிடிப்பில் அது எடுப்பதாகத் தெரிந்தது. 

"அகெய்ன் தேங்க் யூ" என்றாள். 

தன் அழகைப் பாராட்டி அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் காலை நேரத்தை உற்சாகப் படுத்தியிருந்தது. அதற்கான நன்றியை மீண்டும் தெரிவித்தாள்.

சட்டென்று அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவளுடைய அழகு ஒரு நொடி அவனைச் செயலிழக்கச் செயது விட்டதைப் போலிருந்தது. 

அவளையே பார்த்தான். அவளும் பார்த்தாள். இதுவரை இல்லாத பார்வைகள்.!

"ஈவினிங் வீட்ல இருப்பீங்களா?" முகத்தை நன்றாக அவன் பக்கம் திருப்பிக் கேட்டாள் அவள். 

பேசியிருக்க வேண்டாம். ஆனால் பேசி விட்டாள். 

அது அவனுக்கே தெரியாது. அவன் எந்த முடிவுக்கும் வந்திருக்கவில்லை.

"சொல்ல முடியாது" எட்டிப் பார்த்து சிறிது குரல் உயர்த்திச் சொன்னான்.

"நைட்..? மறுபடி ஊருக்கா அப்போ?" அவள் இப்போதும் நகர்வதாக இல்லை.

“போறதா என்னன்னு தெரியல”

“ஏன்?”

"லிப்ஸ்டிக் போட்றுக்கலாம்" மெலிதான அவள் உதடுகளைப் பார்த்தபடி சொன்னான்.

அது ஈரமாக, பளபளப்பாக இருந்தது. கவர்ச்சியாக இருந்தது. 

"ஏன்..?" லேசாகப் புருவம் தூக்கினாள்.

"உன் ஸ்வீட்டான லிப்ஸ் இன்னும் க்யூட்டா இருந்திருக்கும்"

சட்டென்று ஒரு வெட்கம் அவள் முகத்தை இன்னும் அழகாக்கியது.

"ஹையோ.. இதுக்கே இப்படி.." பளீர் புன்னகை காட்டித் தலையசைத்தாள். 

நம்ப முடியாத வகையிலான பேச்சு. இதுவரை இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டதில்லை. 

இந்தப் பேச்சு அவளுக்கு கிளர்ச்சியளித்தது. பெண்மைக்குள் எதையோ மலர வைத்தது.

இடது கையால் உதடுகளை வருடிப் பார்த்துக் கொண்டாள். மூக்கைச் சுழித்துக் கொண்டாள். 

முன்னால் குனிந்து ஸ்கூட்டியின் கண்ணாடியில் தன் உதடுகளை மூக்கை எல்லாம் பார்த்துக் கொண்டாள். 

"எனக்கு லிப்ஸ்டிக் போடுற பழக்கம்லாம் இல்ல" அவனைப் பார்த்துச் சொன்னாள்.

"இப்போ போட்டிருந்தா அட்டகாசமா இருந்துருக்கும்"

தன் அழகுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தில் அவள் பெண்மை பூரித்தது.

“அப்படியா?”

“ஆமா.. க்யூட் லிப்ஸ்..”

“தேங்க் யூ ஸோ மச்..”

காது பக்கத்தில் காற்றில் அசைந்த முடியை ஒதுக்கிக் கொண்டாள். முடி ஜிமிக்கியில் சிக்கியது. கழுத்தைச் சரித்து தலையை சாய்த்து நாசுக்காக முடியை எடுதது விட்டுக் கொண்டாள்.

"நைட் இருப்பீங்களா?" மீண்டும் அவள் கேட்டாள்.

"இருக்கணுமா?" 

ஜன்னலில் இருந்து நகர்ந்து கதவருகே வந்து கேட்டான். 

சிரித்தாள். 

"மறுபடியும் ஊருக்கு போறீங்களா?"

"நோ ஐடியா.."

"உங்க வீட்ல எப்ப வருவாங்க.. ?"

"ஒன் வீக் ஆகும். அவங்கம்மாக்கு ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பின்னாலதான்.. இங்க வர முடியும்"

"அதுவரை நீங்க..?" அவள் கேள்வியில் குழப்பமும் ஆர்வமும் தெரிந்தது.

அவளை ஆழப் பார்த்தபடி கதவுக்கு வெளியே சென்று தெருவைப் பார்த்தான். 

காலை நேரம்தான். ஆனால் எந்த பரபரப்பும் இல்லை. வீதி அமைதியாக இருந்தது.

பெரிய வீதி இல்லை. அது சிறிய சந்து. அதன் எதிரெதிராக அவர்களது வீடுகள். வாடகை வீடுகள்.!

பொதுவாகவே இது அமைதியான ஏரியா. இந்த வீதியில் அவ்வளவாக ஆள் நடமாட்டமும் இருக்காது. 

"நான் இருக்கணுமா வேண்டாமா?" அவளைக் கேட்டான். 

திகைத்த மாதிரி பார்த்தாள்.

“என்னை கேக்கறீங்க?”

“நீதான கேட்ட?”

"புரியல.. என்ன.. ?"

"நான் இருக்கறது உனக்கு நல்லதா கெட்டதா..?"

"எ.. என்ன கேக்கறீங்க.." அவளுக்குள் குழப்பம்.

"நான் என்ன பேசறேனு உனக்கு புரியும்?"

"இ.. இல்ல.. புரியல.."

"வண்டியை ஆப் பண்ணு.. புரியும்"

"எனக்கு டைமாச்சு. நான் இப்ப போனாதான் கரெக்ட் டைமுக்கு பஞ்சிங் வெக்க முடியும்"

அவன் சொன்னான்.

"அப்படியா? சரி.. அப்ப கிளம்பு”

அவள் இப்போதாவது கிளம்பியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை.

“எனக்கு புரியல. சொல்லுங்க. என்ன?” மீண்டும் அவனைக் கேட்டாள். 

“போய்ட்டு வா. ஈவினிங் நான் இருந்தா பேசிக்கலாம்”

“இல்ல.. இப்ப சொல்லுங்க?”

அவளுக்கு எதையும் மாற்றி அமைக்கும் சக்தி இல்லை. அதனால்தான் அத்தனை பிடிவாதம்.!

நிருதி கேட்டான்.

“நான் இருக்கதைப் பத்தி நீ ஏன் இவ்வளவு அக்கறையா கேக்கறேனு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"அ.. அது.. சும்மா..  தனியா இருப்பீங்கள்ள.. அதான்.." அவளிடம் ஒருவிதமான தடுமாற்றம். கூடவே வழிசலான புன்னகை.

கேலியாகச் சிரித்தான். 

"எ.. என்ன சிரிக்கறீங்க..?"அவள் முகத்தில் மிகப்பெரிய குழப்பம் உண்டாகியிருந்தது. 

"வேற என்ன பண்ணச் சொல்ற யாமி..?" எனக் கேட்டவனின் குரல் மாறியிருந்தது.

"என்ன..? ஏன்..? எல்லாம் ஒரு மாதிரியாவே பேசறீங்க..? எனக்கு ஒண்ணுமே புரியல. சரி நான் கிளம்பறேன். இப்ப பேச டைம் இல்ல.." தன் இடது கையில் அப்பியிருந்த குட்டி வாட்ச்சைப் பார்த்துக் கொண்டாள்.

“சரி..” அவன் புன்னகை காட்டினான். 

அவள் வண்டியைக் கிளப்பத் தாயாரானாள்.  

வலது கை டர்ர். இடது கை சடக். பிரேக்.!

ஓரளவு அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டாள் என்று தெரிந்தது. 

“ஐயோ..” என்றாள். 

அவன் கேட்டான்.

"மறுபடி எப்போ?"

அவனைப் பார்த்தாள், முகம் மாறிவிட்டது.

"என்னது?"

"மீட்டிங்..?"

"புரியல..?"

"நைட் நான் வரப்போ ரெண்டு மணி.."

அவள் பார்வை கூர்மையானது. முகத்தில் புன்னகை மறைந்தது. இறுக்கம்.

நிருதி, "நான் வந்ததை நீ கவனிக்கல போலருக்கு.." என்றான்.

"ஏ.. ஏன்?" அவள் முகம் இறுகி குரல் மெல்ல நடுங்கியது. 

"நான் வீட்டுக்கு வந்து லைட் போடவே இல்ல. ஜன்னலை மட்டும் தெறந்து வெச்சேன். அப்ப ஒரு ரெண்டு நிமிச கேப்ல.. உன் வீட்லருந்து ஒரு ஆள் வெளிய போறதைப் பாத்தேன்"

அவள் முகம் இருண்டது. குப்பென வியர்த்துப் போனாள். ஹேண்டில் பாரைப் பிடித்திருந்த அவள் விரல்கள் அதிர்ந்து நடுங்கின. 

தடுமாறித் திணறினாள். நெஞ்சம் நடுங்கியது. 

"எ.. என்ன சொல்றீங்க..?"

"ஆனா.. அது உன் புருஷனா இருக்க முடியாதுனு ஊருக்கே தெரியும்”

பதட்டத்தில் அவள் உதடுகள் நடுங்கின. கண்களில் அதீத பயம்.

"எனக்கு தெரியும் யாமி? பாத்துட்டேன். அவனை வெளிய அனுப்பிட்டு நீயும் கூடவே வந்த. அவன் பைக்கை கிளப்பிட்டு போனப்றம்தான் நீ வீட்டுக்குள்ள போய் கதவை சாத்தின. என் வீட்ல ஆள் இல்லேன்னு நீ நெனைச்சிட்ட போல. இந்த பக்கம் நீ திரும்பிக்கூட பாக்கல. பாத்துருக்கலாம்”

அரண்டு போனாள் யாமினி. அவள் முகம் ரத்தமிழந்து வெளுத்தது.

அவள் முகமும் கழுத்தும் வியர்த்துக் கொட்டத் தொடங்கி விட்டது. கைகளின் நடுக்கம் கூடிவிட்டது. உதட்டைக் கவ்விக் கொண்டாள்.  அவனைப் பாக்க. முடியாமல் திணறினாள்.

"நீ ரொம்ப நல்ல பொண்ணுதான் யாமி.. ஆனா இப்படி ஒரு காரியம் பண்ணியிருப்பேனு நான் நெனைச்சே பாக்கல. இட்ஸ் ஓகே..”

அவளால் வாயைக்கூடத் திறக்க முடியவில்லை.

என்ன சொல்லுவாள்? இப்படி ஒரு ஆபத்தில் மாட்டிக் கொள்வோம் என்று அப்போது அவள் துளிகூட நினைத்திருக்கவில்லையே!

"சரி.. போ.. உனக்கு இப்ப பேச நேரம் இருக்காது. டைமாச்சு. டேக் கேர்" புன்னகையுடன் சொன்னான் நிருதி.

சட்டென வண்டியை ஆப் பண்ணி விட்டாள் யாமினி. உதடுகள் துடிக்க அவனைப் பார்த்தாள். வாயைத் திறந்தாள். ஆனால் அவளால் பேச முடியவில்லை.

மெல்லச் சொன்னான்.

"உன்னை ரொம்ப நல்ல பொண்ணுன்னு நெனச்சிருந்தேன் யாமி.. நேத்து ராத்திரி வரை.."

அவள் கண்களில் நீர் தேங்கியது. அடுத்த நொடியே அந்தக் கண்ணீர் மளுக்கென வெளியே வந்தது. 

"ஸ்ஸ்ஸ்ஸாரி.."

"நம்பறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. இதே வேற யாராவது உன்னைப் பத்தி அப்படி சொல்லியிருந்தா நான் நம்பிருக்கவே மாட்டேன். ஆனா.. நானே கண்ல பாத்துட்டேன். நம்பாம இருக்க முடியல”

வண்டி பேலன்ஸ் இழந்து நடுங்கியது, ஸ்டேண்ட் போட்டுவிட்டு இறங்கி விட்டாள். சட்டென மூக்கை உறிஞ்சி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அவள் உடம்பே பதறிக் கொண்டிருந்தது. முகம் இருண்டு கண்கள் பரிதவித்துக் கொண்டிருந்தன.

"எப்படி நீ இப்படி ஒரு காரியம் பண்ணத் துணிஞ்ச.? நீ எவ்ளோ நல்ல பொண்ணா இருந்த..? எனக்கு அதை நெனச்சாதான் தாங்கவே முடியல" நிருதி சொல்ல,

அவள் "ஐயோ" எனப் பதறி முனகி, சட்டென மடங்கி அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.. !!



தொடர்ச்சி....


 நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


விரும்பிப் படித்தவை.. !!