அவளிடம் அன்னியத்தன்மை இல்லை. என்னுடன் முன்பே பேசிப் பழகியவள் போல இயல்பாகவே பேசினாள்.
"தியானம் எல்லாம் செய்விங்களா?" எனக் கேட்டாள்.
"பழகிட்டிருக்கேன்" என்றேன்.
"எப்படி?" என்று என்னைக் கூர்ந்து பார்த்தாள்.
அவளுக்கு அதில் ஏதோ ஆர்வம் இருப்பதாய் தோன்றியது.
நான் நடைமுறைப் படுத்தும் எளிதான சாதக முறைகளை அவளுக்கு விளக்கினேன்.
பின்னர் "உடலால சாதகம் பண்றதைத் தாண்டி மனசால தியானம் பண்றது இன்னும் சிறப்பு. அகம் சுதந்திரமடையணும். நான் அதைத்தான் பண்ணிட்டிருக்கேன்" என்றேன்.
மீண்டும் "எப்படி?" எனக் கேட்டாள்.
அவளுக்கு புரியும்படியாக சொல்ல முயற்சி செய்தேன் "அமைதியா உக்காந்துக்கறது. கண்ணை மூடி உட்கார்ந்து கொஞ்ச நேரம் வல இட மூச்சை இழுத்து விட்டு உடம்ப லேசாக்கி அப்படியே நமக்குள்ள ஓடுற எண்ண ஓட்டங்களை, சிந்தனைகளை, ஒடம்புல அப்ப நடக்கற செயல்பாடுகளை கவனிக்கறது. மனசை கட்டுப் படுத்தறதில்ல. கவனிக்கறது. அது சுலபத்துல கை வராது. தொடர்ந்து செய்யணும். மனசு இல்லாத சேட்டையெல்லாம் பண்ணும். வேண்டாததை எல்லாம் நினைக்கும். அதை அடக்க கூடாது. அடக்க முயற்சி பண்ணா பலமடங்கு பலத்தோட எழுந்து வந்து நம்மை எண்ணக்குவியல்ல போட்டு மூழ்கடிச்சிரும். உலகத்துல இன்பமான விசயங்கள் எவ்வளவோ இருக்கப்ப நீ ஏன் பைத்தியக்காரத்தனமா யோகா தியானம் மண்டை மயிருன்னெல்லாம் வாழ்நாளை வேஸ்ட் பண்ணிட்டிருக்கேனு நமக்கு புத்தி சொல்லி குழப்பும். அப்படி அது சொல்ற எதுக்கும் மயங்கிடாம அதை ஒரு குழந்தை விளையாட்டா நினைச்சு வேடிக்கை மட்டும் பாக்கணும். அதை தொடர்ந்து செய்யணும். அப்படி செஞ்சு தியானம் கை வரப்ப நம்ம மனசுல இருக்கற எண்ண ஒட்டுதல்கள், ஆசா பாசங்கள், பற்று பந்தங்களெல்லாம் தானாவே உதிர்ந்துரும்"
அவளுக்கு அது புரியவில்லை என்பது, மீண்டும் "எப்படி?" எனக் கேட்டதில் புரிந்தது.
நான் புன்னகைத்தேன். அவளுக்குப் பேச்சுதான் தேவை. அர்த்தமல்ல. ஆழ்நிலை உணர்வுகள் அல்ல.
அவள் தன் காதலனுடன் காதலைக் கொண்டாட வந்திருக்கிறாள். அவளிடம் போய் யோகா தியானம் என்று பேசிக்கொண்டிருப்பது என் மடத்தனம்.
அதுவும் இளமையின் உச்சத்தில், காதல் கொண்டிருக்கும் பெண்ணிடம் தியானம் பற்றிப் பேசுவதைவிட அபத்தம் வேறிருக்க முடியாது.
அவளுக்குத் தேவை உணர்ச்சி பூர்வமான பேச்சுக்கள், அல்லது கதைகள், கவிதைகள், மிதக்கும் அலைகள்.
அலையே எழும்பாத ஆழ்கடலை அவளால் புரிந்து கொள்ள முடியாது.
இதற்கிடையில் அவனும் தான் வாசித்த, அறிந்து கொண்ட ஆன்மீகம் சம்மந்தமான விளக்கவுரைகள் கொடுத்தான்.
அவனை அவள் 'சிபு' என்று சுருக்கமாகச் சொல்லித்தான் அழைத்தாள்.
எனக்கு முதலில் அது புரியவில்லை.
"அது என்ன பேர் சிபு?" எனக் கேட்டேன்.
"சிக்கந்தர் பாஷாவை சுருக்கி சிபுனு கூப்பிடுவா" என்றான் அவன்.. !!
ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. நான் இருப்பதை அவர்கள் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கினர். அல்லது காதல் அவர்கள் கண்ணை மறைக்கத் தொடங்கியது.
இருவரும் நெருக்கமாகவே இருந்தனர். அவ்வப்போது தொட்டுக் கொள்வதும் அடித்துக் கொள்வதுமாய் ரகசிய சில்மிசங்களுடன் விளையாடிக் கொண்டனர்.
அவர்களுக்கு என்முன் அப்படி நடந்து கொள்வதில் சிறிதும் கூச்சமில்லை.
ஆனால் எனக்குத்தான் பெரிய சங்கடமாக இருந்தது. எங்காவது சென்று விடலாமா என்றிருந்தது. ஆனால் நான் இல்லாவிட்டால் அவர்களால் அங்கு இருக்க முடியாது. அது வேறு ஒருவகைப் பிரச்சினையாகிவிடும்.
காலை பத்து மணிக்கு அவர்கள் வந்தது.
நேரம் கலகலப்பாகவே போனது. அவள்தான் அதிகம் பேசினாள். அவள் குரலும் நன்றாக இருந்தது. அவ்வப்போது சிணுங்குவதும் சிரிப்பதுமாக இருந்தாள். கிண்டல் கேலிக்கு குறைவில்லை.
என்னுடன் கூட வெகு சீக்கிரத்திலேயே நட்பாகிப் போனாள்.
"ஆத்துக்கு போலாம்னு சொன்ன?" என்று அவனிடம் நினைவு படுத்தினாள்.
"போலாம். ஆனா நடக்கணும்" என்று லேசான சலிப்புடன் சொன்னான்.
"சரி. போலாம். இங்க எவ்வளவு நேரம்தான் இப்படியே உக்காந்திருக்கறது? நமக்கு நெறைய டைமிருக்கு. என்னை ஈவினிங் பஸ் வெச்சு விட்று போதும்"
"ரோடு கெடையாது. காட்டு வழிதான். கல்லும் முள்ளுமா இருக்கும். ஒரு கிலோமீட்டருக்கு மேல நடக்கணும்"
"லைப் லாங் நடக்கலாம் ஒண்ணும் தப்பில்ல" என்றாள்.
அவர்கள் இருவர் மட்டும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதிலும் பிரச்சனை. அந்த ஏரியாவுக்கு அவர்கள் பழகியவர்கள் இல்லை.
மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் ஆற்றுப் பகுதி என்பதால் புதிதாக வரும் இளம் காதலர்கள் சென்றால் சமூக விரோதிகளிடம் சிக்கி அசிங்கப்பட நேரும்.
அந்த சமூக விரோதிகள் யாருமில்லை. எங்கள் ஏரியாவின் தறுதலை இளவட்டங்கள்தான்.. !!
காதலர்கள் மலைப் பகுதிகளுக்குள் வந்து விட்டால் அவர்களை மடக்கி அடித்து பணம் நகையெல்லாம்கூட பிடுங்கி விடுவார்கள்.
காதலியாக இல்லாமல் கள்ள உறவு கோஷ்டிகளும் அவ்வப்போது வருவதுண்டு. அப்படி வருபவர்கள் எனத் தெரிந்தால் அந்தப் பெண் சீரழிக்கப்படுவாள்.
அதனால் உள்ளூர் ஆட்கள் இல்லாமல் வெளியூர்ப் பெண்கள் அங்கு செல்லக்கூடாது என்பது பொதுவான விதி.
அது அவனுக்கும் தெரியும். அதனால் என்னையும் அழைத்துக் கொண்டான்.
கிளம்பும்முன் அவளே "ஆத்துல மீன் புடிக்க முடியுமா?" எனக் கேட்டாள்.
"ஏன்?"
"ஆசை. இந்த தூண்டில் போடுவாங்களே.. அது போட்டு புடிக்கணும். நெறைய மீன் கெடைக்கும்னு சொன்னல்ல?"
"அப்ப சொன்னேன்" என்று சிரித்தபடி திரும்பி, பாஷா என்னைப் பார்த்தான்.
"தூண்டி இருக்கு" என்றேன்.
விடுமுறை நாட்களில் நண்பர்கள் சேரும்போது ஆற்றுக்குச் சென்று மீன் பிடிப்பதென்பது எங்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு. அங்கேயே வறுத்துத் தின்று வருவோம்.
தூண்டில் மட்டுமல்ல. மீன் வலையும் இருக்கிறது. ஆனால் இப்போது மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஜாலிக்காக, ஒரு பெண்ணின் விருப்பத்துக்காகப் போவதால் தூண்டில் போதுமானது.
அதில் மீன் மாட்டியாக வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
அதேபோல வீட்டில் உண்டிவில்லும் இருக்கும். அவள் உண்டிவில்லைப் பார்த்ததும் ஆசையாக எடுத்துக் கொண்டாள்.
வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினோம்.
பாதை சற்று சிரமமானதுதான். ஊசிப் புற்களும் கோரைப் புற்களும் ஒற்றையடிப் பாதையை ஒட்டி மண்டியிருக்கும்.
ஆடு மாடுகள் நடந்து கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக, மேடும் பள்ளமுமாக இருக்கும். அதன் வழியாக ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடந்து அதன்பின் மலையிறங்க வேண்டும்.
மலையை ஒட்டி ஒரு தார்ரோடு. அதை ஒட்டி பவானி ஆறு.
நான் தினமும் காலை மாலை இரண்டு நேரமும் அந்த வழியாகத்தான் ஆற்றுக்குச் சென்று வருவேன்.
இருவரும் ஒட்டிக்கொண்டே நடந்தனர். அதிகம் இடித்துக் கொண்டு கை பற்றிக் கோத்து தள்ளாடினர்.
மலைப் பாதை கற்களுக்குள் நடந்து பழக்கமற்ற அவளுக்கு அவ்வப்போது செருப்பு வழுக்கி விட்டுக்கொண்டே இருந்தது.
பாதி தொலைவில் உண்டிவில்லில் கல் விடத் தெரியாமல் விட்டு கையை காயப்படுத்திக் கொண்டாள்.
வலது புறங்கையில் கல் பட்டு சிராய்ப்பாகி ரத்தம் கசிந்து விட்டது.
வலியில் அவள் கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது. அதன்பின் அவள் அதைத் தொடவே இல்லை.. !!
1 கருத்து:
yoga explanations are v nice .. we have to watch how our thinking goes not to control it .. please write related to that more
கருத்துரையிடுக