ஞாயிறு, 24 நவம்பர், 2024

அற்புத ரோஜா -5

 உண்மையை எங்கும் தேட வேண்டாம்.!

உனக்குள் இருக்கிறது உண்மை.!

உனக்குள் திரும்பு, உள்ளே குதி, உண்மை புலப்படும்.. !!


****


“மாமா.. அப்பாகிட்ட சொல்லிருங்க” என்றாள் கௌரி.

“என்ன சொல்லணும் கௌரி?” என்று அவளைப் பார்த்தார் கௌரியின் அப்பா. 

“அவளுக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பம் இல்லையாம்” பாயாசத்தைக் குடித்தபடி சொன்னார் சௌம்யாவின் அப்பா.

“ஏன்?”

கௌரி உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கினாள். 

“என்னைப் பொறுத்தவரை.. அதாவது நான் பாத்தவரை குடும்பம்ங்கறது இங்க மலர் மாலை இல்லை. சிலுவை. ஸோ.. நான் இப்பவே சிலுவை சுமக்க விரும்பல”

“உனக்கு யார் சொன்னது குடும்பம்னா சிலுவைனு”

“யாரும் சொல்ல வேண்டியதில்ல. நான்தான் பாக்கறேனே..  குடும்பப் பொறுபுப்புன்ற பேர்ல எத்தனையெத்தனை சுமைகள் இருக்குன்னு”

“அப்ப.. உங்களை பெத்த நாங்கள்ளாம் சந்தோசமா இல்லையா?”

“அப்பா.. எதுலயுமே சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும். ஆனா பல பேர் வாழ்க்கை சிலுவைலதான் அறையப் பட்டிருக்கு. ரீஸண்டா ஒரு புதுக் கவிதை படிச்சேன். சொல்றேன் கேளுங்க. 

‘எந்த தரிசனம் பெற்றதில்லை.

என் பிறப்பின் ரகசியம் அறியும் முன்பே குடும்பச் சிலுவையில் அறையப் பட்டேன் நான்!’ 

இதனோட பொருள் என்ன தெரியுமா? ஏசுநாதர் தீர்க்க தரிசனம் அடைஞ்சதால சிலுவைல அறையப் பட்டார். நானோ எந்த தரிசனமும் பெறல, ஏன் பிறந்தேன்னுகூட எனக்கு தெரியாது. அதுக்கு முன்னாலயே குடும்பச் சிலுவைல அறையப் பட்டுட்டேன் அப்படிங்கறத சொல்றதுதான் இந்தக் கவிதை. அதாவது வாழ்க்கைல எந்தவித தீர்க்க தரிசனமும் பெறாமலேயே சிலுவை சுமக்கிறது. அந்தளவுக்கு குடும்பப் பொறுப்பு சுமையாகிருச்சு”

“எங்களுக்கெல்லாம் நீ சொல்ற அளவுக்கு சுமையா இல்லையே?”

“அப்பா.. சுமப்பதால் சுமையல்ல சிலுவை. சுமத்தப்பட்டிருப்பதால்தான் சுமை. குடும்ப பொறுப்பை விரும்பி ஏத்துகிட்டா அது சுமையல்ல. ஆனா விருப்பம் இல்லாம ஒருத்தர் மேல சுமத்தப்பட்டா அது சுமைதான். புரியுதா?”

“புரியுது. நீயா சுமக்க முன் வரணும்னு விரும்பற?”

“ஆமா. நான் ஏன் பிறந்தேன்னு தெரிஞ்சுக்காட்டாலும் பரவால்ல. ஓரளவு வாழ்க்கைன்னா என்னன்னு உணர்ந்துட்ட பின்னாலயாவது கல்யாணம் பண்ணிக்கறேன்”

“வாழ்க்கைன்னா என்ன? மனுச வாழ்க்கைல.. ஒரு மனுசனுக்கு இருக்கற பொறுப்புகளை தட்டிக் கழிக்காம எல்லாத்தையும் ஏத்துகிட்டு சிறப்பா நடத்தறதுதான் வாழ்க்கை” என்றார் கௌரியின் அப்பா. 

சௌம்யா குறுக்கிட்டுச் சொன்னாள்.

“அதுக்கு பேர் வாழ்க்கை இல்ல மாமா.. கடமைகள்! கடமைகளைத்தான் வாழ்க்கைனு நெனைச்சுட்டு இத்தனை காலமும் நீங்க வாழ்ந்துட்டிருக்கீங்க. அந்த அளவுக்கு வாழ்க்கைனா என்னன்ற அடையாளமே யாருக்கும் தெரியாம போயிருச்சு. கௌரிக்கா வாழ்க்கையை தெரிஞ்சுக்க விரும்பறா. விட்றுங்க. அக்காளோட கடமைகள் அக்காளுக்கும் தெரியும். ஆனா அதுவே வாழ்க்கை ஆகிறாது. வாழ்க்கையைப் பத்தி பல பேர் பலவிதமா சொன்னாலும். தன்னோட வாழ்க்கையைப் பத்தி தானே தெரிஞ்சுகிட்டு வாழ்றதுதான். ஒரு மனுச பிறப்புக்கான அழகு. நம்ம வாழ்க்கையைப் பத்தி பிறர் சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்னா நாமளும் வாழ்றோம்னு சொல்றதுல அர்த்தமே இல்ல. பிணங்களா நடமாடிகிட்டு இருக்கறதுக்கு பேர் வாழ்க்கை ஆகாது மாமா”

“யம்மாடி.. ம்ம்.. அப்றம்..?”

“அப்றம்.. ம்ம்.. எப்பொருள் யார் யார் வாய் கேட்பிணும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அதாவது.. தெரிஞ்சோ தெரியாமலோ நமக்கு ஆறறிவு இருக்குன்னு பீத்திக்கறோம். ஆனா அது எதுக்காக இருக்குன்னு நிச்சயமா நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஆறறிவு பேச மட்டும்தான். அது ஒரு தகவல் பறிமாற்ற மொழி. மொழியறிவுதான் ஆறாம் அறிவுன்னா.. அறிவைப் பத்திப் பேசக் கூடிய தகுதியே நமக்கு சுத்தமா இல்லைனு அர்த்தம்”

“சரி.. நீதான் சொல்லேன். ஆறாம் அறிவுன்னா என்ன?”

“அது என்னன்றத விட எதுக்குனு பாப்போம். யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிராம சுயமா.. அதை நாமே பகுந்தறிந்து கண்டுணரத்தான் ஆறறிவு. உதாரணத்துக்கு சொல்றேன். இன்னிக்கு வாழ்க்கையைப் பத்தி பலவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கு. ஆனா வாழ்க்கையை உணர்ந்தவங்க குறைவுதான். வாழ்க்கையைப் பத்தி பேசறவங்களுக்கெல்லாம் வாழ்க்கைனா என்னன்னே தெரியாது. தெரிஞ்சா வாழ்க்கையை பத்தி பேச மாட்டாங்க. வாழ்வாங்க. உங்களுக்கு புரியற மாதிரி இன்னும் சுலபமா சொல்லணும்னா. ஞானிகளைத் தவிர யாரும் வாழ்க்கையை உணர்ந்தவங்க இல்ல. ஞானம் உணரப்படறது. பேசப் படறது இல்ல. அது மாதிரிதான் வாழ்க்கையும். வாழ்க்கை வாழப் படணும். பேசப்படக் கூடாது. பேச்சு கூட இல்லை. சண்டை சச்சரவுனு ஒரே சர்ச்சை. மொழிப் போர் சர்ச்சைகளா அறிவாளிகள் மத்தியில மாறி நிக்குது வாழ்க்கை. இத்தனைக்கும் மேல வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாம கோடான கோடி மக்கள் வாழ்ந்துட்டிருக்கோம்ன்றதுதான் பரிதாபத்துக்குரிய உண்மை.”

“அப்போ.. நாங்ககூட அப்படித்தானா?”

“அப்படியேதான். நெஜமாவே நீங்க வாழ்க்கைய உணர விரும்பல. உங்களுக்கு எல்லாம் தெரியும்ங்கற ஆணவத்தைக் கை விட்டு எதுவுமே தெரியாதுங்கற உண்மையை ஒத்துக்குங்க. ஒரு நாள் உண்மை உங்களுக்கு புலப் படும். அகம்னா என்ன? வாழ்க்கைனா என்னன்னு. புறம் சார்ந்த கடமைகள் மட்டுமே வாழ்க்கை இல்லேனு.!  கை கால் முகம்னு ஒவ்வொரு உறுப்பும் சேந்ததுதான் ஒடம்பு. ஆனா எந்த ஒரு தனி உறுப்பு மட்டுமே ஒடம்பு ஆகிராது. அது மாதிரிதான். ஒடம்போட ஒரு பார்ட் மாதிரிதான். வாழ்க்கையோட ஒரு பார்ட் கடமை. அப்படி ஓராயிரம் கடமைகள். இது முழுக்க புறம் சார்ந்த நிலை. இந்த புறக் காரணிகள் மட்டுமே வாழ்க்கை ஆகிறாது. இதே அளவுல அகம்னு ஒண்ணு இருக்கு.! கடலுக்கு வெளிய இருக்கறது மட்டும் உலகம் இல்ல. கடலுக்குள்ளயும் உலகம் இருக்கறது மாதிரிதான்.! ஆனா நாம அக நிலை பத்தி சுத்தமா.. ஒண்ணுமே தெரியாத மக்குகளா இருந்துட்டு பெரிய அறிவாளிகனு பீத்திக்கறோம். இது மட்டுமில்ல மாமா.. இன்னும் இந்த கடவுள் உண்மை மெய்ப்பொருள் சத்தியம்னு சர்ச்சைக்குரிய எல்லாமே எதுன்னு புரியும்”

“சரி.. கடவுளப் பத்தி என்ன? உண்டா இல்லையா?” என்றார் மாமா. 

சிரித்தாள் சௌம்யா.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!