வியாழன், 7 பிப்ரவரி, 2019

சாலையோரப் பூக்கள்- 9

நான் வீட்டுக்குப் போய்.. கை கால் முகம் கழுவிக் கொண்டு.. கொஞ்சமாக உணவு சாப்பிட்டேன். டிவியில் கொஞ்ச நேரம் பொழுதைக் கடத்தினேன்..!! அப்பறம்... இருள் சூழும் நேரத்தில்.. மார்பில் ஒரு துப்பட்டாவை எடுத்துப் போட்டுக் கொண்டு மாடிக்குப் போனேன்..!!

துகிலன் அறை திறந்திருந்தது. உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க... அவன் சேரில் உட்கார்ந்து எதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

''நான் வரலாமா..?'' என அறை வாயிலில் நின்று கேட்டேன்.

சட்டென நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான்.
''வாங்க..!!''

நான் உள்ளே போனேன். எழுந்து சேரை எடுத்துப் போட்டான்.
''உக்காருங்க..''
நான் உட்கார்ந்தேன்.
''என்ன படிக்கறீங்க..?'' என நான் கேட்க.. அவன் கையில் இருந்த புத்தகத்தைக் காட்டினான்.
''வெற்றுப்படகு..''

அதே தாடிக்கார கிழவன்.
''ஓஷோ..?''
''நேத்து நீங்க பாத்திங்களே.. அதே புக்..''
''ஒரே புக்க.. எத்தனை நாள் படிப்பிங்க..?'' என்றேன்.
புன்னகைத்தான். ''இது இப்ப ரீசண்டாதான் வாங்கினேன். இது ஸ்டோரி இல்லீங்க.. ஒரே மூச்சுல படிக்க..! நிதானமாதான் படிக்கனும்..!!''
''ஓகே..! நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?''
''நோ பார்மாலிட்டிஸ் மலர்..! நீங்க புக் படிச்சிங்களா.?''
''எங்க...?'' சிரித்தேன் ''இன்னிக்கு ட்ரை பண்றேன்.. ஓகேவா..? ஆனா.. என்ன அத கைல எடுத்தாலே.. தலை பாரமாகி.. தூக்கம் வந்துரும் எனக்கு..!''
''ஓ..!!'' எனச் சிரித்தவாறு கேட்டான் ''வேற என்ன இன்ட்ரஸ்ட்.. மலருக்கு..?''
''சினிமாதான்..! எத்தனை வாட்டி பாத்தாலும்.. போரே அடிக்காது எனக்கு..''
''யார ரொம்ப புடிக்கும்..?''
''சூர்யா.. ஜோ.. என் ஃபேவரிட்..'' என்றேன். அப்படியே எங்கள் பேச்சு.. நீடித்தது..!!

☉ ☉ ☉

லாவண்யா வீட்டுக்குப் போனதும் குளிக்க வேண்டியதாகிவிட்டது..!! அவள் தலைக்குக் குளித்து விட்டு வாசலில் நின்று தலைமுடியை உலர்த்திக் கொண்டிருக்க... வீட்டுக்குள் வந்த அவளது அம்மா.
''நிம்மிய இன்னும் காணமேடி..'' என்றாள்.
''வருவா..''
''மணி ஏழாச்சுடி..''
''ஆனா என்ன..? இன்னும் அவ என்ன பச்சக் கொழந்தையா..? பதினெட்டு வயசாச்சில்ல.. வரத்தெரியும்..! எங்காவது பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டு வருவா..! நீ போய் உன் வேலைய பாரு..'' என அம்மாவிடம் சொன்னாள்.
'' அஞ்சு மணிக்கெல்லாம் அவ வந்துருவாடி..! இன்னும் வல்லேன்னா.. கவலப்படாம இருக்க முடியுமா..?'' என்று அங்கேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தாள் அம்மா.

நிம்மி காலேஜ் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் காலேஜில் மொபைல் அனுமதி இல்லாததால்.. இப்போது அவளுக்கு போன் செய்து கேட்கவும் வசதியில்லை.

அம்மா..  ''நீ கடைக்கு போய்ட்டு வாடி '' என்றாள்.
''என்ன வேனும்..?''
''தக்காளி இல்ல.. அண்ணாச்சி கடைலதான் இருக்கும்.. பொடி நடையா போய் வாங்கிட்டு வா.. போ..''
''கொழம்பு வெச்சிட்ட இல்ல..?''
'' இருந்தத போட்டு வெச்சிட்டேன்.. காலைலத்துக்கு வேண்டாமா..?''
''நீ இங்கயே நின்னுட்டுருக்காத..'' என்று விட்டு வீட்டுக்குள் போய் பணம் எடுத்துக்கொண்டு கடைக்குப் போனாள் லாவண்யா..!

அண்ணாச்சி கடைக்கு இரண்டாவது வீதிக்குப் போக வேண்டும். அவள் போய்.. தக்காளி வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போதுதான் ரோட்டின் மறுபக்கத்தில்.. அவளுக்கு எதிராக வந்து கொண்டிருந்த நந்தாவைப் பார்த்தாள். ஆனால் அவன்.. இவளைக் கவனிக்கவில்லை. தன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டே தம்மடித்தவாறு வந்து கொண்டிருந்தான். அருகில் வந்தும்.. அவன் கவனிக்காமலே போக.. அவளே கூப்பிட்டாள்.

''நந்தா...''

குரல் கேட்டு  அவளைப் பார்த்தான் நந்தா. அவள் சிரிக்க... அவனும் சிரித்துவிட்டு.. ரோட்டைக் கடந்து அவளிடம் வந்தான்.
''என்ன அது..?''
''தக்காளி..! கடைல போய் வாங்கிட்டு வரேன்.. நீ..?''
''அப்படியே...ஒரு ரவுண்டு..'' பீடியைக் கீழே போட்டான்.
''வாயேன் வீட்டுக்கு..'' என அழைத்தாள்.
''உங்கம்மா இருக்கா..?''
''ஆமா...! எங்கம்மா இருந்தா என்ன.. வா.. ஒரு டீ குடிச்சிட்டு போவியாம்..!!'' என அவன் கையைப் பிடித்தாள் லாவண்யா.
நண்பனைப் பார்த்துச் சொன்னான் நந்தா.
''கருப்பு நீ போடா.. நான் வரேன்..!!''


  
என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!