புதன், 28 ஆகஸ்ட், 2024

மாறுதல் சில நேரங்களில் -3

 அனுசுயா சிர்க்கென மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். குனிந்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். 


“ஏய்.. இப்ப என்ன ஆகிப் போச்சுனு இப்படி அழற? இதெல்லாம் சாதாரணம்தான் விடு” அவளது தோளை வளைத்து அணைத்து ஆறுதல் சொன்னாள் திலகம்.


“இல்லக்கா.. எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னாலும் இவங்க ரெண்டு பேரும் கேக்க மாட்டேங்குறாங்க. எங்களுக்கு அப்றம் உனக்கு ஒரு துணை வேணும்னு.. இப்படி வயசு வித்தியாசமே இல்லாம.. எவன் எவனையோ கூட்டிட்டு வந்து காட்டி..  ரொம்ப கேவலமா இருக்குக்கா..”


“இத பார் அனு.. இதெல்லாம் இருக்கறதுதான். வந்தா வந்துட்டு போறாங்க. நீ ஏன் இவ்வளவு கஷ்டப் படுத்திக்கற? ஒரு பொண்ணுன்னு இருந்தா இதெல்லாம் நடக்கறதுதான். செகண்ட் மேரேஜ்ன்றதால இப்படி வயசு வித்தியாசமில்லாத வரனா வருது. அதுக்கெல்லாம் நீ ஏன் பீல் பண்ணிக்கற? ஒவ்வொருத்திக்கு மொத கல்யாணத்துக்கே இப்படி வருது. உனக்கு புடிச்சா ஓகே சொல்லு. இல்லேன்னா தூக்கி போட்று”


திலகத்துக்கும் கவலையாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே. 


“நீ என்ன சொல்லு எனக்கிது புடிக்கவே இல்ல”


“பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்க. என்ன பண்றது சிலதெல்லாம் விதி.. அதை நம்மால மாத்த முடியாது”


“மாறவே வேண்டாம். எனக்கு இப்படியே விட்டுட்டாலும் தேவலாம்தான்”


அனுசுயாவிடம் வெறுப்பும் கசப்பும் நன்றாகவே தெரிந்தது.


“அப்படி விட்டா அப்பறம் அனாதை போணமாத்தான் போகணும்” என்றாள் அனுசுயாவின் அம்மா. 


“பின்ன சுடுகாடு போறப்ப சொந்த பந்தம்னு பத்து பொணத்தையா துணைக்கு கூட்டிட்டு போக முடியும்?” தன் மனைவியைப் பார்த்து கிண்டலாகச் சொல்லிச் சிரித்தார் அனுசுயாவின் அப்பா.


“சுடுகாடு போறப்ப சொல்லல. சாகற காலத்தை சொன்னேன்”


பெருசுகள் இரண்டும் சண்டை போட்டுக்கொள்ள திலகம் அதை சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு அனுசுயாவிடம் சொன்னாள்.

“பாத்தியா? கடைசில இப்படி சண்டை போட்டுக்கவாச்சும் ஒரு துணை வேணும். அனாதை பொணமா போறமோ பத்து பேரோட போறமோ அது முக்கியமில்ல. ஆனா ஒரு நாப்பது அம்பது வயசுல சண்டை போட்டுக்கவாவது பேச்சுத் துணைங்கற பேர்ல ஒரு ஆளு வேணும்”


“அதெல்லாம் செரிக்கா. அதுக்காக வயசானவங்களா வந்தா நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறது? நான் செகண்டுங்கறதுக்காக போயும் போயும் பாழும் கெணத்துலயா விழ முடியும்?”


“வந்தவங்களை விடு. உனக்கேத்த மாதிரி எவனாவது ஒருத்தன் இனியாவது வரத்தான் செய்வான். அப்படி வர ஆள் பாக்கவும் நல்லாருந்து போதுமான வருமானமும் இருந்தா யோசிக்கமா மண்டையை ஆட்டிரு. அதைத் தவிர வேற எதுவும் முக்கியமில்ல”


“இல்லேன்னா.. அவளுக்குப் புடிச்ச மாதிரி எவன்கூடவாவது பழகிப் பாத்து.. இவனை கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னாலும் எங்களுக்கு சம்மதம்தான்” என்றாள் அம்மா.


அனுசுயா சட்டென கோபமானாள். 

“என்கூட பழகற எவனும் என்னை கல்யாணம் பண்ணிக்கத் தயாரில்ல.. பேசாம இருக்கியா?”


“எல்லாருமேவா அப்படி இருப்பாங்க? ஏதாவது ஒண்ணு ரெண்டு பேர் நல்லவங்களாவும் இருப்பாங்க. நாமதான் கண்ல வெளக்கெண்ணைய ஊத்திட்டு தேடணும்”


“மா.. கொஞ்சம் பேசாம இரு. எனக்கு இப்பவே தலையை வலிக்குது” தலையைப் பிடித்துக் கொண்டாள் அனுசுயா.


அனுசுயாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு எழுந்து கொண்டாள் திலகம். 


“சரி.. நான் கிளம்பறேன். நீ மனசை விடாதே. எதுக்கும் பீல் பண்ணிக்காதே”


“இப்பவே போகணுமா? இருந்துட்டு சாயந்திரம் போலாமில்ல?” என்றாள் சித்தி.


“இல்ல சித்தி. அவரும் வந்துருவாரு. இப்பவே மணி மூணாச்சு. காலைலயே அவரு கிளம்பிப் போனதும் நான் இங்க வந்துட்டேன். வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி அப்படி அப்படியே கிடக்கும். போய்த்தான் எல்லாம் ஒழுங்கு படுத்தணும்”


“என்னமோ.. அப்பப்போ இவளுக்கு போன்ல ஏதாவது புத்தி சொல்லிட்டிரு. உனக்கு தெரிஞ்ச மாதிரி யாராவது இருந்தாலும் சொல்லி வெய். ஏதாவது ஒண்ணு நடக்கட்டும்”


 சித்தி சித்தப்பாவுக்கும் ஆறுதலாக சில வார்த்தைகள்  சொல்லிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள் திலகம்.  


வெளியே வெயில் இன்னும் குறையாமலே இருந்தது. குடை கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. 


ஆட்டோவுக்குள் ஏறி உட்கார்ந்து புடவைத் தலைப்பால் முகம் கழுத்தெல்லாம் வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்.


வீட்டுக்குப்போன போதும் அவள் கணவர் வந்திருக்கவில்லை. வெயிலில் வந்ததில் அவளுக்கு வியர்த்து விட்டிருந்தது. உடம்பு கசகசத்துப் போயிருந்தது. முதலில் ஒரு குளியல் போட வேண்டும்.


வீட்டுக்குள் போய் தாராளமாக உட்கார்ந்து பேன் காற்று வாங்கினாள். அசதியில் கண்கள் சொக்கியது. சில நிமிடங்கள் தன்னை மீறித் தூங்கிப் போய் வீதியில் ஏதோ சிலிண்டர் வண்டியின் ஹாரன் சத்தம் கேட்டுக் கண் விழித்தாள்.


அவனைத் திட்டிக்கொண்டு எழுந்து கணவருக்கு போன் செய்தாள். 


“என்ன?” என்றார் எடுத்து.


“எங்க இருக்கீங்க?”


“கிளம்பிட்டேன். வந்துட்டே இருக்கேன். பத்து நிமிசத்துல வந்துருவேன்”


“நானும் இப்பதான் வந்தேன். ஒடம்பெல்லாம் கசகசனு ஆகிருச்சு. குளிக்கணும்”


“அதுக்கு? நான் வந்து குளிப்பாட்டி விடணுமா என்ன?”


“ஆமா அப்படியே குளிப்பாட்டி விட்டுட்டாலும்.. கிளுகிளுனுதான் இருந்துரும். பேச்சைப் பாரு மனுஷனுக்கு..” என்று அவளே சட்டென காலைக் கட் பண்ணி விட்டாள்.


கதவைச் சாத்திவிட்டு உடம்பில் இருந்த மொத்த உடைகளையும் களைந்து போட்டுவிட்டு ஒரு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!