புதன், 8 நவம்பர், 2023

உன்னைச் சுடுமோ -7

 கிருத்திகா மாலைதான் வீட்டுக்குத் திரும்பினாள். 


களைப்பாக இருந்தது. அது உடல் களைப்பில்லை. மனதின் களைப்பு. யோசித்து யோசித்துக் குழம்பி மன உளைச்சலுக்கு ஆளானதால் உண்டான களைப்பு.


காலையிலிருந்து நடந்து சம்பவங்களை அடிக்கடி அசை போட்டுப் பார்த்தாள். முக்கியமாக நிருதியின் வீட்டுக்குச் சென்று, அவனுடன் பேசியது பழகியது எல்லாம். 


அவனுக்கு தன் மீது ஆசை இருக்கிறது என்பது புரிந்தது. அதற்காக அவன் தன்னை உதட்டில் முத்தமிட்டதை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. 


இரவு டிபனை செய்து தன் பெற்றோருக்கானதை தம்பியிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அவளும் சாப்பிட்டாள். 


தம்பி வீட்டுக்கு வந்தபின் கதவை அடைத்துப் படுத்தவளுக்கு கடுமையான மனப் போராட்டம் தொடங்கியது.


தூக்கம் வர மறுத்தது. கண்டபடி ஏதேதோ யோசிக்கத் தோன்றியது. 


ஒரு பக்கம் அவளின் பருவ வயதுக்கான ஆசை ஏக்கம் தவிப்பு எல்லாம் அவளை வாட்டியது.. !!



***


அதன்பின் இரண்டு நாட்கள் கிருத்திகா நிருதியின் கண்ணிலேயே படவில்லை. அவள், அவனைப் பார்க்கவே விரும்பாமலிருந்தாள்.


அவள் அப்படி இருந்தது நிருதிக்கு ஒரு வகையில் ஆறுதலாகக் கூட இருந்தது. ஆனாலும் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. 


அவளால் உண்டான அவமான உணர்வு அவனுக்குள் ஓர் உறுத்தலாய் இருந்து கொண்டேதான் இருந்தது.


இரண்டு நாட்கள் கழித்து அவன் வேலை முடிந்து வீடு திரும்பியபோது கிருத்திகா அவளின் வீட்டுக்கு முன்பாக நின்றிருந்தாள். காதில் போனை வைத்து சன்னக் குரலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். 


அவன் பக்கம் திரும்பி அவனை ஒரே ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி நின்று கொண்டாள். 


அவள் அப்படி அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டது அவனுக்குள் ஒரு வலியைக் கொடுத்தது.. !!


கிருத்திகாவின் தாய் ஆஸ்பத்ரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டாள். அன்று மாலை அவளைப் பார்ப்பதற்காகப் போனான் நிருதி. 


கிருத்திகா அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் காபி வைத்துக் கொடுத்தாள். காபியை வாங்கிக் கொண்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்கவே இல்லை.


உள்ளுக்குள் ஏதோ ஒரு தாக்கம் ஏற்பட்டது போலிருந்தது. ஆனாலும் அவன் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.


சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவள் அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு தன் வீட்டுக்கு வந்து விட்டான்.. !!




***



கிருத்திகா அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளுக்கு நேரமாகி விட்டிருந்தது. 


அவள் பேகை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ஓய்வில் இருந்த அம்மாவிடம் போய் சொல்லிக் கொண்டு கிளம்பவிருந்த நேரம் அவளது அப்பா சொன்னார். 

"பாப்பா கொஞ்சம் இரு"


"என்னப்பா?" அப்பாவைப் பார்த்தாள்.


"நமக்கு ஏத்த மாதிரி ஒரு மாப்பிள்ளை அமைஞ்சிருக்கு" என்றார்.


திகைத்ததுபோல அவரைப் பார்த்தாள். பேச்சு வரவில்லை.


"உங்கம்மா ஆஸ்பத்திரில இருக்கப்ப பாக்க வந்தாங்களே..  அவங்க பையன்தான். விசாரிச்சு பாத்துட்டேன். பிரச்சினை ஒண்ணுமில்ல.. நல்ல குடும்பம்தான். ரெண்டு பசங்க இருக்கற வீடு. மூத்த பையனுக்கு கல்யாணம் ஆகிருச்சு. இப்ப சின்ன பையனுக்கு உன்னை பண்ணனும்னு ஆசைப் படறாங்க"


எதுவும் சொல்லத் தோன்றாமல் அப்பாவையே பார்த்தபடி நின்றாள்.


"ஞாயித்துக்கிழமை உன்னை பாக்க நம்ம வீட்டுக்கு வரேன்றுக்காங்க. நானும் சரினு சொல்லிட்டேன்." எனச் சொல்லிவிட்டு அவள் முகத்தையே பார்த்தார். 


"சரிப்பா" மெல்லச் சொன்னாள்.


"உனக்கு ஒண்ணும் இல்லயே?"


"எனக்கு என்னப்பா.. நீங்க பாத்து பண்ணுங்க.. இப்ப எனக்கு டைமாச்சு.. நைட் வந்து பேசிக்கலாம்"


அப்பா அம்மா முகத்தில் சந்தோசம். 

"சரிமா.. நீ போயிட்டு வா" 


"சரிபா" அப்பா அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்து காலில் செருப்பை மாட்டும்போது அவளுக்கு சட்டென ஒரு கவலை வந்தது. 


'கைல அவ்ளோ பணம் இல்லையே. இப்பதான் அம்மாவுக்கு உடம்பு முடியாம ஆகி.. ஆஸ்பத்ரி செலவு முடிஞ்சிருக்கு. இப்ப திடுதிப்புனு எனக்கு கல்யாணம்னா அவ்வளவு பணத்துக்கு என்ன பண்றது?'


அவளது குடும்ப நிலவரம் அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். அதைப் பற்றிய யோசனையுடனே வெளியே சென்று தெருவில் நடந்தபோது அவளுக்குப் பின்னால் பைக் ஹாரன் சத்தம் கேட்டது.


திரும்பிப் பார்த்தாள்.  நிருதி பைக்கில் வந்து கொண்டிருந்தான். சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக நடையைக் கட்டினாள். அந்த அலட்சித்தை கவனித்து அவனும். வேகமாக போய்விட்டான்.


பஸ் ஸ்டாப்பில் போய் நின்றபோது கவலையா சோகமா என்று புரியாத ஒரு மாதிரியான உணர்ச்சி அவளைத் தாக்கியிருந்தது. 


பஸ் வந்ததும் ஏறிக் கொண்டாள். ஒரு மணிநேர பஸ் பயணம் முடித்து அவள் ஆபீஸ் போனாள்.


 தன் இருக்கையில் போய் உட்கார்ந்ததும் தன் பக்கத்து இருக்கை தாரிணி இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"ஹாய்"


"ஹாய்"  எனச் சொன்ன கிருத்திகாவின் மனசுக்குள் கவலை மேகம் ஒன்று உருவாகியிருந்தது.


"என்ன ஒரு மாதிரி இருக்க போல? அம்மா எப்படி இருக்காங்க?"


"ஓகேதான். அதெல்லாம் பிரச்சினை இல்ல" தனது சிஸ்டத்தை ஆன் செய்தாள். 


"வேறென்ன பிரச்சினை?"


"வர்ற சன்டே என்னை பொண்ணு பாக்க வராங்களாம்"


"வாவ்.. கங்கிராட்ஸ்.. நல்ல விசயம்தானே?"


"அது நல்ல விசயம்தான். ஆனா என்னை புடிச்சு போய் ஓகே சொல்லிட்டாங்கனா கல்யாணம் பண்ண பணம் நெறைய செலவாகுமே"


"ஹேய்.. அதெல்லாம் நீ ஏன் கவலைபடுற.? மொதல்ல.. வரவங்க உன்னை பாத்து ஓகே செல்லட்டும். மத்தது எல்லாம் தானா நடக்கும்" தாரிணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு பெண் உள்ளே வந்து "ஹாய்" சொன்னாள். 


அதன்பின் பேச்சு மாறிவிட்டது. கிருத்திகா வேலையை கவனித்தாலும் அவ்வப்போது அவள் மனதுக்குள் ஒரு கலக்கம் வரத்தான் செய்தது.. !!


அன்று இரவு உணவின்போது அம்மா மீண்டும் அவளின் திருமண பேச்சை ஆரம்பித்தாள். அவள் பணப் பிரச்சினையை சொன்னபோது கடன் வாங்கி முடித்து விடலாம் என்றார் அப்பா.


அவளது தம்பிக்கும் இன்னும் சில மாத‌ங்களில் படிப்பு முடிந்துவிடும். அதன்பின் வேலைதான். கடனை அடைத்து விடலாம் என்று அவனும் உறுதியளித்தான்.


இரவு படுக்கையில் விழுந்தபோது மனசு சந்தோசமாகத்தான் இருந்தது. எதிர்கால கனவுகளும் கூடவே கவலைகளும் தோன்றின.. !! 




என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக