வியாழன், 28 மார்ச், 2024

சாலையோரப் பூக்கள் -1

 விடுமுறை நாள்.. என்றாலும் ஓய்வில்லை. வாரம் முழுவதும் மில்லில் வேலை..! இப்போதோ வீட்டில் வேலை, இந்த வேலை செய்வது மிகவும் அலுப்பாக இருந்தது விழிமலருக்கு..!


'ச்சை' என்று வெறுப்புத் தட்டியது.!


அம்மா... அப்பா.. உடைகள் உட்பட... அடங்க மாட்டாமல் அவர்கள் பெத்துப் போட்ட.. அவளது இரண்டு தம்பிகள்... ஒரு தங்கையின் உடைகள் எல்லாம் இப்போது.. அவள்தான் துவைத்தாக வேண்டும். !!


நிறையத் துணிகள் இருந்ததால் கை வலியே எடுத்து விட்டது.! 


சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு.. ஒரு வழியாகத் துவைத்து.. அலாசி எடுத்துக் கொண்டு துணிகளைக் காயப் போடுவதற்காக.. மாடிக்கு எடுத்துப் போனாள். !!


மாடியில் சின்னதாக ஒரு ரூம்.. அதை வாடைகைக்கு விட்டிருந்தனர.! அதில் இப்போது தங்கியிருப்பவன், துகிலன்..!!


மலரின் அப்பாவுக்கு வேண்டியவன். இந்த ஊரில் வேலை கிடைத்து வந்து இங்கேயே தங்கி இருந்தான்..!!


இப்போது அந்த மாடி ரூம் திறந்திருந்தது.


 பக்கெட்டிலிருந்த துணிகளை எடுத்து உதறி உலரப் போட்டுத் திரும்பிய போது... அறைக்குள் அவனது முதுகு தெரிந்தது. !!


'' அலோ...'' மெள்ள அழைத்தாள்.


அவள் பக்கம் திரும்பினான். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது.


புன்னகைத்து, ''விழி மலரா.. ? வாங்க..'' என்றான்.


'' லீவா.. இன்னிக்கு. .?''


'' ஆமாங்க... நீங்க. ?''


'' லீவ்தான்..!! ''


அவளுக்கு வெள்ளிக் கிழமைதான் வார விடுமுறை.! அன்றுதான் கம்பெனியில் சிப்ட் மாறும்.!!


'' சாப்டாச்சா..?'' அவன் கேட்டான்.


''ம்..ம்ம்..! நீங்க. .?'' தலையாட்டிக் கேட்டாள்.


''ஓ..!! சாப்பிட்டேன்..!!'' எனப் புன்னகைத்தான்.


அவளைப் பொருத்தவரை.. இவன் கொஞ்சம் டீசண்டான பேர்வழி..! அனாவசியமாக அரட்டையடிப்பதோ.. வீண் வாதங்களில் ஈடுபடுவதோ இல்லை.! முக்கியமாகப் பெண்களைக் கண்டால் வழியும் பழக்கம் சுத்தமாகவே இல்லை..!!


பார்க்கும் போது.. ஒரு  'ஹாய் ' அல்லது.. ஒரு  'ஹலோ.' அவ்வளவுதான்..!!


அதனால் அவனை அவளுக்குப் பிடிக்கும்..!! அண்மைக் காலமாக அவனைக் காதலிக்கலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறாள்...!!


ஆனால் அவளுக்கு இந்தக் காதல் மீதெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அது ஒரு வகையான காய்ச்சல். அந்தக் காய்ச்சலுக்கென்று ஒரு மருந்து இருக்கிறது. அந்த மருந்தை எடுத்துக் கொண்டால்.. அதன்பின் காய்ச்சலாவது கத்திரிக்காயாவது.. ?? எல்லாம் காணாமல் போய் விடும்.. !!


''அப்பறம்...?'' என்றாள்.


''சொல்லுங்க..'' என்றான் துகிலன்.


''புக்ஸ்லாம் நெறைய படிப்பிங்களா...?''


''ம்.. ம்ம்..!!''


''என்ன புக்.. இது...?'' அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''வெற்றுப்படகு..!!'' என்றான்.


''கதையா..?'’


''இல்லைங்க.. இது ஓஷோவோட புக்...!!''


''ஓஷோவா... யாரு அது..?'' என்று அவள் புரியாமல் கேட்க... அட்டைப் படத்தைக் காட்டினான்.


நீண்ட தாடியும், தலையில் கம்பளிக் குல்லாயுமாக ஒரு தாடி வைத்த ஆளைப் பார்த்தாள். 


''யாரு இது..?'' எனக் கேட்டாள்.


''ஓஷோ..!!'' என்றான் மறுபடியும்.


''விஞ்ஞானி மாதிரி இருக்காரு..?'' 


''விஞ்ஞானி இல்லங்க.. மெஞ்ஞானி..!'' எனப் புன்னகைத்தான், ''இதெல்லாம் அவரோட சொற்பொலிவு..!!''


''ஓ..!! இவ்ளோ பெரிய புக்கா...? எப்படி இதெல்லாம் படிக்கறீங்க..?''


''ஏன். .நீங்க படிக்க மாட்டிங்களா...?''


''படிக்கறதா..?'' சிரித்தாள், ''புக்க கைல எடுத்தாலே... நமக்கெல்லாம்.. தூக்கம் பிச்சுகிட்டு வந்துரும். ..''


''ஓ... அப்ப உங்களுக்கு தூக்க மாத்திரையே தேவைப்படாது..?'' எனச் சிரித்தான்.


அவன் சிரிப்பை அவள் விரும்பி ரசித்தாள். 


''இவ்ளோ.. பெரிய புக்கை எப்படி.. ஒரே நாள்ள படிச்சிருவீங்களா..?'' எனக் கேட்டுக் கொண்டே.. அவனது அறைக்குள் நுழைந்தாள்.


''உக்காருங்க..'' எனச் சேரை நகர்த்திப் போட்டான், ''ஒரே நாள்ள படிக்க.. இது நாவல் இல்லீங்க..! உளவியல் சார்ந்த ஆன்மிக விசயம்..! பொருமையாத்தான் படிக்கனும்..!!''


அவள் இப்போது நைட்டியிலிருந்தாள். கருப்பில் சாயம் போய் லேசாக வெளுத்து விட்ட நைட்டி. அதன் ஜிப் போய்விட்டிருந்தது. அதற்குப் பின்னூசி குத்தி கவர் செய்திருந்தாள். 


மலர் சேரில் உட்காரவில்லை. 


ஜன்னல் ஓரமாக.. அவனது புத்தக செல்ஃப் இருந்தது. அதன் பக்கத்தில் போய்.. மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தாள். எல்லாமே பெரிய.. பெரிய புத்தகங்களாக இருந்தன..!!


அவைகளில்.. மேலே இருந்த சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள்.! அதில்.. கதை புத்தகங்கள் ஒன்றைக் கூடக் காணோம்..! அதிகமாக.. அந்த தாடிக்காரக் கிழவனின் புத்தகங்களாகவே இருந்தன.!


'ஓஷோ... ஓஷோ..' என்றிருந்தது. 


அந்தக் கண்கள் பளிச்சென்று மின்னுவதைப் போலத் தோன்றியது.


 ‘இதெல்லாம் நமக்கு ஒத்து வராதவை..!’ என நினைத்துக் கொண்டு புத்தகங்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அவனைக் கேட்டாள்.!


''கதை புக்கெல்லாம் படிக்க மாட்டிங்களா..?''


''படிப்பேன்..!!'' என்றான் ''ஆனா.. அதிகமா இருக்காது..!!''


''ஒன்னுமே இல்ல..! நீங்க இந்தாளோட.. ஃபேனா..?''


சிரித்தான், ''ஃபேன்லாம் இல்லிங்க...! அந்தாளப் புடிக்கும்..!!''


''ஓ..!! அப்படி என்ன பண்ணிருக்கான்.. இந்த ஆளு..?''


''அதெல்லாம்.. சொன்னா.. உங்களுக்குப் புரியாது...! விடுங்க.. கதை புக் வேணுமா..?'' எனக் கேட்டான்.


''என்ன புக் இருக்கு..? இந்த.. ராஜேஷ்குமார்.. கதை இருக்கா..?'' என்று அவள் கேட்க... அவன் வாய்விட்டுச் சிரித்தான்.


''அதெல்லாம் இல்லிங்க...''


''அதுக்கு ஏன்.. இப்படி சிரிக்கறீங்க..?'' எனத் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டாள். 


அவன் சிரிப்பு அவளுக்கு வியப்பாக இருந்தது.


''இல்ல.. ராஜேஷ்குமார் நாவல் கேட்டிங்களா.. அதான்..! உங்களுக்கு க்ரைம் ஸ்டைல்தான் புடிக்குமா..?'' என்று கேட்டான்.


''ஏன்.. க்ரைம் கதை.. சூப்பராத்தான இருக்கும்..? அதும் ராஜேஷ்குமார் கதைகள்.. டீ வில கூட சீரியலா வருதே.. நான் அதெல்லாம் பாப்பேன்..!!''


''அய்யோ.. நான் தப்பா சொல்லலீங்க..!'' அவன் விவாதம் பண்ணத் தயாரில்லாதவன் போலச் சொன்னான். ''அந்த ரகமான கதைகள்.. என்கிட்ட இல்ல..''


''வாங்கி வெக்கலாமில்ல..! சரி.. வேற எந்த ரகமான கதை இருக்கு..?''


''அதெல்லாம் நீங்க படிக்க மாட்டிங்கனு நெனைக்கறேன்..'' என்று புத்தக செல்ப் பக்கத்தில் வந்தான்.


''ஏன்.. என்ன மாதிரி கதை..?''


''சமூக நாவல்..!!'' என்று அவன் செல்ப்பின் அடியிலிருந்து சில புத்தகங்களை உருவ.. இரண்டு புத்தகங்கள் தவறிக் கீழே விழுந்தன


''புதுமைப் பித்தன்.. ஜெயகாந்தன்.. கா நா சு.. தி ஜா.. பிரபஞ்சன்.. வேணுகோபால்.. அசோகமித்ரன்.. எண்டமூரி.. வைக்கம் முகமது.. ராகுல் ஜி.....'' என அவளுக்கு அறிமுகமே இல்லாத பெயர்களை அவன் சொல்லிக் கொண்டே போக.... 


அவள் குனிந்து கீழே விழுந்த.. இரண்டு புத்தகங்களையும் எடுத்தாள்..!! 


அதில் ஒன்று.... 'காம சூத்ரா..!!'



 என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!