சனி, 27 மார்ச், 2021

பிழையான வரம் -1

 அந்த நதிக்கரை ஓரம், தன் இள மேனியை வந்து தழுவிச் செல்லும் மென் குளிர் காற்றை உணர்ந்தபடி, பட்டு மேலாடை பறக்க மேற்கை நோக்கி நின்றிருந்தாள் குந்தி. பொன்னொளி படரும் பட்டுத் திரைகளைப்போல மெல்லிய அலையெழும்பிய பர்ணஸா நதியில் வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.. !!

அவள் உள்ளம் ஒருவித மோன நிலையில் லயித்திருந்தது. முற்றாத, இளம் கன்னிப் பருவப் பெண்ணின் உடல் சிலிர்ப்பில் எழும் மோனலயிப்பு அது. 

அவள் எதிரே நதிநீரலைக்கு அப்பால் சூரியன், முகில் திரள்களுக்குள் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒளியத் தெரியாத குழந்தை ஒன்று தன் தாயிடமிருந்து ஒழிந்து பின் மீண்டும் திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்ப்பதைப் போலிருந்தது மாலை நேரத்துப் பகலவனின் மறைவு. சாயுங்கால பொன்நிற கதிரொளி பட்டு அவள் கண்கள் கூசினாலும் இமைகளை சிமிட்டிக் கொள்ளும் அவள் உள்ளம் அந்தச் சூரியனையே லயிப்புடன் பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தது.. !!

வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடும் நதிநீர் அலைகளில் குளித்து வரும் மாலை நேர இளந்தென்றல் நதியின் குளுமையை அள்ளி வந்து அவளின் பொன்நிற மேனியை வருடிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. !!

அவள் எவ்வளவு நேரம், உள்ளம் மயங்கிய அந்த மோன நிலையில் லயித்து தன்னை மறந்து நின்றிருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. கதிரவன் முற்றாக மறைந்து இருள் கவியத் தொடங்கியபோதுதான் பின்னால் "இளவரசி" எனக் குரல் கேட்டுக் கலைந்தாள்.. !!

தன்னுணர்வு மீண்டதுபோல கலைந்து மேற்கு நோக்கிய விழிகளை மீட்டு கனிந்த முகத்தைத் திருப்பினாள் குந்தி. அவள் மார்பை அணைத்திருந்த கைகள் நழுவிச் சரிந்தன. அவளுக்குப் பின்னால் அனகை வந்து நின்றிருந்தாள்.

"அந்தி இருள் வந்து விட்டது தேவி"

"ஆம்" மோன லயிப்பில் இருந்து உள்ளம் மீளாத அழகிய சிரிப்புடன் தலையசைத்தாள். மீண்டும் திரும்பி முகம் உயர்த்தி பகலவனைப் பார்த்தாள். மேற்கு வானில் முகில்திரள் மட்டுமே தெரிந்தது. இவ்வளவு நேரம் அவளுடன் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவில்லை. ஒருநொடி முன்னர்தான் அவன் மறைந்திருக்கிறான் என்கிற உணர்வே அவளில் நிலைத்திருந்தது. அவள் உள்ளம் களிப்பிலிருந்து மீளவில்லை. அவள் கண்கள் மீண்டும் மீண்டும் முகில் திரைக்குப் பின் தேடின. குழந்தையென கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவே இல்லை. 

மீண்டும் அனகையின் பக்கம் திரும்பியபோது அவளறியாது ஒரு ஏக்கப் பெருமூச்சு அவளில் எழுந்து நெஞ்சை முட்டியது.. !!

"அழகனடி" என்றாள் மெல்லிய குரலில். 

"யார் தேவி?" லேசான வியப்புடன் கேட்டாள் அனகை. நிழல்போல எப்போதும் உடனிருக்கும் தான் அறியாத ஒரு அழகனை இவள் எப்போது பார்த்தாள் என்கிற திகைப்பை அடைந்திருந்தது அனகையின் முகம்.

"கதிரவன்"

"கதிரவன்.." மேற்கில் நோக்கியபின் மெல்லப் புன்னகைத்த அனகை "மறைந்து விட்டான் தேவி" என்றாள்.

"ஆம்.. ஆனால் இவ்வளவு நேரமும் என்னுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தான். நடந்து பழகிய ஒரு குழந்தை அப்போதுதான் தன் தாயிடமிருந்து மறைந்து விளையாடக் கற்றுக் கொள்வதைப் போல.." எனச் சொன்ன அவள் குரல் மிக மிக நெகிழ்ந்திருந்தது. அந்த நெகிழ்வு அவளின் உடல் முழுவதும் படர்ந்திருந்ததை உணர்ந்தாள். அவள் உணர்வுகள் என்றுமில்லாத நெகிழ்வை அடைந்திருந்தன.. !!

நதிக் கரையில் துளிர்த்துத் தழைத்திருக்கும் பசும் புற்களின் மீது கால் வைத்து நடந்தபோது அவள் கால்கள் தரையில் ஊன்றுவது போலவே இல்லை. தரையிலிருந்து சில அடிகள் மேலெழுந்து பறப்பதைப் போலவே இருந்தது.

அனகையுடன் பேசிச் செல்வதுகூட அவ்வளவு மகிழ்வையும் நெகிழ்வையும் தன் உள்ளத்துக்கு அளிக்கும் என்பதை அன்றுதான் அவள் உணர்ந்தாள். அவள் நெஞ்சமெல்லாம் மதுரமாய் இனிப்பது போலிருந்தது. அந்த இனிமையின் தித்திப்பில் லயித்தவளாகவே தன் குடில் இல்லத்துக்குத் திரும்பினாள் குந்தி.. !!

அந்த இனிமையின் தித்திப்பு அவளை விட்டு சிறிதும் அகலவே இல்லை. அவள் நெஞ்சிலேயே பல ஆண்டுகளாக உறைந்தது போல அவளில் நிறைந்திருந்தது. எங்கு நோக்கினும் எதைச் செய்திடினும் அந்த இனிமை ஒன்றே அவளை ஆட்கொண்டது. அவள் உணவுண்டு மஞ்சத்தறைக்குச் சென்றபோதும் அந்த இனிமையிலிருந்து அவளால் மீள முடியவேயில்லை. தித்திக்கும் மோன லயிப்பின் கனவுகளே அவளில் நிறைந்திருந்தன.. !!

மஞ்சம் அவளை அதே இனிமையுடன் அரவணைத்துக் கொண்டது. அவளின் மோன லயிப்புக் கனவுகளையோ நெஞ்சில் தேங்கியிருக்கும் இனிமை உணர்வையோ துளியும் கலைக்கவில்லை. மஞ்சத்தில் புரண்ட அவள் விழிகள் முற்றாகத் திறந்திருக்கவும் இல்லை. முழுதாக மூடியிருக்கவும் இல்லை. அரைக் கண் செருகிய விழிகள் மோனத்திலேயே லயித்திருந்தன. அந்த விழிகளில் கற்பனைகள் விரிந்தபடியே இருந்தன.. !!

நேரம் நெடும்பொழுதைத் தொட்டிருந்த போதுதான் அவள் விழிகள் மூடாமல் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருப்பதையே உணர்ந்தாள். அவள் விழிகள் சற்று களைத்து கனவுகள் கலைந்து தன்னுணர்வு மீண்டது போலிருந்தது. அப்பொழுதுதான் தன் உள்ளம், சூரியனை ஒரு கைக்குழந்தையென கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள் குந்தி.. !!

இவ்வளவு நேரமும் அவள் ஒரு தாயாகவே தன்னை எண்ணியிருந்தாள். சூரியனே அவளின் கைக் குழந்தையென்றாகியிருந்தான். சூரியனை அள்ளி எடுத்து, மார்போடணைத்து முத்தமிட்டாள். உயரத் தூக்கிச் சுழற்றி விளையாடிக் கொஞ்சினாள். சூரியனை நிதியில் குளிக்க வைத்து தலை துவட்டினாள். பட்டாடை உடுத்தி ஓடிப் பிடித்து விளையாடினாள். அவன் அழும் முன்பே அவனின் பசியை உணர்ந்து தன் முலையூட்டினாள். இன்னும் இன்னும்... எவ்வளவோ கற்பனைக் காட்சிகள் அவளில் எழுந்திருந்தன. அதெல்லாம் நீர்க்குமிழியென்றாகி சட்டென உடைந்து போனதை அப்போதே உணர்ந்தாள்.. !!


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக