இலக்கிய அபத்தம்.. !!
பகுதி ஒன்று.!
இலக்கியம் என்பது இவ்வளவு விவாதத்துக்குரிய பிரச்சினையா என்ன.. ??
இலக்கியம் அப்படிப்பட்டதல்ல. ஆனால் இலக்கியவாதி எப்போதும் பிரச்சினைக்குரியவனாகவே இருக்கிறான்.
இலக்கியம் என்பது கடவுள் போல,!
இலக்கியவாதி என்பவன் பூசாரி போல!
கடவுள் அருள் கொடுத்தாலும் அதை பூசாரி அனுமதிக்க வேண்டும்.!
எவ்வளவு பெரிய அபத்தம் இது.. ??
ஓர இலக்கியவாதியாக இருக்க, முதலில் ஓர் எழுத்தாளனுக்கு (கதை சொல்லி) என்ன தகுதி வேண்டும்.. ??
1, படிப்பாளி (வாசகன்) எக்காரணத்தைக் கொண்டும் நிம்மதியாக இருந்துவிடக் கூடாது.
2, இலக்கியத்தைப் படித்தபின்பு அவன் உண்ணவோ, உறங்கவோ கூடாது. குறிப்பாக, தெளிவாக மட்டும் இருந்துவிடக் காடாது.
3, ஊர், உலக, சொந்த, பந்தங்களில் நடக்கும் எந்தவிதமான கொண்டாட்டங்களையோ, சந்தோசங்களையோ அவன் கண்கள் காணக் கூடாது.
4, வாயைத் திறந்தால் வேதனையையும், துக்கத்தையும், துயரத்தையும் பற்றி மட்டுமே அவன் பேச வேண்டும்.
தனக்கு,
5, இலக்கியம் என்பது ஓர் அறிய கலை. எக்காரணம் கொண்டும் அதை பணமாக்க முயற்சிக்கக் கூடவே கூடாது.
6, தான் மட்டுமல்ல, தனது பிள்ளை குட்டிகள் எல்லோருமே வறுமையிலும், துயரத்திலும்தான் வாழ வேண்டும்.
7, எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் இயல்பான பேச்சு வார்த்தையைக் கூட இயல்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த வார்த்தைக்குப் பின்னிருக்கும் துக்க, துயரத்தைக் கண்டுபிடித்து அதை உலகுக்கு உரக்கச் சொல்ல வேண்டும்.
இப்படி, இவை தவிர்த்தும் பல விசயங்கள் உண்டு. உதாரணத்துக்கு இவைகள் போதுமானது.. !!
இதெல்லாம் இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர்களின் வாதம். ஆனால் இலக்கியம் அப்படி எந்த நிபந்தனையும் விதிக்கவே இல்லை என்பதே உண்மை.!
தான் இலக்கியவாதி என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, இலக்கியத்தைத் தனக்காக, இழுக்காக்கிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதே அல்ல.. !!
இலக்கியம் என்பது பல நூற்றாண்டுகள் கடந்தபின்பும் மானிட வாழ்வின் நிகழ்வுகளையோ, பிரச்சினைகளையோ பிறருக்கு எடுத்துச் சொல்ல மட்டுமே உரியதாக இருக்கிறது. அதில் கடந்தகால நூற்றாண்டுகளைப் பின் வரும் மனிதன் தெரிந்து கொள்ள அது வழி காட்டுகிறது.
அப்படிப் பின் வரும் மனிதன், கடந்த கால வாழ்வில் மனிதர்கள், துக்கத்தையும் துயரத்தையும், கருணையையும் ஆசிர்வாதத்தையும், ஒழுக்கத்தையும் நாகரீகத்தையும் மட்டுமே கடைபிடித்தார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எந்தவித கட்டாயமோ நிபந்தனையோ இல்லை.
மனிதன் மனிதனாக வாழ்ந்தான் என்று சொன்னால் மட்டும் போதுமானது. ஆனால், ஓர் இலக்கியவாதி என்பவன் மனிதன் மனிதனாக வாழ்ந்தான் என்று சொல்லக்கூடாது என்னும் இன்றைய இலக்கியவாதிகளின் கூற்று மிகப்பெரிய அபத்தம்.. !!
இன்றைய நிலையில், இலக்கியத்தை சரியாகப் புரிந்துகொண்டு இலக்கியவாதியாக இருப்பவர்களில், இலக்கிய கர்த்தா ஜெயமோகன் மிகப்பெரிய ஆளுமை.!
இலக்கியம் என்பது என்ன?
இலக்கியவாதி என்பவன் யார்?
இதெல்லாம் புரிந்துகொள்ள, இலக்கிய அறிதல் தேவைப்படுவோர், இன்றைய காலகட்டத்தில் ஜெயமோகனின் எழுத்தையும், பேச்சையும் நிச்சயம் பரிச்சயப்படுத்தியே ஆக வேண்டும்.
ஜெயமோகன் இலக்கியவாதி மட்டுமல்ல, இலக்கியலாளரும்கூட.
ஓர் இலக்கியவாதி, இலக்கியலாளனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வார்த்தைகள் புரிவது சற்று சிரமம்தான்.
உதாரணத்துக்கு இப்படிச் சொல்லலாம்.
எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல.. !!
ஒரு சிறந்த கதை சொல்லி, ஓர் எழுத்தாளனாகிவிட முடியாது.. !!
எழுத்து என்பது மிகப்பெரிய ஆளுமை. அந்த எழுத்தை எவனொருவனால் வில்லாக வளைத்து அம்பாக எய்த முடியுமோ அவனே எழுத்தாளன்.
இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எய்யக்கூடிய அம்பை, சரியாக அமைத்து இலக்கின் மீது துல்லியமாக எய்யத் தெரிந்தவனே வில்லாளன். அதுபோலத்தான் எழுத்தும்.
மிகத் திறமையான கதை சொல்லிகூட ஓர் எழுத்தாளனாகிவிட முடியாது.
கதை சொல்லும் திறன் என்பது வேறு. எழுத்தின் மீதான ஆளுமை என்பது வேறு.
இந்த வேற்றுமைகளை அந்தத் துறையில் நுண்ணிறவு உள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.. !!
அடுத்ததாக,
இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்பவன் படைப்பதெல்லாம் இலக்கியமாகிவிடுவதில்லை.
இலக்கியம் படைத்தவனெல்லாம் தான் இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்வதுமில்லை.. !!
இலக்கியம் என்பது வேறு. இலக்கியவாதி என்பவன் வேறு என்று புரிய வந்த நாள் இன்று.. !!