வியாழன், 14 நவம்பர், 2024

அற்புத ரோஜா -2

 மனிதன் இறப்பது மட்டுமல்ல, இருப்பதும் வருத்தத்திற்குரிய விசயம்தான்.!


இறந்தவன் நிரந்தரமான உறக்கத்தில்.!


இருப்பவன் நிரந்தரமான விழிப்பற்ற நிலையில்.. !!


2



ஹால் சோபாவிலேயே உட்கார்ந்திருந்தார் மாமா. உள்ளே நுழைந்த சௌம்யாவைப் பார்த்துக் கேட்டார்.

“அதுக்குள்ள எங்க போயிட்ட சௌமி?”


“வீட்டுக்குத்தான் மாமா. எல்லாம் ரெடிதானே?” 


“ம்ம்.. எல்லாம் ரெடிதான். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா சரி”


அதே நேரம் பக்கத்து வீட்டுப் பெண்களில் ஒருத்தியான ஷ்யாமியும் உள்ளே வந்தாள். 


“ஹாய் சௌமி.. ஹாய் நிரு.. ஹாய் அங்க்ள்” என்று ஒவ்வொருவருக்கும் முகம் பார்த்து ஹாய் சொன்னாள். “கௌரி எங்க?”


“ரூம்ல இருக்கா” ஷ்யாமியிடம் கௌரியின் அறையைக் கை காட்டினார் மாமா.


அவள், “ஓகே அங்க்ள்” எனச் சொல்லிவிட்டு கௌரியின் அறைக்குள் போனாள்.


அவளைத் தொடர்ந்து சௌமியும் அந்த அறைக்குள் நுழைந்தாள். 


அலங்கரிக்கப்பட்ட விக்கிரகம் போலிருந்த கௌரியைப் பார்த்து, “வாவ்” என்றாள் ஷ்யாமி.


“என்னடி குறைக்கற..?” எனக் கேட்டாள் கௌரி. 


அவளது அருகே சென்று சொன்னாள். 

“ச்சும்ம்மா.. தளதளனு.. ம்ம்.. என்னவோ சொல்லுவாங்களே பாய்ஸ்.?”


அருகில் நின்றிருந்த வசுமதி சட்டென்று சொன்னாள்.

“நாட்டுக் கட்டை மாதிரி”


“யெஸ்.. நாட்டுக்கட்டை. அது மாதிரித்தான்..” என்று சிரித்தவளின் இடுப்பில் நறுக்கெனக் கிள்ளினாள் கௌரி.


“யூ.. யூ..” என்றுவிட்டு சௌமியைப் பார்த்துச் சொன்னாள்,  “எனக்கு இந்த அலங்காரமே புடிக்கல சௌமி”


“அப்படியா? ஏன்க்கா?” பக்கத்தில் போனாள்.


“சிரமமா இருக்குடி. இந்த.. ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கறதைப் பத்தி என்னமோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே.. அது மாதிரி இருக்கு இது. பொண்ணு பாக்க வரப்ப இத்தனை மேக்கப்போட நான் ஃபிகராத்தான் இருப்பேன். ஓகே.. ஆனா கல்யாணம் பண்ணிட்டு டெய்லியுமா நான் இந்த மாதிரி மேக்கப் பண்ணிக்க முடியும்? அப்ப மேக்கப் இல்லாத இந்த அழுக்கு மூஞ்சிய பாத்துதானே ஆகணும்”


“அது உன்னை கட்டிக்கப் போறவனோட தலையெழுத்து. அதைப் பத்தி நீ ஏன் கவலைப் பட்டுக்கற?” என்றாள் வசுமதி. 


ஷ்யாமி, “போடீ.. உன் அழகுக்கு என்ன குறைச்சல்? மேக்கப்பே இல்லேன்னாலும் உன் முகம் லட்சணமாத்தான் இருக்கும்” என்றாள்.


“அப்படியா.. தேங்க்ஸ்” என்றாள் கௌரி. 


“அழகோ அழகில்லையோ.. அதை விட்டுட்டு சாதாரணமா ஒரு பொண்ணு எப்படி இருப்பாளோ அவளை அப்படியே பொண்ணு பாத்து புடிச்சு கல்யாணம் பண்ணிக்கறதுதான் ஆண்களோட அழகு இல்லையாக்கா?” என்றாள் சௌம்யா. 


“கரெக்ட் சௌமி. நானும் அதையேதான் நெனைச்சேன்” கௌரி சொன்னாள். 


“அப்படிப் பாத்தா எந்தப் பொண்ணுக்கும் கல்யாணமே ஆகாது போலயே” என்றாள் வசுமதி.


சௌம்யா, “அப்படி பெண்கள் நெனைக்கறதுதான் தப்பு. ஆரம்ப காலத்துல இருந்தே பெண்கள் இப்படி பழக்கப் படுத்திட்டதாலதான் இன்னிக்கு இது ஒரு பேஷன் மாதிரி ஆகியிருக்கு. ஆண்களை கவர்றதுக்காக ஆரம்பிச்ச பழக்கம் இன்னிக்கு ஒரு சடங்காவே மாறிப் போச்சு. இப்பவும் பெண்கள் எல்லாம் இந்த அலட்டலான அலங்காரங்களை எல்லாம் கை விட்டாங்கன்னா.. ஆண்கள் இயல்பான அழகோடயே பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கப் பழகிக்குவாங்க. அலங்காரம் பண்ணிக்காம இருக்கறதால ஒரு பெண்ணோட தகுதியோ ஈர்ப்புத் தன்மையோ எந்த வகையிலும் கொறைஞ்சு போகப் போறதில்ல. அதுவே அழகாத்தான் இருக்கும்” என்றாள்.


“......” யாரும் பேசவில்லை.


“பெண்கள் இப்படி அலட்டலா பண்ணிக்கற அலங்காரத்தால ஆண்களுக்கு பெண்கள் மேல வரக்கூடிய கவர்ச்சி ஒடம்பு மேல உண்டாகுற செக்ஸ் பீல்தானே தவிர உள்ளார்ந்த நேசம் இல்லை. இந்த அலங்கார கேலிக் கூத்தால உள்ளார்ந்த நேசம்னு ஒண்ணு இருக்கறதையே நாமெல்லாம் இப்ப மறந்துட்டு.. ஆசையைத் தூண்டிவிட்டு அதை பொண்ணு பாக்கறதுங்கற சடங்காக்கிட்டோம். காரணம்.. ஆண் பெண் உறவே செக்ஸ்க்காகன்னு நாம நெனைக்கறதுதான். அழகில்லேன்னா ஆணோ பெண்ணோ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டோம். அதையும் தாண்டி உள்ளார்ந்த நேசம்னு ஒண்ணு காட்டப் படறதும் சொல்லப் படறதும் கதை நாடகம் சினிமால மட்டும்தான். நிஜ வாழ்க்கைல அப்படி ஒண்ணு இல்லவே இல்லை. அன்பா குடும்பம் நடத்தி குழந்தை குட்டி பெத்துக்கணும்னா புருஷனோ பொண்டாட்டியோ அழகா இருந்தே ஆகணுமா என்ன? கண்ணு மூக்கு வாய் கை கால் கோணலோ ஊனமோ ஏன் யாருமே கல்யாணம் பண்ணிக்கறதில்லை. அவங்க மனசுல அன்பே இருக்காதா? இல்ல குடும்பம் நடத்த தகுதியே இல்லாதவங்களா? அப்ப குடும்பம் நடத்தறதை எது தீர்மானிக்குது? ஒடம்போட அழகுதானே? 


ஸோ.. ஆண்களை ஏதோ ஒரு விதத்துலயாவது கவரணும்ன்றது மட்டுமே பெண்களோட பிறவி குணம்ன்ற அளவுக்கு நிலைமை வந்துருச்சு. அதுக்காகத்தான் இத்தனை அலங்காரம். அதே சமயம் நான் இப்ப இந்த அலங்காரத்தை குறை சொல்லல. ஆனா அதனோட நோக்கம் என்னன்றதுதான் நான் சொல்றது. இந்த மாதிரி அலங்காரங்களால பெண்கள் மேல ஆண்களுக்கு வரக் கூடிய கவர்ச்சி வெறும் இனக் கவர்ச்சி குடுக்கற மோகம் மட்டும்தானே தவிர அன்பு இல்லை. மோகம் தீர முப்பதே நாள் போதும். அல்லது அறுபது நாளே ஆகட்டும். இன்னிக்கு இருக்கற சூழ்நிலைல ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் மனமொத்து வாழ முடியாம போறதுக்கு முக்கியமான காரணங்கள்ள ஒண்ணு இந்த அலங்காரம்தான். இங்கயே போலி முகம் ஆரம்பிச்சுருது. பொண்ணு பாக்கறதுல இருந்து ஆரம்பிக்கற ஏமாற்று வேலைகள் அதுக்கப்பறம்.. கட்டைல போறவரை ஏதோ ஒரு வகைல தொடர்ந்துட்டேதான் இருக்கு.” என்று தன் பேச்சை தற்காலிகமாக முடித்தாள் சௌமி.


“ரொம்ப நல்லா பேசற சௌமி” வியந்து சொன்னாள் வசுமதி.


“ரியல்லி யூ ஆர் க்ரேட்பா” என்றாள் ஷ்யாமி.


“இத நான் பாராட்டு வாங்கறதுக்காகப் பேசல. உண்மையைச் சொல்லிட்டிருக்கேன். நம்மை அழகா வெச்சுக்கணும்ன்ற பேர்ல நாமெல்லாம் என்ன பண்ணிட்டிருக்கோம்? நம்ம ஒடம்பு மேல ஒரு ஆணோட ஆசையை தூண்டிவிட்டுட்டு இருக்கோம். அப்படி ஒரு காரியத்தை நாமளே செஞ்சுட்டு.. அப்பறமா.. அய்யய்யோ என்னை பாத்துட்டான் பாத்துட்டான்னு ஆண்கள் மேல நாமளே ஒரு பழியை போடறோம். ஒரு ஆணால ஒரு பெண்ணை செக்ஸைத் தாண்டி வேற விதமா பாக்க முடியாதுனு சொல்லிக்கறோம். பெண்ங்கறவ வெறும் ஒடம்புதானான்னு நியாயம் கேக்கறோம். சரி.. அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம பேசிட்டிருந்தது.. ஒரு ஆணோட பார்வை நம்மை உறுத்தக் கூடாதுனு நாம நெனைச்சா மொத அவன் மனசுல நம்ம மேல ஆசை உண்டாகற மாதிரி நாமளே நடந்துக்கக் கூடாது. பெண்களுக்கு நார்மல் மேக்கப் போதுமானது. ஓவர் மேக்கப்தான் கூடாது. சுகர் பேஷண்ட்டாவே இருந்தாலும் அவனைக் கொண்டு போய் ஸ்வீட் கடைல வேலைக்கு வெச்சா ஒவ்வொரு இனிப்புலயும் இத்தூனூண்டாவது பிச்சு வாய்ல போடத்தான் செய்வான். இது அவன் தப்பு இல்ல. பெண்கள் எல்லாரும் பிரச்சினையைத்தான் பாக்கறோம். அந்த பிரச்சினைக்கான காரணம் என்னன்னு பாக்கறதில்ல. இந்த குணம் நம்மள மாதிரி பெண்கள் மத்தில புரையோடிப் போச்சு. இதை ஊரு உலகத்துக்கெல்லாம் சொல்லி வாங்கிக் கட்டிக்க யாரும் முன் வர மாட்டாங்க. அட்லீஸ்ட் நாமளாவது தெரிஞ்சு வெச்சுப்பமே”


“இதெல்லாம் எப்படிறீ நீ பேசக் கத்துட்ட?” எனக் கேட்டாள் கௌரி.


“பல நூற்றாண்டுகளாகவே ஆண்கள் உலகம் பெண்கள் மேல அசைக்க முடியாத ஒரு அபிப்ராயம் வெச்சுருக்கு. அது என்ன தெரியுமா? பெண்கள் எப்பவும் அழகுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருவாங்கன்றதும், சடனா எதுக்கும் உணர்ச்சிவசப் பட்றுவாங்கன்றதும், எதையும் புரிஞ்சுக்கற சக்தி இல்லாத, புரிஞ்சுக்க விரும்பாதவங்கன்றதும். உண்மைலயே நாம அதைப் பத்தி என்னிக்காவது யோசிச்சிருக்கமா? மாட்டோம். கேள்விப் பட்ட ஒடனே சண்டைக்குத்தான் போவோம். அது ஏன்? ஆனா.. அதுவே ஒரு ஆணா இருந்தா அதைப் பத்தி யோசிக்கற மனப்பான்மை இருக்கு. இது இயற்கையோட படைப்பா இல்லை செயற்கையா நாமளா உருவாக்கிக்கிட்டதா? இப்ப தேவை இதுக்கான விடைகள் இல்ல. நமக்கான மாற்றங்கள். ஆனா.. அந்த மாற்றங்களுக்கு பெண்களான நாமளே தயாரா இல்லாதபோது யாரை என்ன சொல்ல முடியும்?”


“யப்ப்ப்பா..” என்றாள் வசுமதி. 


“சே.. இதுக்கப்பறம் இப்படி அலங்காரம் பண்ணிட்டு உக்கார்றது எனக்கே வெக்கக் கேடா இருக்குப்பா” என்று சிரித்தாள் கௌரி. 


அதே நேரம், “என்ன.. இங்க ஒரே அரட்டைக் கச்சேரியா இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் கௌரியின் அம்மா.


“அம்மா.. நம்ம சௌமியோட சொற்பொழிவைக் கேட்டேனு வெய்.. நீ அசந்து போவே” என்று தன் தாயிடம் சொன்னாள் கௌரி.


நிருதி உள்ளே வந்தான். 

“கௌரி.. உன்னோட மேக்கப்புக்கு வேலை இல்ல”


“ஏன்டா?” கௌரி கேட்டாள். 


அம்மா சொன்னாள். 

“அவங்க இன்னிக்கு வரலையாம்”


“அட.. இது அதைவிட தூளா இருக்கே” என்று சிரித்தாள் கௌரி.


“என்னடி தூள்?”


“சௌமியோட பேச்சைக் கேட்டப்பறம் இது தூளாகிப் போச்சு. ஹாய் ப்ரெண்ட்ஸ். நாம இன்னும் பாக்காம விட்ட படம் எந்த தியேட்டர்ல ஓடுது?”


“அட.. அனாம்பத்தா போனவளே.. நீ வருத்தப் படுவேன்னுல்ல நான் கவலைப் பட்டேன்” என்றாள் அம்மா.


“நான் ஏன் வருத்தப் படணும்? என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவனுக்கு லக் இல்ல.. அன் லக்கி ஃபெல்லோ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் கௌரி.. !!







ப்ளே ஸ்டோரில் 'நான் நிருதி' என்கிற இந்த இந்த ஆப் கிடைக்கும்.. !!

என்னுடைய அனைத்துக் கதைகளும் இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படும்.



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக