திங்கள், 11 நவம்பர், 2024

அற்புத ரோஜா -1

 இது கருத்தாக்கங்களை மட்டுமே கொண்ட கதை. காட்சிகளையோ உணர்ச்சிகளையோ முதன்மைப் படுத்தியது அல்ல.. !!


****


சொல்லிப் புரிவதல்ல, அனுபவத்தில் தெளிவது.. !!


****




பார்வை இல்லாதவர்களுக்கு பகலாக இருந்தால் என்ன? இரவாக இருந்தால் என்ன? 

இரண்டுமே ஒன்றுதான்.!

ஒரு ஞானிக்கும் அப்படித்தான். பகலுக்கும் இரவுக்கும் வேற்றுமை கிடையாது.!

பார்வை இல்லாதவருக்கோ நிரந்ததர இருள். 

ஞானிகளுக்கோ நிரந்தர ஒளி.. !!





1




தன்னுணர்வு நிரம்பிய நிலையில், மோனத்தில் லயித்து நின்றிருந்தாள் செளம்யா.


அவளது கையில் மரத்தால் செய்து பாலிஷ் செய்யப்பட்டிருந்த ஒரு சிறு குழந்தை இருந்தது.


திருப்பத் திருப்பி  அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் நேர்த்தி மட்டும் அதற்குக் காரணமில்லை.


அந்த நொடியில் அவள் மனம் வெறுமையைத் தொட்டிருந்தது.


அவள் அந்தச் சிற்பத்தை ஆராயாமல், தன்னுள் நிறைந்த உணர்வை உணர முயன்று கொண்டிருந்தாள்.


அவளின் கண்கள் அந்த பொம்மைச் சிற்பத்தின் மீது பதிந்திருந்தாலும் அவளது கவனம் அதன் மீது இல்லை.


கையில் அந்த மரச் சிற்பக் குழந்தையைப் பிடித்தபடி தன் மனத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.


அவளது மனசு முழுக்க சூனியத்தில் சூழ் கொண்டிருந்தது. 


மனதில் எந்தவிதமான எண்ணங்களும் இல்லை. அதனால் அவளுக்குள் எந்தச் சலனங்களும் எழவில்லை. அதனால் அமைதியான அந்தப் பேரின்ப உணர்வு அவளை ஆக்ரமித்திருந்தது.


தன்னுணர்வில் நிறைந்து, பிரபஞ்சப் பெருவெளியோடு கலந்து போயிருந்தபோது, அவளின் செவியருகே,

“சௌமி” என்ற குரல் கேட்டது. 


உணர்வு கலைந்து திரும்பினாள். அவள் உடம்பைத் திரும்ப விடாமல் அவளை இரண்டு கைகளாலும் வளைத்து அணைத்துக் கொண்டான் நிருதி. 


உடனடியாக, “நான்தான்” என்றும் சொன்னான். 


முகத்தை மட்டும் திருப்பி கடைக் கண்ணால் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் எந்தப் பொருளும் இருக்கவில்லை. வெற்றுப் பார்வை அது.!


“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” மெல்லிய குரலில் கேட்டான்.


அவள் உதடுகள் மட்டும் புன்னகையில் மலர்ந்தன. 


மெதுவாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பின் உடல் சுகத்தில் லயித்து அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.


அவளின் மிருதுவான கன்னத்தில் தன் உதடுகளைப் பதித்தான் நிருதி.


“சௌமி..”


“ம்ம்” மிக மிக அமைதியாக வெளிப்பட்டது அவளின் குரல்.


“என்னாச்சு?”


“.....” அவளிடமிருந்து பதில் இல்லை.


“ஏன் வந்துட்ட?”


“சும்மா’தான்”


“சரி.. வா போலாம்”


மெதுவாக அவன் கைகளை ஒதுக்கி அவனிடமிருந்து விலகினாள்.


கையிலிருந்த மரச் சிற்பக் குழந்தையை அதற்குரிய ஸ்டேண்டின் மேல், எடுத்தபோது இருந்ததைப் போலவே நிறுத்தி வைத்தாள்.


“சௌமி.. அப்படியே..” என்று பல்லை இளித்தான் நிருதி. 


“ம்ம்.. அப்படியே?”


“ஒரே ஒரு..”


“நீ போ நான் வரேன்” என்றாள்.


“ப்ளீஸ் சௌமி.. ஒரே நிமிசம்தான். மறுபடி திருப்பி உனக்கே குடுத்துருவேன்”


“அதான்.. கன்னத்துல குடுத்துட்ட இல்ல.. அது போதும்”


“ப்ச்.. அது வேற.. ப்ளீஸ் ப்ளீஸ்..”


“எடத்தை காலி பண்றியா..” அவள் குரலில் சற்றே அழுத்தம் கூடியது. 


“சே.. கெடச்ச சான்ஸை மிஸ் பண்ணிட்டேன். சரி.. வா..” நெருங்கி அவள் கையைப் பிடித்தான். 


மெலிதாக முறுவலித்தாள் சௌமி.

“நீ போ.. நான் அப்றம் வரேன்”


“ஏன் சௌமி. என்னாச்சு உனக்கு?”


“ஒண்ணும் ஆகல. நீ போ”


“கௌரிதான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னா. வா போலாம்”


“பொய் சொல்லாத”


“பொய்யில்ல. நெஜமாத்தான்”


“என்னைக் காணம்னு நீதான் கௌரிக்காகிட்ட கேட்றுப்ப”


“ஆமா..” சிரித்தான். “ஆனா.. கௌரி உன்னை கையோட கூட்டிட்டு வரச் சொன்னா”


புன்னகை காட்டினாள்.

“சரி நட..” அவனுடன் அறைக்கு வெளியே வந்தாள்.


பக்கத்தில் இருந்த அடுத்த அறைக்குள் சென்றாள். அதுதான் அவளுடைய அறை.


கண்ணாடி முன் நின்று தன் உடலை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.


அவள் பின்னால் வந்து கண்ணாடி வழியாக அவளைப் பார்த்தான் நிருதி.

“நீ எப்படி இருக்கேன்னு சொல்லட்டுமா சௌமி?”


“வேண்டாம்” என்றாள். 


“இருந்தாலும் நான் சொல்லுவேன். இட்ஸ் மை ப்ளஸர். நீ சொல்ற மாதிரி பூவை வர்ணிக்கறது எவ்வளவு அதிபுத்திசாலித் தனமோ அது மாதிரி ஒரு பொண்ணை வர்ணிக்கறதும் அதி புத்திசாலித்தனம்தான். ஆனாலும் நீ அழகி. அதுவும் நீ எல்லாப் பெண்களையும் மாதிரி உடம்பால மட்டும் அழகி இல்ல. உள்ளத்தாலயும் அழகி” என்றான். 


மெலிதாக முறுவலித்தாள் சௌமி. 

“எவ்வளவு நாள் பயிற்சில கண்டுபுடிச்ச வார்த்தை இது?”


“கண்டு புடிக்கல. தோணுச்சு. சொல்லிட்டேன். ஏன்.. இந்த வார்த்தையும் பொருளற்றதா?”


“வார்த்தைகள் என்னைக்குமே உண்மையை உணர்த்த முடியாது நிரு. புரிய வெக்கலாம். ஆனா உணர வெக்கற தன்மை வார்த்தைகளுக்கு கிடையவே கிடையாது. வார்த்தைகளை வெச்சு உண்மைகளை உவமையாக்கலாமே தவிர, உண்மையை அழகாக்க முடியாது. அதனால…”


“அதனால..  கவிஞர்கள் பண்ற அதே அதி புத்திசாலித் தனத்த அல்லது அதி மேதாவித் தனத்த நீயும் செய்யாதே? ரைட்..? செய்ய மாட்டேன். இருந்தாலும்.. அப்பப்போ.. இது மாதிரி ஏதாவது உவமைகள் தேவைப் படுது.”


“ரைட் ரைட். நான் ஒரு பொண்ணு. அழகான இளம் பொண்ணு. உன்னோட மன மயக்கத்துக்கு இந்த வார்த்தைகளே போதுமானது. நட..”


வெளியே வந்து அறைக் கதவைச் சாத்திவிட்டு மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டே சொன்னாள் சௌம்யா.

“நீயும் கொஞ்சம் கொஞ்சம் வார்த்தைகளோட அர்த்தங்களைப் புரிஞ்சு பேசக் கத்துட்டே போலருக்கே..  எப்பருந்து..?”


“உன் உபதேசமெல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டேன்ல? ஆனாலும் உன்னளவுக்கு பேசக் கூடிய தகுதியெல்லாம் எனக்கு கிடையாது.”


“அனியாயத்துக்கு பொய் பேசாதே நிரு. சாமி கண்ணை குத்திரும்” என்றாள்.


சிரித்தான். “உண்மைதான் சௌமி. உன்னை லவ் பண்ற தகுதிகூட எனக்கில்லேனு ரொம்ப நல்லாவே தெரியும். என் அதிர்ஷ்டம் நீ எனக்கு மாமா பொண்ணா பொறந்து என்னையும் லவ் பண்ணிட்டிருக்க.. அதுவே பெரிய விசயம். அதுகூட நீ இப்படி ஒரு யோக நிலைக்குள்ள போறதுக்கு முன்னாலயே லவ் பண்ணிட்டதால.. இப்பவும் இந்த லவ் போய்ட்டிருக்கு”


“நிரு.. நான் ஒரு பொண்ணுதானே?”


“ப்யூர் கர்ள்”


“நீ ஒரு ஆண்ங்கறதுல உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”


“நோ..”


“ஒரு ஆணுக்கு ஒரு பொண்ணை லவ் பண்ணக் கூடிய தகுதி எப்படி இல்லாமப் போகும்? யோகம், எதையும் தெளிய வைக்குமே தவிர மறுக்க வைக்காது. புரியதா?”


“நான் சொன்னது ஆண் பெண் உடல் தோற்ற அடிப்படைல இல்ல சௌமி. அறிவு..”


“வாழ்க்கைத் துணைன்றது உடல் சார்ந்த ஆண் பெண் அடிப்படைலதான் இருக்கே தவிர அறிவு சார்ந்து இல்ல. குடும்பம் நடத்த ஆண் பெண் தகுதிதான் தேவை. வியாபாரம் பண்ணத்தான் அறிவு வேணும். நாம நடத்தப் போறது குடும்பம். வியாபாரமில்ல. ஆண் பெண் உறவை குடும்பம்ன்ற பேர்ல வியாபாரம் பண்றவங்களுக்குத்தான் அறிவுத் தகுதி வேணும். புரிஞ்சுதா?”


“ஸாரி சௌமி.. உணர்ச்சிவசப் பட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமா ட்ரை பண்ணி ஏதோ பேசிட்டேன்”


“தன்னைத் தானே உயர்த்திக்கறதும் தப்பு. தன்னைத் தானே தாழ்த்திக்கறதும் தப்பு. உள்ளது எதுவோ அதை அப்படியே ஏத்துக்கப் பழகிக்க. நீ பேசின வார்த்தைகளுக்கு நீதான் பொறுப்பு. அதை வெறும் வார்த்தையா பேசாம அதனோட தேவையையும் அர்த்தத்தையும் புரிஞ்சுக்க உன் அறிவை பயன்படுத்து. சரியாகிரும். அடுத்தது.. வாழ்க்கை முழுக்க முழுக்க எதார்த்தத்துலதான் இருக்கு. கற்பனைல இல்லை. அதாவது உணர்ச்சிகள்ள இருக்கு. அறிவுல இல்ல”


“புரியுது”


“ரெண்டு அறிவாளிக சேர்ந்தா சிறந்த பிஸினஸ் மேன்களா வரலாம். ரெண்டு உணர்ச்சியுள்ளவங்க சேர்ந்த நல்ல குடும்பத் தலைவர்களா வரலாம். காதல்லயும் குடும்பத்துலயும் அறிவு சேரவே சேராது. பிசினெஸ்ல உணர்ச்சி கூடவே கூடாது. இப்ப சொல்லு நாம பிசினெஸ் பண்ணப் போறமா? குடும்பம் நடத்தப் போறமா?”


“நூறு சதவிகிதம் குடும்பம்தான்..”


“இல்லை. தொண்ணூறு சதவிகித குடும்பம் பத்து சதவிகித பிஸினெஸ். வாழ்க்கையோட அத்தியாவசியத் தேவைக்கு பணம் வேணும். அதுக்கு ஒரு தொழில் வேணும். தொழிலை நாம கருணையோட நடத்த முடியாது. கருணைக்கு காசு கிடைக்காது. காசு கிடைக்காட்டி குடும்பமே நடத்த முடியாது. எதை எப்ப எங்க பயன்படுத்தணும்னு கத்துட்டாதான் குடும்பமும் நடத்த முடியும். சரியா?”


“ரொம்பச் சரி”


இருவரும் வெளியே சென்ற பின்னர் வீட்டுக் கதவைச் சாத்தினாள் சௌமி.


“நீ புத்திசாலிதான். ஆனா சில சமயங்கள்ள ரொம்ப புதிரா நடந்துக்கறியே அதான் என்னால புரிஞ்சுக்க முடியல” என்றான் நிருதி.

“அது என் சுபாவம்” என்றாள். “உண்மையச் சொன்னா நான் புத்திசாலி இல்ல. எதார்த்தவாதி” 

அவள் சொன்னது நிச்சயமாக அவனுக்குப் புரிந்திருக்காது என்று அவளுக்குத் தெரியும். ஆனால் வார்த்தைகளால் அதை விளக்க முயன்றால் அதுவும் ஒரு சொற்பொழிவாகப் போகும் என்று நினைத்து விளக்கம் சொல்வதைத் தவிர்த்தாள் சௌம்யா.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

வெள்ளி, 1 நவம்பர், 2024

வணக்கம் நண்பர்களே.. !!


என்னுடைய அனைத்துக் கதைகளும் இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படும். 

கதை படிக்க விருப்பமுள்ளவர்கள், அவரவர் சவுகரியப்படி கதைகளைப் படித்துக்கொள்ளலாம்.. !!

ப்ளே ஸ்டோரில் 'நான் நிருதி' என்கிற இந்த இந்த ஆப் கிடைக்கும்.. !!

https://play.google.com/store/apps/details?id=com.niruti.books

ப்ளே ஸ்டோரில் உங்கள் கருத்துகளை பகிரவும் மற்றும் ஐந்து நட்சத்திர (Five Star Rating) மதிப்பீட்டை வழங்கி ஆதரவு அளிக்கவும்.




விரும்பிப் படித்தவை.. !!