ஜோதிடத்தில் பரிகாரம் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒன்றுதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லை அளவில்தான் பலிக்கும்.
உங்களுக்கு நடக்க வேண்டிய ஒன்று அவயோக கிரகங்களாலோ, தசா புக்திகளாலோ தடை பட்டிருந்தால், அந்த தடையை நீக்கி, செயலை நடத்திக் காட்ட பரிகாரம் உதவும். அதையும் முறையாக, உளமாற நம்பி கடைபிடிக்க வேண்டும்.
ஆனால் அதுவும் பணமாகவோ, பொருளாகவோ, ஆயிரக் கணக்கிலோ லட்சக் கணக்கிலோ செலவழித்தால் மட்டும் சரியாகிவிடாது. அதற்கு தேவை முழுமையான தெய்வ, கிரக காரக நம்பிக்கை. எதையும் மனமுவந்து முன் வந்து செய்தல்.
பரிகாரம் சொல்லும் ஜோதிடருக்கு காணிக்கை கொடுக்கலாம், தட்சணை கொடுக்கலாம், ஆனால் ஜாதகர் நம்பிப் பிடிக்க வேண்டியது தெய்வத்தின் பாதங்களைத்தான்.
யாராக இருப்பிணும் எவராக இருப்பிணும் முதலில் பிடிக்க வேண்டியது அவரவர் குலதெய்வத்தின் பாதங்களைத்தான். அதன்பிறகே மற்ற தெய்வங்கள் துணை புரியும்.
அதே சமயம் அந்த பரிகார முறைகள் எல்லாம் நடக்கவே நடக்காத ஒன்றையோ, உங்கள் ஜாதகத்தில் இல்லாத ஒன்றையோ நடத்த உதவவே உதவாது.
உதாரணமாக, ஒருவர் ஜாதகத்தில் திருமண அமைப்பு இருந்து, அந்த தசா புக்தி காலங்களும் வந்து திருமணம் தடைபட்டால்.. அப்போது பரிகாரம் உடனே பலிக்கும். ஆனால் திருமண அமைப்பே இல்லை என்றால் எந்த பரிகாரமும் திருமணத்தை நடத்தி வைக்காது. இதேபோலத்தான் குழந்தை அமைப்புக்கும்.
குறிப்பாக "சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்" என்பதைப்போல, தடைகளை நீக்க பரிகாரம் உதவும். ஆனால் இல்லாததைக் கொடுக்க எந்த பரிகாரமும் உதவாது என்பதே ஜோதிட உண்மை.
அதையும் மீறி பரிகாரத்தால் ஒன்றை நிகழ்த்திக் காட்ட முடியும் என்று சொல்லும் ஜோதிடரை நம்பி ஏமாறுபவர்களின் கிரக நிலைகள் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
உண்மையில் ஜோதிட பரிகாரத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றால் இன்றைய தினப்படி உலகின் அனைத்து துறையிலும் ஜோதிடரே முதன்மை நபராக இருப்பார்.
ஒரு பரிகாரத்தால் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியும் எனும்போது எந்த நாட்டிலும் முதல்நிலை குடிமகனாக, அதாவது பிரதமராகவோ, குடியரசு தலைவராகவோ ஒரு ஜோதிடர்தான் இருந்திருக்க வேண்டும்.
அதைப்போலவே அடுத்தடுத்த உயர் நிலைகளிலும் ஒரு ஜோதிடரே அம்பானி, அதானியாக, பல நிறுவன அதிபர்களாக மாறியிருப்பார்கள்.
இந்த பதிவை ஒரு கேலிக் கூத்தாக நினைப்பவர்கள் கடந்து சென்று விடுங்கள். இது உங்களுக்கானது இல்லை.
அதேசமயம் இதில் உள்ள உண்மையை மறுப்பவர்கள் ஜோதிட பரிகாரத்தால் எதையும் சாதித்துக் காட்டலாம்.. !!