புதன், 20 நவம்பர், 2024

அற்புத ரோஜா -4

 

வெற்றிடத்தை விளக்க வார்த்தைகள் பேசப்பட்டாலும், அதன் இயல்பை உள்ளபடி அவற்றால் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது.. !!





4




“மாதிரிதான். இங்க சொல்லப்பட்ட எல்லாமே மாதிரிகள்தான். உண்மையை உண்மையா சொல்ல முடியாது. உணர்த்த மட்டும்தான் முடியும். அப்படி உணர்த்த முடிஞ்சிட்டா.. அதாவது கேக்கறவங்களுக்கு உணர்ந்துக்கற சக்தி இருந்தா அதை வார்த்தையால சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. அப்படி சொல்லும்போதுதான் மாதிரிகளை உதாரணமா வெச்சு எதையும் சொல்ல வேண்டியிருக்கு. கடைசில உணர்றதுக்காக செல்லப்பட்ட உண்மை மறைஞ்சு போய் உவமையா சொல்லப்பட்ட வார்த்தைகள் மட்டுமே நிலைச்சு நின்னுருது. அப்பறம் நாம அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் குடுத்து நம்ம மொழில புரிஞ்சுக்கறோம். அதாவது.. இதனோட விளக்கம் என்னன்னா மேலான ஒரு உண்மையை, ஒரு தகவலை பிறருக்கு சொல்லணும்னா இங்க வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டியதா இருக்கு. குறிப்பா அந்த மேலான தகவலைச் சொல்லத்தான் வார்த்தை பயன்படுத்தப் படுது. ஆனா.. பின்னால அதனோட நிலை என்னன்னா.. அந்த மேலான தகவல் மறைஞ்சு போய் வெறும் வார்த்தைகளை புடிச்சுட்டு நாமெல்லாம் தொங்க ஆரம்பிச்சிர்றோம். இப்ப நாம உண்மையைப் பத்தி தெய்வீகத்தைப் பத்தி எல்லாமே தெரிஞ்சு வெச்சுருக்கறது அந்த மாதிரிதான்.”

“....”

“சரி.. இப்ப ஆண்மை பெண்மைக்கு வருவோம். இது வெறும் வார்த்தைகளா பாத்தா உடனடியா கொச்சைப் படுத்தற மாதிரிதான் இருக்கும். ஆண்மை பெண்மை வார்த்தைகளோட அர்த்தம் அது. ஆனா.. அது சொல்லப்பட்டது வெறும் அர்த்தத்துக்காக இல்ல. ஆண்மை பெண்மையோட உண்மை நிலையை உணர்த்தத்தான். இந்த நிலை முழுக்க வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நிலை. அதை உவமைகளால ஒரு உதாரணத்துக்கு சொல்ல முடியும். ஆனா அந்த நிலையை அப்படியே விளக்க முடியாது. தானே உணர்ந்தாலொழிய அந்த உவமையைப் புரிஞ்சுக்கவும் முடியாது. உணர்ந்துட்டா அப்பறம் உவமையே தேவையில்ல. ஸோ.. இன்னொரு உதாரணம் சொல்றேன். தாய், தாய்மைனு சொல்லுவாங்க இல்லையா? அதாவது குழந்தை பெத்தவ எல்லாம் தாய்மை உள்ளவ கிடையாது. அதே சமயம் குழந்தையே பெத்துக்காத பெண்கள்ள தாய்மையை உணர்ந்தவங்களும் இருக்காங்க. இங்க தாய் பதவி வேணும்னா ஒடம்பு சார்ந்ததா இருக்கலாம். ஆனா தாய்மைங்கறது உடம்புக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு. அது மாதிரிதான் ஆண்மை பெண்மையும். அது முழுக்க முழுக்க அகம் சார்ந்தது. அதை உணர அகம்னா என்னன்னு கண்டு புடிக்கணும். அப்படி கண்டுபுடிச்சவங்கள்ள ஒரு ஆண்தான் கௌரிக்கா சொல்ற ஆண்மையுள்ள ஆண்” என்றாள் சௌமி. 

“மீசை வெச்ச ஆம்பளையை நான் சொல்லல” என்று சிரித்தாள் கௌரி.

“புரியற மாதிரிதான் இருக்கு. பட்.. சத்தியமா புரியவே இல்ல” என்றாள் வசுமதி.

“சொன்னேனே இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதுனு. வார்த்தைகளை வெச்சு மௌனத்தை விளக்க முடியாததைப்போல வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளையும் வார்த்தையால விளக்க முடியாது. அதெல்லாம் மன ரீதியான சங்கதிகள். ஸோ.. நீயே உணர்ந்தாலொழிய அந்த வார்த்தைகளோட அர்த்தம் புரியாது”

“சரி.. இதெல்லாம் நீ எப்படி உணர்ந்த?”

“ஹா.. உங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு விசயத்தை சொல்லி புரிய வெக்கறதுக்கே வார்த்தைகளுக்கு சக்தி இல்லாதப்ப.. இதை நான் எப்படி உணர்ந்தேன்னு எப்படி சொல்லி புரிய வெச்சுர முடியும்? நெவர். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த ஜென்மம் முடியறவரை கரடியா கத்தினாலும் புரிய வெக்க முடியாது. அதை தெரிஞ்சுக்க விரும்பினா.. அனுபவத்தால கத்துத் தர முடியும். அவ்ளோதான்”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்கூட்டியின் சத்தம் கேட்டது. 

சௌம்யா எழுந்தாள்.

“அப்பா வந்துட்டார். அப்பறமா வரேன்”

பெண்களிடம் சொல்லிக்கொண்டு ஹாலுக்குச் செல்ல, மாமா அவளைத் தடுத்தார்.

“எங்க போற சௌமி?”

“அப்பா வந்துட்டாரு மாமா”

“சரி.. நீ இங்கயே இரு. டேய் நிரு.. நீ போய் மாமாவை இங்க கூட்டிட்டு வா” என்றார். 

“இல்ல மாமா.. நானே போய்” என்றவளை இடைமறித்தாள் அத்தை. 

“என்னடி இல்ல மாமா இருக்கு மாமான்னுட்டு. நிரு நீ போய் மாமாவை கூட்டிட்டு வா”

“சரித்த.. உங்கண்ணா வருவாரு. ஆனா வீட்டுச் சாவி என்கிட்ட இருக்கு. ட்ரஸ் சேஞ்ச் பண்ணுவாரா இருக்கும். நானே கூட்டிட்டு வரேன். வா நிரு” என்று வெளியேறியவளுடன் நிருதியும் இணைந்து கொண்டான்.

சௌம்யாவின் அப்பா ஸ்கூட்டியை காம்போண்டுக்குள் நுழைத்து நிறுத்தியிருந்தார்.

நிருதியைப் பார்த்துக் கேட்டார்.

“என்னாச்சு நிரு.. வராங்களா?”

“இல்ல மாமா. அவங்க இன்னிக்கு வரல”

“வரலயா ஏன்?”

அவர்கள் வராமல் போனதற்கான காரணத்தை அவன் சொல்லிக் கொண்டிருக்க, கௌரியும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிவந்தாள்.

“ஹாய் மாமா”

“என்ன கௌரி இப்படி ஆகிப் போச்சு?”

“அதுக்கு நாம என்ன மாமா செய்ய முடியும்.? எது எப்ப நடக்கணுமோ அது அப்ப நடந்துருக்கு” என்றாள். 


“உனக்கு வருத்தம் இல்லையா?”

“வருத்தமா? போங்க மாமா.. இப்பதான் நான் நெஜமாவே ஹேப்பியா பீல் பண்றேன்”

“நெஜமாவா?”

“யெஸ் மாம். எனக்கு இந்த பொண்ணு பாக்கற சங்கதியே சுத்தமா புடிக்கல. பெரிய மனுசங்க நீங்கள்ளாம் கம்பெல் பண்ணீங்களேனுதான் ஒத்துகிட்டேன்”

“கல்யாணம் பண்ணிக்கறது அவ்ளோ கஷ்டமா இருக்கா உனக்கு?”

“உண்மைய சொன்னா இப்ப கல்யாணம் பண்ணிக்கறதுல எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட்டே இல்ல மாமா. அதுவும் இப்போதைய நிலைக்கு நோ சான்ஸ்..”

“ஏஜ் பார் ஆகுதே கௌரி?” 

“அப்படி ஒண்ணும் பெரிய ஏஜ் பார் ஆகிரல மாமா. இருபத்தி அஞ்சுதான் ஆச்சு. இன்னும் காலம் இருக்கு. இருபத்தெட்டு வயசுல கல்யாணம் பண்ணா போதும். இது என்னோட இப்போதைய தீர்மானம்” என்றாள். 

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளது அப்பாவும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். 

“வாங்க. எல்லாருமா உள்ள வந்து உக்காந்து பேசுங்க. கௌரிக்கா வீட்ல பாயாசம் இருக்கும். நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று சௌம்யா கிளம்ப அவளுடன் நிருதியும் இணைந்து கொண்டான்.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக