சக்கரவர்த்தியாக இருந்த ஒருவர், ஆசான் குடோவிடம் கேட்டார்.
"மகா ஞானி.. இறந்த பின் என்ன ஆவார்?"
"எனக்கு எப்படித் தெரியும்?" என்றார் ஆசான்.
"நீங்கள் ஒரு மகா ஞானி ஆயிற்றே. ஏன் தெரியாது?"
"அதுசரிதான். ஆனால் நான் செத்தவனில்லையே" என்று சிரித்தார் ஆசான்.. !!
3
அனைவரும் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கௌரி தன் நகை, உடை அலங்காரங்களைக் களைத்துவிட்டு சாதா உடைக்கு மாறியிருந்தாள்.
“கௌரி.. நெஜமாவே உனக்கு இதுல வருத்தம் இல்லையா?” சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் அக்காளைப் பார்த்துக் கேட்டான் நிருதி.
“எனக்கென்னடா வருத்தம்? வரேனு சொன்ன அவங்க வரல. அவங்களுக்கு பதிலா நம்ம வீட்டு பலகாரத்தை நாமளே திங்கறோம். இதுக்கு நான் ஏன் வருத்தப்படணும்” என்று சிரித்தாள்.
“நான் திங்கறதை கேக்கல”
“நீ கேட்டதுக்கும் சேத்துதான் சொன்னேன்”
“ஆமா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏன் வரல?” வசுமதி கேட்டாள்.
“அவங்க சொந்தத்துல ஒரு முக்கியமான பெருசு ஒண்ணு திடீர்னு வாழ்க்கையோட டூ விட்றுச்சாம். அதான் வரல” என்றான் நிருதி.
“ஹோ.. அப்படின்னா மறுபடியும் இன்னொரு நாள் வருவாங்க?”
“ஆமா”
“நோ” என்றாள் கௌரி. “அடுத்த தடவை இந்த விளையாட்டை நான் விளையாடப் போறதில்லை”
“ஏன்?”
“இதெல்லாம் எனக்கு புடிக்கல. மாப்பிள்ளைங்கற பேருல பொண்ணு பாக்க வரதும். அவங்க முன்னாடி சீவி சிங்காரிச்சுட்டு போய் நிக்கறதும்.. நம்மை என்ன ரேட் பேசவா வராங்க.? அது ஓரளவு ஆமாதான். பட்.. எது எப்படியோ ஆனா என் வாழ்க்கையை கொண்டு போய்.. உடம்பைக் காட்டி இன்னொருத்தன்கிட்ட அடகு வெக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இன்னிக்கு மொத தடவைன்றதால பெத்தவங்களை எதிர்க்காம ஒத்துகிட்டேன். அதோட எனக்கும் சரியான.. தெளிவான ஒரு விளக்கம் கிடைக்கல. இப்போ எல்லாம் புரிஞ்சு போச்சு. இனி மறுபடியும் என் பெண்மையை அவமதிக்கற இந்தக் காரியத்தை என்னால மனமொத்து செய்ய முடியாது”
“அப்போ.. கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லையா?”
“ஏன் இல்லாம? ஆனா இப்போதைக்கு அவசியமில்ல. அடுத்ததா.. நான் உண்மையா நேசிக்கற ஒரு உண்மையான ஆணை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்”
“உண்மையானா ஆணா? அது எப்படி?”
“பெண்ணைப் பாக்கறப்ப உறுத்தாத பார்வை கொண்ட ஒரு ஆண் மகனை”
“ஆஹா.. அப்படி ஒரு ஆண் இருப்பானா என்ன?”
“தெரியாது. சௌமி ஸ்டைல்ல சொன்னா பெண்கள் மட்டும் தேய்வீக எண்ணத்துலயா பாத்து கணவனை செலக்ட் பண்றாங்க? ஹைட்டா இருக்கானா? மேன்லியா இருக்கானான்னுதானே? இதுக்கு அது சரியாப் போச்சு.! ஆனா.. நான் அவ்ளோ தூரம் இல்லேன்னாலும் இந்த மாதிரி பெண் பாக்கறோம்ன்ற பேர்ல என் ஒடம்பை பார்ட் பார்ட்டா எடை போட்டு கல்யாணம் பண்ணிக்காத ஆணாவது இருப்பான் இல்லையா? அவனைத் தேடறேன்”
“அப்ப லவ் மேரேஜ்தான் பண்ணிக்கணும்”
“அதுல ஒரு பிரச்சினையும் இல்லை எனக்கு. ஆனா என் ஆளு.. பெண் உடம்பை மட்டும் விரும்பற ஆண் இல்ல”
“பின்ன?”
“ஆண்மை பெண்மையோட அர்த்தத்தை உணர்ந்த ஒருத்தனை. அப்படி ஒருத்தன் கிடைக்கலேன்னா என் லைப்ல மேரேஜ்ன்ற ஒரு பார்ட் இல்ல”
“இங்க ஆண்களுக்கு பஞ்சமில்ல. ஆனா.. நீ சொன்ன மாதிரி எவனும் கிடைக்க மாட்டான்”
சௌம்யா சொன்னாள்.
“கிடைக்க மாட்டான்னு சொல்ல முடியாது. பெண்மையை உணர்ந்த பெண்கள் இருக்கும்போது ஆண்மையை உணர்ந்த ஆண்கள் இருக்க மாட்டாங்களா என்ன?”
வசுமதி லேசாகத் திகைத்துக் கேட்டாள்.
“ஆண் ஆண்மை, பெண் பெண்மைனு இதுல தனியா வேற இருக்கா?”
கௌரி, சௌம்யாவைப் பார்த்தாள்.
புன்னகைத்தாள் சௌம்யா.
“கஷ்டமான கேள்வி” என்றாள் கௌரி.
சௌம்யா சொன்னாள்.
“சொல்றேன். புரியுதா பாரு. ஆண் பெண்ங்கறது உடல் சார்ந்த நிலைதான். ஆண்மை பெண்மைங்கறது உள்ளம் சார்ந்த நிலை. இன்னிக்கு ஊரு உலகத்துல கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் இருக்காங்க. ஆனா ஆண்மையுள்ள ஆண்களும் பெண்மையுள்ள பெண்களும் ரொம்பக் குறைவு. உனக்கு புரியற மாதிரி உடல் சார்ந்த நிலைலயே சொல்லணும்னா ஆண் உடம்புல பெண் தன்மை உள்ளவங்களும் உண்டு. பெண் உடம்புல ஆண் தன்மை நிறைஞ்சவங்களும் உண்டு”
“யூ மீன்.. அரவாணிகள் மாதிரி?”
“நோ.. நோ..” என்று அவசரமாக குறுக்கிட்டு மறுத்தாள் கௌரி.
‘இன்னும் விளக்கமா நீயே சொல்லு’ என்பதைப் போல சௌம்யாவைப் பார்த்தாள்.
“மாதிரிதான். ஆனா அது இல்லை ஆண்மை பெண்மை..” என்று அடுத்து தான் சொல்லப் போகும் விளக்கத்துக்குத் தயாரானாள் சௌம்யா.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக