சனி, 17 பிப்ரவரி, 2024

தாராயோ தோழி -1

 வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே வந்ததும் ஓரமான இடம் பார்த்து தன் பைக்கை நிறுத்தினான் நிருதி. 


காலை இளவெயில் இன்னும் கடுமையேறாமல் மிதமான வெப்பத்தை பூமி மீது தெளித்துக் கொண்டிருந்தது.


அதனால் ஏதோ ஓர் அலுவல் காரணமாக குளித்துக் கிளம்பும் மனிதர்ளின் முகங்களில் வெப்பச் சுருக்கம் விழாமல், புத்துணர்ச்சி நிறைந்து காணப் பட்டது.


 பேண்ட் பாக்கெட்டில்  இருந்த  மொபைலை எடுத்து தமிழ்ச் செல்விக்கு போன் செய்தான் நிருதி.


 ரிங் போகனது. 


மறு பக்கத்தில் அவள் எடுத்தாள்.


"ஹலோ?" அவனுக்கு முன் அவளே பேசினாள். மிக மெல்லிய இளங் குரல். 


அவன் மனதார விரும்பிய அவள் குரலைக் கேட்டதும் அவனுக்கு காதினித்தது. மெல்ல உளம் சிலிர்த்தான். 


"ஹாய் தமிழ்..”


“ஹாய்..”


“நான் கிளம்பிட்டேன்"


"ம்ம்.. சரி வாங்க"


"எங்க வரது?"


"என்... என்.. வீட்டுக்கே வந்துர்ரீங்களா?"


"உன் வீட்ல ஆள் இல்லையா?"


"இருக்காங்க.. ஆமா.. வீட்டுக்கு வேண்டாம்."


"அப்றம் நான் எங்க வரது.?"


"ம்ம்.. தெரியலயே.. சரி.. என்ன பண்றது இப்ப?"


“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ வெளிய வரணும். நான் உன்னை மீட் பண்ணனும்”


"ம்ம்.. வரேன்.. ஆனா என்ன சொல்லிட்டு  வரதுனுதான் தெரியல"


"உன் பிரெண்டு சஞ்சனா வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வாயேன்.."


"ஐயோ.. அவ வீட்டுக்கா?"


"ஏன்?"


"ம்கூம்.. அவ வீட்டுக்குன்னு சொன்னா அம்மா திட்டுவாங்க.. பொறந்த நாளும் அதுவுமா எனக்கு திட்டு வாங்க விருப்பம் இல்ல.." மெல்லிய சிரிப்பின் குரல் வசீகரித்தது. 


"ம்ம்.. சரி.. இப்ப நான்  என்ன பண்ண? நான் உனக்காகத்தான் லீவ் போட்டேன்"


"ஹையோ.. சரி வாங்க.."


"எங்க வரது? உன் வீட்டுக்கேவா?"


"நோ.. நோ.. வீட்டுக்கு வேண்டாம்.  அதுவும் வம்பாகிரும்"


"......"


"அலோ...?"


"சொல்லுடி செல்லம்.. இப்ப நான்  என்னதான் பண்ண?"


"வரேன்ன்ன்.. டென்ஷனாகிராதிங்க.."


"இல்ல..  வா.."


"வந்து... எங்க ஏரியா பஸ் ஸ்டாப்... இல்ல இல்ல.. அங்க வேண்டாம்.. அந்த  ஸ்கூல் இருக்கில்ல? அங்க பக்கத்துல வெய்ட் பண்ணுங்க.. நான்  வீட்லருந்து வெளிய வந்ததும்  உங்களுக்கு  கால் பண்றேன்"


"உன்ன பாக்க ரொம்ப  ஆசையா இருக்கேன் செல்லம்"


"ம்ம்.. வரேன்ப்பா.."


"ஏய் தமிழ்.."


"ம்ம்? "


"பக்கத்துல யாராவது  இருக்காங்களா?"


"இல்ல.. ஏன்?"


"ஒரு செல்பி எடுத்து  அனுப்பி வை.."


"ம்கூம்.. அதான் நேர்ல பாக்க போறோம்ல?"


"நேர்ல ஓகேமா.. இப்ப நீ எப்படி  இருக்கேனு ஒரு செல்பி.. ப்ளீஸ்" குரலை வெகுவாகத் தணித்தான்.


"இப்ப என்ன அவசரம்? " அவள் குரலில் கொஞ்சல் வழிந்தது. 


"அவசரமில்லாம நீ மெதுவாவே வா.. அதுவரை நான்  என் தேவதையை ரசிச்சிட்டிருக்கேனே?"


"ஓகே.. வெய்ட்.." காலை கட் பண்ணினாள்.


நிருதி மொபைலை சட்டை பாக்கெட்டில் திணித்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்தான். 


முறுக்கிப் பிடித்தால் பத்து நிமிடத்தில் தமிழ் சொன்ன ஸ்கூலை அடைந்து விடலாம். ஆனால்  அங்கே போய் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது வரலாம்  என்பதால், கனவுகளில் மிதந்தபடி மெதுவாகவே பைக்கை ஓட்டினான்.. !!


அவன் எண்ணம்.. சிந்தனை.. மனசு எல்லாம் தழிழைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது. 


தமிழ் அவன் மனதுக்கினிய பெண்ணாய் இருந்து இன்று மனதையே ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.. !!


தமிழ் சொன்ன இடத்தை அடைந்தான் நிருதி. 


பைக்கை ஓர் ஓரமாக நிறுத்தி விட்டு பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். நெட் ஆன் செய்து வாட்ஸப் ஓபன் பண்ணினான். 


தமிழிடமிருந்து அவளின் படம் வந்திருந்தது. 


ஆர்வமாக அதைத் திறந்து பார்த்தான். அவன் மனசு குதூகலித்தது.. !!


தமிழ்.. !! 


பிறந்த நாள்  உடையில் அழகாக இருந்தாள். ஓவர் மேக்கப்  எல்லாம் செய்யவில்லை.  ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்கும் படியாக மேக்கப் செய்திருந்தாள். 


அவளின் வெண்விழி பூத்த காந்தக் கண்கள்  அவனைக் காதலாகப் பார்ப்பதை.. உற்று நோக்கிச் சிலிர்த்தான்.. !!


'நிச்சயமாக  இவளும் என்னை மனதார விரும்புகிறாள். அதை அவள் கண்கள்  அப்பட்டமாகச் சொல்கிறது. ஆனால்  அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். இருக்கட்டும்..  எத்தனை நாள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாள் என்று பார்த்து விடலாம்'


அவனது மனம் கவர்ந்த தமிழின் அழகு முகத்தை ரசித்தபடி அவள் வரக் காத்திருந்தான்.


 அவளுக்காக காத்திருக்கும்  அந்த நொடிகள் அவனுக்கு  சுகமானதாகவே இருந்தது. 


ஒரு கால் மணி நேரம் கழித்து செல்பியில் பார்த்த அதே உடையில்.. அதே தோற்றத்தில் முகம் நிறைய சிரிப்புடன் அவனிடம் வந்தாள் தமிழ்.. !! 


ஆனால்  அவள் தனியாக வரவில்லை.  அவளுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.. !!


"ஹாய் தமிழ்"


"ஹாய் நிரு அண்ணா.." பளிச்சென சிரித்தாள்.


"அண்ணாவா?" லேசாகத் திகைத்தான்.


"ம்ம்.. ஏன்? எப்பவும் நீங்க  எனக்கு  அண்ணாதான்.." என்று சிரித்தபடி இயல்பாக நெருங்கி வந்து தன் வலது கையை முன்னால் நீட்டினாள்.


உள்ளே திடுக்கிட்டான். ஆனாலும் அதை உடனே காட்டிக் கொள்ளாமல் அவள் கையைப் பற்றிக் குலுக்கினான்.


"மேனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே.."


"தேங்ங்க்க் யூ... வெரி மச்"


அவனைப் பார்த்த பரவசத்தில்  அவளின் கண்களின் ஓரத்தில் லேசான நீர் தேக்கம்  உருவாவதை கவனித்தான். 


அவள் கையை அழுத்தினான். அவளை இழுத்து  நெஞ்சுடன் சேர்த்து  இறுக்கி அணைத்துத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஒரு தாபம் அவன் நெஞ்சில் மூண்டது.


'இந்த  இரண்டு  ஆண்டுகளில் எவ்வளவு  அழகாய் வளர்ந்து விட்டாள்.? பெண்மைக்கே உரித்தான  உடலின் வளைவுகளும்.. நெளிவுகளும்.. இளமையின் வனப்பும்.. வாளிப்பும்.. யப்பா..!!'


அவன் நெஞ்சில்  ஓடிய அதே எண்ணங்கள் தன் நெஞ்சிலும் ஓடுவதைப் போலவே அவன் கண்களை ஆழமாகப் பார்த்து சிலிர்த்து நின்றாள் தமிழ்ச்செல்வி.. !!



தாராயோ தோழி -2


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக