வெள்ளி, 1 மார்ச், 2024

சிபு -2

 அவளிடம் அன்னியத்தன்மை இல்லை. என்னுடன் முன்பே பேசிப் பழகியவள் போல இயல்பாகவே பேசினாள். 


"தியானம் எல்லாம் செய்விங்களா?" எனக் கேட்டாள். 


"பழகிட்டிருக்கேன்" என்றேன். 


"எப்படி?" என்று என்னைக் கூர்ந்து பார்த்தாள்.


அவளுக்கு அதில் ஏதோ ஆர்வம் இருப்பதாய் தோன்றியது.


 நான் நடைமுறைப் படுத்தும் எளிதான சாதக முறைகளை அவளுக்கு விளக்கினேன்.


 பின்னர் "உடலால சாதகம் பண்றதைத் தாண்டி மனசால தியானம் பண்றது இன்னும் சிறப்பு. அகம் சுதந்திரமடையணும். நான் அதைத்தான் பண்ணிட்டிருக்கேன்" என்றேன். 


மீண்டும் "எப்படி?" எனக் கேட்டாள்.


அவளுக்கு புரியும்படியாக சொல்ல முயற்சி செய்தேன்  "அமைதியா உக்காந்துக்கறது. கண்ணை மூடி உட்கார்ந்து கொஞ்ச நேரம் வல இட மூச்சை இழுத்து விட்டு உடம்ப லேசாக்கி அப்படியே நமக்குள்ள ஓடுற எண்ண ஓட்டங்களை, சிந்தனைகளை, ஒடம்புல அப்ப நடக்கற செயல்பாடுகளை கவனிக்கறது. மனசை கட்டுப் படுத்தறதில்ல. கவனிக்கறது. அது சுலபத்துல கை வராது. தொடர்ந்து செய்யணும். மனசு இல்லாத சேட்டையெல்லாம் பண்ணும். வேண்டாததை எல்லாம் நினைக்கும். அதை அடக்க கூடாது. அடக்க முயற்சி பண்ணா பலமடங்கு பலத்தோட எழுந்து வந்து நம்மை எண்ணக்குவியல்ல போட்டு மூழ்கடிச்சிரும். உலகத்துல இன்பமான விசயங்கள் எவ்வளவோ இருக்கப்ப நீ ஏன் பைத்தியக்காரத்தனமா யோகா தியானம் மண்டை மயிருன்னெல்லாம் வாழ்நாளை வேஸ்ட் பண்ணிட்டிருக்கேனு நமக்கு புத்தி சொல்லி குழப்பும். அப்படி அது சொல்ற எதுக்கும் மயங்கிடாம அதை ஒரு குழந்தை விளையாட்டா நினைச்சு வேடிக்கை மட்டும் பாக்கணும். அதை தொடர்ந்து செய்யணும். அப்படி செஞ்சு தியானம் கை வரப்ப நம்ம மனசுல இருக்கற எண்ண ஒட்டுதல்கள், ஆசா பாசங்கள், பற்று பந்தங்களெல்லாம் தானாவே உதிர்ந்துரும்"


அவளுக்கு அது புரியவில்லை என்பது, மீண்டும் "எப்படி?" எனக் கேட்டதில் புரிந்தது. 


நான் புன்னகைத்தேன். அவளுக்குப் பேச்சுதான் தேவை. அர்த்தமல்ல. ஆழ்நிலை உணர்வுகள் அல்ல.


 அவள் தன் காதலனுடன் காதலைக் கொண்டாட வந்திருக்கிறாள். அவளிடம் போய் யோகா தியானம் என்று பேசிக்கொண்டிருப்பது என் மடத்தனம்.


 அதுவும் இளமையின் உச்சத்தில், காதல் கொண்டிருக்கும் பெண்ணிடம் தியானம் பற்றிப் பேசுவதைவிட அபத்தம் வேறிருக்க முடியாது. 


அவளுக்குத் தேவை உணர்ச்சி பூர்வமான பேச்சுக்கள், அல்லது கதைகள், கவிதைகள், மிதக்கும் அலைகள்.


 அலையே எழும்பாத ஆழ்கடலை அவளால் புரிந்து கொள்ள முடியாது.


இதற்கிடையில் அவனும் தான் வாசித்த, அறிந்து கொண்ட ஆன்மீகம் சம்மந்தமான விளக்கவுரைகள் கொடுத்தான். 


அவனை அவள் 'சிபு' என்று சுருக்கமாகச் சொல்லித்தான் அழைத்தாள். 


எனக்கு முதலில் அது புரியவில்லை. 

"அது என்ன பேர் சிபு?" எனக் கேட்டேன். 


"சிக்கந்தர் பாஷாவை சுருக்கி சிபுனு கூப்பிடுவா" என்றான் அவன்.. !!


ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. நான் இருப்பதை அவர்கள் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கினர். அல்லது காதல் அவர்கள் கண்ணை மறைக்கத் தொடங்கியது.


 இருவரும் நெருக்கமாகவே இருந்தனர். அவ்வப்போது தொட்டுக் கொள்வதும் அடித்துக் கொள்வதுமாய் ரகசிய சில்மிசங்களுடன் விளையாடிக் கொண்டனர்.


 அவர்களுக்கு என்முன் அப்படி நடந்து கொள்வதில் சிறிதும் கூச்சமில்லை.


 ஆனால் எனக்குத்தான் பெரிய சங்கடமாக இருந்தது. எங்காவது சென்று விடலாமா என்றிருந்தது. ஆனால் நான் இல்லாவிட்டால் அவர்களால் அங்கு இருக்க முடியாது. அது வேறு ஒருவகைப் பிரச்சினையாகிவிடும்.


காலை பத்து மணிக்கு அவர்கள் வந்தது. 


நேரம் கலகலப்பாகவே போனது. அவள்தான் அதிகம் பேசினாள். அவள் குரலும் நன்றாக இருந்தது. அவ்வப்போது சிணுங்குவதும் சிரிப்பதுமாக இருந்தாள். கிண்டல் கேலிக்கு குறைவில்லை.


 என்னுடன் கூட வெகு சீக்கிரத்திலேயே நட்பாகிப் போனாள். 


"ஆத்துக்கு போலாம்னு சொன்ன?" என்று அவனிடம் நினைவு படுத்தினாள். 


"போலாம். ஆனா நடக்கணும்" என்று லேசான சலிப்புடன் சொன்னான். 


"சரி. போலாம். இங்க எவ்வளவு நேரம்தான் இப்படியே உக்காந்திருக்கறது? நமக்கு நெறைய டைமிருக்கு. என்னை ஈவினிங் பஸ் வெச்சு விட்று போதும்"


"ரோடு கெடையாது. காட்டு வழிதான். கல்லும் முள்ளுமா இருக்கும். ஒரு கிலோமீட்டருக்கு மேல நடக்கணும்"


"லைப் லாங் நடக்கலாம் ஒண்ணும் தப்பில்ல" என்றாள். 


அவர்கள் இருவர் மட்டும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதிலும் பிரச்சனை. அந்த ஏரியாவுக்கு அவர்கள் பழகியவர்கள் இல்லை. 


மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் ஆற்றுப் பகுதி என்பதால் புதிதாக வரும் இளம் காதலர்கள் சென்றால் சமூக விரோதிகளிடம் சிக்கி அசிங்கப்பட நேரும்.


 அந்த சமூக விரோதிகள் யாருமில்லை. எங்கள் ஏரியாவின் தறுதலை இளவட்டங்கள்தான்.. !!


காதலர்கள் மலைப் பகுதிகளுக்குள் வந்து விட்டால் அவர்களை மடக்கி அடித்து பணம் நகையெல்லாம்கூட பிடுங்கி விடுவார்கள்.


 காதலியாக இல்லாமல் கள்ள உறவு கோஷ்டிகளும் அவ்வப்போது வருவதுண்டு. அப்படி வருபவர்கள் எனத் தெரிந்தால் அந்தப் பெண் சீரழிக்கப்படுவாள்.


 அதனால் உள்ளூர் ஆட்கள் இல்லாமல் வெளியூர்ப் பெண்கள் அங்கு செல்லக்கூடாது என்பது பொதுவான விதி.


 அது அவனுக்கும் தெரியும். அதனால் என்னையும் அழைத்துக் கொண்டான். 


கிளம்பும்முன் அவளே "ஆத்துல மீன் புடிக்க முடியுமா?" எனக் கேட்டாள். 


"ஏன்?"


"ஆசை. இந்த தூண்டில் போடுவாங்களே.. அது போட்டு புடிக்கணும். நெறைய மீன் கெடைக்கும்னு சொன்னல்ல?"


"அப்ப சொன்னேன்" என்று சிரித்தபடி திரும்பி, பாஷா என்னைப் பார்த்தான்.


 "தூண்டி இருக்கு" என்றேன். 


விடுமுறை நாட்களில் நண்பர்கள் சேரும்போது ஆற்றுக்குச் சென்று மீன் பிடிப்பதென்பது எங்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு. அங்கேயே வறுத்துத் தின்று வருவோம். 


தூண்டில் மட்டுமல்ல. மீன் வலையும் இருக்கிறது. ஆனால் இப்போது மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஜாலிக்காக, ஒரு பெண்ணின் விருப்பத்துக்காகப் போவதால் தூண்டில் போதுமானது.


 அதில் மீன் மாட்டியாக வேண்டும் என்கிற கட்டாயமில்லை.


 அதேபோல வீட்டில் உண்டிவில்லும் இருக்கும். அவள் உண்டிவில்லைப் பார்த்ததும் ஆசையாக எடுத்துக் கொண்டாள்.


 வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினோம்.


 பாதை சற்று சிரமமானதுதான். ஊசிப் புற்களும் கோரைப் புற்களும் ஒற்றையடிப் பாதையை ஒட்டி மண்டியிருக்கும்.


 ஆடு மாடுகள் நடந்து கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக, மேடும் பள்ளமுமாக இருக்கும். அதன் வழியாக ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடந்து அதன்பின் மலையிறங்க வேண்டும்.


 மலையை ஒட்டி ஒரு தார்ரோடு. அதை ஒட்டி பவானி ஆறு. 


நான் தினமும் காலை மாலை இரண்டு நேரமும் அந்த வழியாகத்தான் ஆற்றுக்குச் சென்று வருவேன்.  


 இருவரும் ஒட்டிக்கொண்டே நடந்தனர். அதிகம் இடித்துக் கொண்டு கை பற்றிக் கோத்து தள்ளாடினர்.


 மலைப் பாதை கற்களுக்குள் நடந்து பழக்கமற்ற அவளுக்கு அவ்வப்போது செருப்பு வழுக்கி விட்டுக்கொண்டே இருந்தது. 


பாதி தொலைவில் உண்டிவில்லில் கல் விடத் தெரியாமல் விட்டு கையை காயப்படுத்திக் கொண்டாள்.


 வலது புறங்கையில் கல் பட்டு சிராய்ப்பாகி ரத்தம் கசிந்து விட்டது.


 வலியில் அவள் கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது. அதன்பின் அவள் அதைத் தொடவே இல்லை.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

சிபு -1

 என் இருபத்தியிரண்டு வயதில் நான் தனிமைப் பட்டிருந்தேன். 


வேலையில்லாத நிலை அல்ல, நானாக வேலையைப் புறக்கணித்திருந்தேன். 


வெளியுலக, உறவுகளின் சுயத்தைக் காணத் தொடங்கிய அனுபவங்களின் தாக்கத்தில், கொந்தளிப்படைந்து ஆன்மீகம், தியானம் செய்தல் என்றிருந்தேன்.


 உறவுகளோடும் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. மனித மனங்களின் வக்கிரங்களை எதிர்க்கும் நிலையின் உச்சத்திலிருந்த காலகட்டம் அது.


எங்கள் ஏரியா ஒரு சிறிய மலைப் பகுதி. கரடு என்று பெயர்.


 அங்கு பெரும்பாலான குடியிருப்புகள் எல்லாம் மலையடிவாரத்திலும் அதன் ஓரளவு மேல் பகுதியிலும்தான். உச்சியில் வெகுசில வீடுகள்தான்.


 மலையின் உச்சியில் ஒரு சமதளப் பகுதி உண்டு.


 அது முன்பு வனப்பகுதியாக இருந்தது. இப்போது குடியிருப்புகளுக்காக அதை அழித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. எல்லாமே இலவச வீடுகள்.


 ஆனால் மின்சார வசதியும், போதுமான அளவு தண்ணீர் வசதியும், வாகனப் போக்குவரத்து வசதியும் இல்லாததால் கட்டிய வீடுகள் எல்லாம் சில வருடங்களில் அப்படி அப்படியே கைவிடப்பட்டன.


 இறுதியில் அங்கே குடியிருந்தது எங்கள் குடும்பம் மட்டும்தான்.


 அங்கே என் வீட்டுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த ஒரு வீட்டில் நான்  வாடகைக்கு இருந்து கொண்டிருந்தேன். 


என்னுடன் ஒரு நண்பன் மட்டும் இரவில் வந்து தங்குவான். விடுமுறை என்றால் பகலில். மற்ற நண்பர்கள் அவ்வப்போது வந்து செல்லக் கூடியவர்கள்.


மேலே வருவதற்கு படிக்கட்டுகள் வழியாக நடந்துதான் வர வேண்டும்.


 மலைப் பகுதிகளில் நடந்து பழக்கமில்லாதவர்கள் இரண்டு மூன்று இடங்களில் நின்றோ உட்கார்ந்தோ இளைப்பாறித்தான் வரவேண்டும்.


 அப்படித்தான் ஒரு நாள் மூச்சு வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தாள் அவள்.


 அவளை அங்கு அழைத்து வந்தவன், அவ்வப்போது என்னைக் காண வந்து செல்லும் என் நண்பர்களில் ஒருவனான சிக்கந்தர்பாஷா. 


அவன் நகரத்துக்குள் குடியிருந்தான். ஆனால் வாடகை வீடுதான். அப்பா இல்லை. அம்மாவும், ஒரு அக்காவும், ஒரு தங்கையும்.


 குடும்ப பாரத்தைத் தாங்குவதோடு அக்கா தங்கையையும் அவன்தான் உழைத்துக் கரையேற்ற வேண்டும். 


அப்போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தான். அதை நிறுவனம் என்று பெரிய அளவில் சொல்லிவிட முடியாது. சிறிய அளவிலானது. அங்கே அவன் கடைக்குட்டியாக இருந்து தேறியவன். 


அந்தக் காலகட்டத்தில் அவன் முதலாளியின் அம்மா, நோய்வாய்ப் பட்டு படுத்த பக்கையாக இருந்தாள்.


 அவளை கவனிக்கச் சில மாதங்களுக்கொரு முறை தாதிப்பெண்கள் மாறி மாறி வருவார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கேரளத்துப் பெண்கள்.


 அப்போது ஒரு தமிழ்ப்பெண், அதிலும் முகமதியப்பெண் தாதியாக வந்து அவனுக்கு அறிமுகமாகியிருந்தாள்.


அவளை கோவைக்குச் சென்று அழைத்து வந்ததே அவன்தான். ஒவ்வொரு பெண்ணையும் அழைத்து வந்து திரும்பக் கூட்டிச் சென்று அவர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பது அவன் பொறுப்பு.


 இவளை அழைத்து வரும்போதே இனம் தெரியாத ஈர்ப்பில் இருவரும் நெருக்கமாகி விட்டனர்.


 அவனும் நல்ல பையன்தான். அழகனும் கூட. எந்த வகையிலும் குறை சொல்லும்படியாக இருக்க மாட்டான். நடிப்பிலும் கதை கவிதைகளிலும் நாட்டம் கொண்டவன்.


அந்த முகமதியப் பெண்ணை அழைத்து வந்த இரண்டாவது வாரத்தில் நண்பர்களான எங்களிடம் அவளைப் பிடித்திருப்பதாகச் சொன்னான். அதிலும் குறிப்பாக என்னிடம் எப்படி அவளை அணுகுவது என்று கேட்டான்.


 எனக்கு அதில் முன்னனுபவம் எல்லாம் கிடையாது. ஆனால் எந்த பிரச்சனைக்கும் என்னிடம் எளிதான தீர்வு கிடைக்கும் என்பது என் நெருங்கிய நண்பர்களின் நம்பிக்கை. 


இந்த விசயத்தில் அவனுக்கும் முன்னனுபவம் இல்லை. அதுதான் முதல் காதல்.


 நான் எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளைச் சொன்னேன். அவைகள் எல்லாம் உளவியல் சம்பந்தமானவை. 


 அதன்படி அடுத்த நாளே அவளின் முதுகில் சுட்டு விரல் நகத்தால் கீறி அவளைச் சிலிர்க்கச் செய்து விட்டான்.


 அதற்கடுத்த நாள் என்னைச் சந்தித்தபோது கை கொடுத்து மகிழ்ச்சியில் கட்டிக் கொண்டான். அவள் அன்றே அவனை ஏற்றுக் கொண்டாள்.


 இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. அப்போதுதான் அவளை நான் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்திருந்தான்.. !!


பொதுவாக எங்கள் நட்பில் யாருமே வாடா போடா நண்பர்கள் அல்ல. பெயர் சொல்லி இயல்பாக பேசிக்கொள்ளும் நண்பர்கள். ஆனால் மிக நெருக்கமான நண்பர்கள். 


"யாரு பாஷு இது?" நான் கேட்டேன்.


"சொல்லியிருக்கேன் இல்ல. அஸ்மா" என்றான்.


 அவனது இடது தோளில் தொங்கிய அவளின் பேகை கழற்றி வைத்து மூச்சு வாங்கினான். 


அவள் லேசாக வெட்கப்பட்டுச் சிரித்தாள். அவள் வேர்த்துப் பூத்துப் போய் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். புர்கா அணிந்திருந்தாள். தலையில் முக்காடு.


 அவளது பேகிலிருந்து அவன் தண்ணீர் கேனை எடுத்துக் கொடுத்தான்.


 அவள் வாங்கி கண்களை மூடிக்கொண்டு தண்ணீர் குடித்தாள். சின்னப் பெண்களைப்போல புட்டி விளிம்பில் வாய் வைத்துத்தான் தண்ணீர் குடித்தாள்.


 அது அவளுக்குக் கற்பிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று தோன்றியது. மத ரீதியாக கற்பிக்கப்படும் அறிவியல் உண்மை.!


 அவளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தான்.


 என்னைப் பற்றி அவளிடம் முன்பே சொல்லியிருக்கிறான். நான் கொடுத்த ஊக்கத்தில்தான் துணிந்து அவளைக் காதலித்ததைக்கூட அவளிடம் சொல்லிவிட்டதை என்னிடமே சொல்லியிருந்தான். 


 அவள் என் கண்களைப் பார்த்து நட்புடன் சிரித்தாள்.


 அவள் பற்கள் சற்று பெரியவை. ஆனால் அது எந்த வகையிலும் அவள் அழகைக் குறைக்கவில்லை. பார்க்கப் போனால் அவளின் நீள முகத்தோற்றத்துக்கு அந்த பெரிய பற்கள்தான் கூடுதல் அழகாய் தெரிந்தது. 


அழகுக்கு குறைவில்லை. நல்ல நிறம் அவள். வெயில் பட்டால் ரத்தம் சுண்டிவிடும் போல தகதகக்கும் நிறம். சராசரி பெண்களைவிட சற்றுக் கூடுதல் உயரம். பெரிய கண்கள், கூரான மூக்கு, சிறிய உதடுகள், நீளக் கழுத்து, அவள் கொலுசு புதுசாக இருக்க வேண்டும். அடிக்கடி சப்தமிட்டுச் சிணுங்கியது.


 இன்று அவள் விடுப்பில் ஊருக்குச் செல்லக் கூடியவள். ஒரு மாதம் கழித்தே மீண்டும் வருவாளாம். புது தாதிப்பெண் நேற்றே வந்தாகிவிட்டது.  இவனும் உடல் நலமில்லை என்று பொய் சொல்லி விடுப்பெடுத்து அவளை இங்கே அழைத்து வந்து விட்டான். 


ஒரே அறைதான் என் வீடு. ஆனால் நீளமான, பெரிய அறை. கரண்ட் வசதி இல்லாததால் டிவி பேன் எதுவுமில்லை.


 பாய் தலையணை போர்வை ஒரு தண்ணீர் குடம். தவிர ஒரு பழைய டேபிள். 


சுவற்று முலையில் கட்டித் தொங்கவிடப்பட்ட உத்திரம். அல்லது பரண். அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். 


அந்த பரணில் நிறைய புத்தகங்களும் நோட்டுக்களும் இருக்கும். 


அவள் அவைகளை எடுத்து கொஞ்சம் வாசித்துப் பார்த்தாள். ஆனால் வந்தது அதற்காக அல்ல என்பதால் பெயருக்கு இரண்டு புத்தகங்களை கையிலெடுத்துக் கொண்டு அவன் விரித்து விட்ட பாயில் வந்து உட்கார்ந்து கொண்டாள். 


சிறிது நேரத்தில் அவள் இயல்பாகி என்னுடன் நன்றாகவே பேசினாள். என்னைப் பற்றி விசாரித்து தன்னைப் பற்றிச் சொன்னாள்.


 அவள் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகள். அதில் இவள்தான் மூத்தவள்.


இவள் இந்த வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களாகிறது. இவளுக்கு கீழே ஒரு தங்கை, தம்பி. 


தங்கை வேலைக்குச் செல்கிறாள். தம்பி இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான். அம்மாவும் வேலைக்குச் செல்வதால்தான் அவள் குடும்பம் ஓடுகிறது. அப்பாவின் ஆதரவு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அவர் இருப்பெல்லாம் இரணடாம் மனைவியுடன்தான். 


அன்று சரியாக காற்றுமில்லை என்பதால் சிறிது நேரத்தில் புர்காவைக் கழற்றிச் சுருட்டி பேகில் வைத்து விட்டாள்.


 உள்ளே அவள் இளஞ்சிவப்பில் ஒரு டாப்சும் மஞ்சள் லெக்கின்ஸும் போட்டிருந்தாள். மார்பில் போட்டிருந்த துப்பட்டாவால் அவ்வப்போது உதட்டுக்கு மேலே துடைத்துக் கொண்டிருந்தாள்.


 பால் நெற்றிதான் ஆனால் பார்க்க நிலாப்பிறையைப் பார்ப்பது போலிருந்தது. கண்ணுக்கு மையிட்டிருந்தாள். உதட்டுக்குக்கூட லேசாக லிப்ஸ்டிக் பூசியிருப்பது உற்றுப் பார்த்தபின்பே தெரிந்தது. 


கழுத்தில் ஒரு குட்டிச் செயின் போட்டிருந்தாள். அது பளபளத்து அவள் கழுத்துக்கு மிகவும் அழகு சேர்த்தது. தலையில் பூ வைத்திருந்தாள். மல்லியும் ரோஜாவும். அத்துடன் செண்ட்டும் அடித்திருக்கிறாள். அதன் மணம் வீட்டையே சுகந்தமாக்கிவிட்டது.


 கால் நீட்டி உட்கார்ந்து கொண்டாள். லெக்கின்ஸின் இறுக்கத்தில், நீளமான அவள் கால்கள் பெண்மை வடிவுடன் கவர்ச்சியாகவே இருந்தன.


 அவள் பக்கத்தில் நெருக்கமாக அவன். அவர்களின் தோள்களும் கால்களும் தொட்டுக் கொண்டிருந்தன. அவ்வப்போது அவன் கை அவள் தொடை மீதோ தோள் மீதோ விழுந்து கொண்டிருந்தது.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!